இராக்கின் தலைநகர் பாக்தாதிலும் வடபுற நகரான மொசூலிலும் நடந்த இரு வெவ்வேறு கார் குண்டுத் தாக்குதல்களில், நாற்பது பேர் கொல்லப்பட்டதோடு, இருநூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஒன்றன் பின் ஒன்றாக சில நிமிட இடைவேளையில் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. மொசூலுக்கு அருகே நடந்த தாக்குதல், ஷியா இன சிறுபான்மை மக்கள் வாழும் ஒரு கிராமத்தில் பல வீடுகளை அழித்துள்ளது. பாக்தாதிலும், ஷியா பிரிவினர் வாழும் பகுதியே இவ்வாறு குறி வைத்து தாக்கப்பட்டுள்ளது.
இராக்கிய அமைச்சர் ஒருவர் இது குறித்து கருத்து வெளியிடும் போது, இது அல் கயீதாவின் கைவரிசை என்று குறிப்பிட்டுள்ளார். வன்முறைகள் அதிகரித்திருந்தும் கூட, அமெரிக்கப் படைகள் நகர் புறங்களிலிருந்து வெளியேறிய பின்னரும் தமது பாதுகாப்பை தம்மால் கவனிக்க முடியும் என்று இராக்கிய அரசாங்கம் அறிவித்துள்ளது.