ஜிம்பாப்வேயில் உள்ள பலவாயோ மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வங்கதேச-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அஷ்ரஃபுல் 103 ரன்கள் எடுத்து வங்கதேச அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தார்.
வெற்றி பெறத் தேவையான 208 ரன்களை எடுக்க களமிறங்கிய வங்கதேசம் தமீம் இக்பால், சித்திக் மூலம் 4 ஓவர்களில் 30 ரன்கள் என்ற அதிரடித் துவக்கத்தை பெற்றது. சித்திக் 12 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆனால் அதன் பிறகு ஜோடி சேர்ந்த அஷ்ரஃபுல்-தமீம் இணை 22 ஓவர்களில் 137 ரன்களைச் சேர்த்தனர். தமீம் இக்பால் 68 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தபோது வங்கதேசம் 25.4 ஓவர்களில் 167 ரன்கள் எடுத்து வெற்றிக்கு அருகில் வந்தது.
மொகமது அஷ்ரஃபுல் 102 பந்துகளில் 12 பவுண்டரிகள் 2 சிக்சர் சகிதம் தன் சதத்தை எட்டினார். மறு முனையில் ராகிபுல் ஹஸன் 11 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வங்கதேசம் 34.3 ஓவர்களில் 211/2 என்று அபார வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் தொடரில் வங்கதேசம் 1- 0 என்று முன்னிலை பெற்றுள்ளது.