ஆசிய கண்டத்து நாடுகளில், கணவன்மார் அல்லது காதலர்கள் பாதுகாப்பற்ற பாலியல் நடத்தையில் ஈடுபடுவதால் ஐம்பது மில்லியன் ஆசியப் பெண்களுக்கு எய்ட்ஸ் நோய் தொற்றும் பேரபாயம் இருப்பதாக எய்ட்ஸ் பரவல் பற்றிய அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.
இந்தோனீசிய நாட்டின் பாலி நகரில் நடந்த எச் ஐ வி- எய்ட்ஸ் மாநாட்டில் சமர்பிக்கப்பட்ட இந்த அறிக்கையின்படி ஆசிய கண்டத்து நாடுகளில், எச் ஐ வி கிருமிகளினால் பீடிக்கப்பட்ட 17 லட்சம் பெண்களில் 90 சதவீதமானவர்கள் அந்த நோயை தமது நீண்ட கால துணைவர்களிடமிருந்து தான் பெற்றார்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தப் பெண்களின் பலவீனத்துக்கு காரணமான சமுதாய நடத்தை, கொள்கை ஆகியன மாற வேண்டும் என்று ஐ நா மன்றத்தின் பெண்கள் எய்ட்ஸ் பிரிவின் பிராந்திய இயக்குநர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பிரச்சினை பற்றி இனிமேலும் அலட்சியம் காட்ட முடியாது என்றும் ஐ நா வின் எய்ட்ஸ் திட்ட அதிகாரி டாக்டர் பிரசாத் ராவ் கருத்து வெளியிட்டுள்ளார்.