காங்கேசன்துறை லங்கா சீமெந்துத் தொழிற்சாலையில் தற்போது சுமார் 38 ஆயிரம் மெற்றிக்தொன் கிளிங்கர் இருப்பதாகவும் இதனை அரைக்கும் பட்சத்தில் சுமார் 6 மாத காலத்துக்கு யாழ்.மாவட்டத்தின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்குமெனவும் லங்கா சீமெந்து நிறுவனப் பொறுப்பதிகாரி பி.விமலநாதன் தெரிவித்துள்ளார். சீமெந்துத் தொழிற்சாலையில் 19 வருடங்களுக்கு மேலாக இருப்பில் இருந்த கிளிங்கரின் மாதிரி பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டபோது அவை பாவிக்கக் கூடியதாக இருப்பதாகவும் அவற்றை அரைக்கும் இயந்திரத்தில் போட்டு அரைக்கும் பட்சத்தில் சுமார் 7 1/2 லட்சம் சீமெந்துப் பைக்கற்றுகள் பொதி செய்யலாமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லங்கா சீமெந்து நிறுவனத்தை அடுத்த வருட முற் பகுதியில் மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெறும் நிலையில் இந்த கிளிங்கர் அங்கிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.