ஜனா திபதித் தேர்தலையா பாராளுமன்றத் தேர்தலையா முதலில் நடத்துவது என்பது குறித்து அரசாங்கம் இதுவரை தீர்மானிக்கவில்லை. சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறே அது குறித்து முடிவு செய்யப்படும். ஆனால், ஐ. ம. சு. முன்னணி எந்தத் தேர்தலுக்கும் தயாராகவே உள்ளதென ஐ. ம. சு. முன்னணி தலைவர்கள் நேற்று (12) தெரிவித்தனர்.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டிலும் அரசாங்கம் 2/3 பெரும்பான்மை பலத்துடன் வெற்றியீட்டுமெனவும் ஊவா தேர்தல் முடிவு இதனை உறுதிப்படுத்துகிறது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
ஐ. ம. சு. முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (12) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியதாவது :-
சந்தர்ப்பத்திற்கு ஏற்ப ஜனாதிபதித் தேர்தலையா பாராளுமன்றத் தேர்தலையா முதலில் நடத்துவது என்பது குறித்து அரசாங்கம் முடிவு செய்யும். எந்தத் தேர்தல் நடத்தவும் நாம் தயாராகவே உள்ளோம். ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் நாம் 2/3 பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெறுவோம்.
யுத்த வெற்றி காரணமாக மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொண்டு வரும் பாரிய அபிவிருத்திகள் காரணமாகவுமே மக்கள் ஐ. ம. சு. முன்னணிக்கு வாக்களித்து வருகின்றனர். தமிழ், முஸ்லிம் மக்களும் அரசாங்கத்துடனேயே உள்ளனர்.
பாராளுமன்றத் தேர்தல் துரிதமாக நடத்தப்பட வேண்டுமென்றே விரும்புகிறோம் என்றார். இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் டளஸ் அழகப்பெரும, ஆரம்ப முதல் ஐ. தே. க. வே தேர்தல் நடத்துமாறு கோரி வருகிறது. கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் கூட ஐ. தே. க. பொதுத் தேர்தல் நடத்த வேண்டுமென கோரியது.
ஊவா மாகாண தேர்தல் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஐ. தே. க. செயலாளர், பாராளுமன்றத் தேர்தலில் அரசாங்கத்துக்கு நல்ல பாடம் புகட்டுவதாக கூறியுள்ளார். ஐ. தே. க. கோரும் எந்தத் தேர்தலையும் முதலில் நடத்தத் தயார் என ஜனாதிபதி கூறியுள்ளார் என்றார். இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மைத்திரிபால சிரிசேன.
ஊவா மாகாண மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான தமது நம்பிக்கையை வெளிக்காட்டியுள்ளனர். அரசியல் யாப்பின் பிரகாரம் எந்தக் கட்சிக்கும் 2/3 பெரும்பான்மை பெறமுடியாது என்ற கருத்தே இத்தனை காலமும் காணப்பட்டது. அந்த நிலைப்பாட்டை எமது அரசாங்கம் பொய்யாக்கியுள்ளது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் எமக்கு 2/3 பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
ஊவா மாகாண சபைத் தேர்தலில் 2/3 பெரும்பான்மை பலத்தை பெற்றுத் தந்தது போல பாராளுமன்றத் தேர்தலிலும் மக்கள் ஐ. ம. சு. முன்னணிக்கு 2/3 பெரும்பான்மை பலத்தை பெற்றுத் தருவது உறுதி. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் குறித்து மக்களுக்கு பூரண நம்பிக்கை உள்ளது என்றார். இங்கு அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த, தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவங்ச ஆகியோரும் உரையாற்றினர்.