பாடசா லைக்குச் செல்லாது வீதிகளில் கவனிப்பாரின்றி சுற்றித் திரியும் சிறுவர்களைத் தேடிக் கண்டு பிடிக்க பெண் பொலிஸார் ஈடுபடுத்தப்படுவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
பாடசாலை செல்லாதுள்ள அனைத்து சிறுவர்களையும் கண்டுபிடிக்குமாறு கொழும்பு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவ்வாறான சிறுவர்களை தேடிக்கண்டு பிடிக்கும் பெண் பொலிஸார் அவர்களை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வார்கள். இரவுவேளைகளில் சிறுவர்கள் பிடிக்கப்பட்டால் அவர்கள் நகரிலுள்ள பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.ஆனால் சிறுவர்கள் விளக்கமறியல் சிறைகளில் அடைத்து வைக்கப்பட மாட்டார்கள். பிடிக்கப்படும் சிறார்களின் பெற்றோரோ பாதுகாவலர்களோ கண்டுபடிக்கப்பட்டால் அவர்கள் அழைப்பாணை விடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவார்கள்.
இவ்வாறான சிறுவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு நீதிமன்றம் பணிக்கும். அக்குடும்பங்களிடம் அதற்கான பண வசதி இல்லாவிட்டால் அரசாங்கம் அதற்கான பொறுப்பை ஏற்கும். இலங்கையில் 14 வயது பூர்த்தியாகும் வரை அனைத்து சிறார்களும் பாடசாலைக் கல்வியை கட்டாயமாக பெறவேண்டும் என்பது சட்டமாகும் என்றும் அவர் கூறினார்