யாழ்ப் பாணத்திலிருந்து மதவாச்சி வரை ஆரம்பத்தில் நடத்தப்பட்ட யாழ் பஸ் சேவை வவுனியா வரையிலுமே இப்போது நடத்தப்படுகின்றது. பயணிகள் வவுனியா பஸ் நிலையத்தில் இறக்கிவிடப்படுகின்றார்கள்.
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கு 200 ரூபா மட்டுமே இப்போது கட்டணமாக அறவிடப்படுகின்றது. முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கென 475 ரூபா கட்டணமாக அறவிடப்பட்டு, பயணிகள் மதவாச்சி வரையில் கொண்டு சென்று இறக்கிவிடப்பட்டார்கள். எனினும் மதவாச்சியில் இருந்து இந்த பயணிகளுக்கான இணைப்பு பஸ் சேவைகள் சீராக இடம்பெறாத காரணத்தினாலும், பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் மதவாச்சியில் பஸ் வண்டிகள் ஒழுங்கு படுத்தப்படாத காரணத்தினாலும், இந்த பஸ் சேவை வவுனியா வரையில் மட்டுமே நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் காலை 11 அல்லது 11.30 மணிக்குப் புற்பபடும் பஸ் வண்டிகள் இராணுவத்தினரின் வழித்துணையுடன் தொடரணியாக வவுனியாவை பிற்பகல் 2 அல்லது 2.30 மணிக்கு வந்தடைகின்றன.
வவுனியா பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிடுகின்ற இந்த பஸ் வண்டிகள் வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள ரம்யா ஹவுஸ் இராணுவ சிவில் அலுவலகத்தில் யாழ்ப்பாணத்திற்கான பயணிகளை ஏற்றிக்கொண்டு மாலை 5 மணி அல்லது 6 மணிக்கு மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி இராணுவ பாதுகாப்புடன் தொடரணியாகப் புறப்பட்டுச் செல்கின்றன.