வவுனியா நகரின் இரண்டாம் குறுக்குத் தெருவில் கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தக் கூடியது என்று சந்தேகிக்கப்படும் 3 டைமர்களும், 3 ரிமோட் கண்ரோல்களும் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பொலிசாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து இவை கண்டுபிடிக்கப்பட்டு, படையினரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. தற்கொலைத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படுவது போன்ற அங்கியொன்றில் பொருத்தப்பட்ட நிலையில் இந்த டைமர்களும், ரிமோட் கண்ரோலர்களும் கழிவு நீர் செல்லும் வாய்க்காலில் போடப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து அவ்விடத்திற்குச் சென்ற பொலிஸார் அவ்விடத்தைச் சுற்றி வளைத்து, இரண்டாம் குறுக்குத் தெருவின் அப்பகுதி போக்குவரத்தைத் தடை செய்தனர்.
குண்டுகளைச் செயலிழக்கும் படையினர் வந்து இந்தப் பொருட்களை எடுத்துச் சென்றதன் பின்னர் இந்த வீதியின் ஊடான போக்குவரத்துத் தடை நீக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.