அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிடமாட்டார்: ரஞ்சித் அலுவிகார பா.உ.

ranil0111.jpgஎதிர் வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் எனவும், அத்தேர்தலில் எமது கட்சியின் சார்பில் போட்டியிடுபவர் குறித்து இறுதி நேரத்தில் மக்களுக்கு தெரிவிக்கப்படும் எனவும்  மாத்தளை மாவட்ட ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிகார கூறினார்.
 
கலேவெல பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராமங்கள் தோறும் அமைக்கப்பட்டுள்ள ஐ.தே.கட்சிக் கிளைகளை மறுசீரமைக்கும் திட்டத்தின் கீழ் கலேவெல நகரத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிலைப்படுத்தி அதில் வெற்றியை எதிர்பார்த்து அரசாங்கம் மக்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதென்பது அரசாங்கத்தின் சுலபமான காரியமாகாது.  ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. அத்தேர்தலில் எமது கட்சியின் சார்பில் போட்டியிடுபவர் தொடர்பாக இறுதி நேரத்தில் மக்களுக்கு தெரிவிக்கப்படும். இவ்வாறு மாத்தளை மாவட்ட ஐ.தே.கட்சியின் அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் அலுவிகார கூறினார்.

யுத்த வெற்றியைக் கொண்டாடியவாறு நாட்டின் பாரிய பல பிரச்சினைகளை மூடி மறைத்துக்கொண்டு தேர்தல்களை நடத்திவரும் ராஜபக்ஷ அரசாங்கம் தற்போது ரணவிரு உபஹார என்று இராணுவ வீரர்களை கௌரவிக்கும் வைபவங்களை பிரதேச செயலக மட்டங்களில் நடத்தி மக்களின் கவனத்தை அதன்பால் ஈர்க்க முயற்சித்து வருகின்றது.  தொடர்ந்து கிராம சேவகர் பிரிவுகள் தோறும் இத்தகைய இராணுவ வீரர்களைப் பாராட்டும் வைபவங்களை இன்னும் இரண்டொரு மாதங்களுக்கு அரசாங்கம் நடத்தும். அதன் பிறகுதான் நாட்டில் விஸ்வரூபமெடுத்து வரும் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படப் போகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் நடைபெறும் வரையில் இத்தகைய விழாக்களைக் கொண்டாடி மக்களது அன்றாடப் பொருளாதார பிரச்சினைகளுட்பட ஏனைய பிரச்சினைகளை மூடி மறைத்துக்கொள்ள அரசாங்கம் முயல்கின்றது.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிபந்தனைகளுடனான பாரிய கடன்தொகையை அரசாங்கம் கட்டம் கட்டமாகப் பெறுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன. இவற்றை எவ்வாறு எந்தெந்தத்துறைகளில் செலவிட வேண்டும் போன்ற நிபந்தனைகள் பலவும் உள்ளன. இப்பாரிய கடன்தொகையை மீளவும் செலுத்த முடியாத நிலையில் நாட்டில் வரிச்சுமைகள் அதிகரிக்கும். தனியார் மயமாக்கல் அதிகரிக்கும். எனவே, டிசம்பர் மாத ஜனாதிபதித் தேர்தலை நோக்கிச் செல்லும் அரசாங்கத்தின் வங்குரோத்து நிலைமை நாம் நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *