வேலைவாய்ப்பு பணியகம் முன்னால் போலி வெளிநாட்டு முகவர் நிலையம் – பெண் உட்பட பலர் கைது பஜரோ வாகனமும் கைப்பற்றப்பட்டது

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு முன்னால் சிறிய கடையொன்றுக்குள் நடத்தப்பட்டு வந்த போலி வெளிநாட்டு முகவர் நிலையம் நேற்று பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டது.

இப் போலி வெளிநாட்டு முகவர் நிலையத்தை நடத்திவந்த பெண் ஒருவரும் பலரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். புதிய ரகபஜரோ வாகனமொன்றையும் பொலிஸார் கைப்பற்றியிருப்பதாகவும் பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க கூறினார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு முன்பாகவிருக்கும் சிறிய கடையொன்றுக்குள் வைத்து கும்பலொன்று நீண்ட காலமாக போலி முகவர் நிலையமொன்றை நடத்தி வந்துள்ளது. பணியகத்தின் கீழ் தாங்கள் செயற்பட்டு வருவதாகக் கூறி, மக்களை ஏமாற்றி இந்தக் குழு பணம் பறித்து வந்துள்ளது.

நேற்றைய தினம் சுமார் 50 பேர் வரையில் இந்த சிறிய கடைக்கு முன்பாக சூழ இருந்துள்ளனர். கூட்டத்துக்கான காரணத்தை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் தேடிப் பார்த்தபோதே சந்தேக நபர்கள் கையும் மெய்யுமாக பிடிபட்டனர். பிறேசிலில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பெற்றிருந்த 50 பேரினதும் பெயர்கள் பணியகத்தில் பதிவுசெய்யப்பட வேண்டுமெனக் கூறியே நேற்று அவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்படும்வேளை அவர்களிடம் 50 இலட்சம் ரூபா பணம் இருந்ததாகவும் பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க கூறினார். போலி முகவர் நிலையத்தினால் ஏமாற்றப்பட்ட 50 பேரும் பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். இதன்போது அவர்கள் ஒவ்வொருவரும் பிறேசிலில் வேலை பெற்றுக்கொள்வதற்காக குறித்த முகவர் நிலையத்துக்கு ஒரு இலட்சத்து 65 ஆயிரம் ரூபா வீதம் வழங்கியிருப்பதாக கூறியுள்ளனர். பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *