10 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வியாழக்கிழமை இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கெக்கிராவ பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இவர் காதல் ஜோடியிடம் இருந்து இதனை வாங்கும் போதே கைது செய்யப்பட்டார்.
சில தினங்களுக்கு முன்னர் இந்தக் காதல் ஜோடி கலாஓயா குளக்கட்டில் தனிமையில் இருந்து உரையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இந்தப் பொலிஸ் கான்ஸ்டபிள் அவர்களின் அடையாள அட்டைகளைப் பார்த்துவிட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவ்வாறு செய்யாதிருக்க 15 ஆயிரம் ரூபாவை அன்பளிப்பாகத்தர வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
தம்மால் 15 ஆயிரம் ரூபாவைத் தர வசதியில்லை எனவும் 10 ஆயிரம் ரூபாவை தருவதாகவும் அந்த இளைஞனும் யுவதியும் தெரிவித்தனர்.
இதனையடுத்து இளைஞனின் வாகன அனுமதிப்பத்திரம், மோட்டார் சைக்கிள் அனுமதிப்பத்திரம் என்பனவற்றைப் பெற்றுக் கொண்டு 10 ஆயிரம் ரூபாவைத் தந்துவிட்டு அவற்றை மீளப்பெறுமாறும் பொலிஸ் கான்ஸ்டபிள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அந்த இளைஞனும் யுவதியும் இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்கு முறையிட்டிருந்தனர். ஆணைக்குழுவின் ஆலோசனையின்படி இளைஞனும் யுவதியும் நேற்று வியாழக்கிழமை கெக்கிராவ நகரில் வைத்து அந்தப் பொலிஸ் கான்ஸ்டபிளிடம் 10 ஆயிரம் ரூபாவைக் கொடுத்தனர்.
அங்கு ஏற்கனவே மறைந்து நின்ற இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் அந்தக் கான்ஸ்டபிளை கையும் மெய்யுமாகப் பிடித்தனர்.