இந்திய வம்சாவளி இலங்கைப் பிரஜைகளின் கல்வி நிலை மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் மாநாடு எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெறுகின்றது. இதனை வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளி பிரஜைகளின் சர்வதேச அமைப்பான ‘கோபியோ’ ஏற்பாடு செய்துள்ளது.
ஐந்து அமர்வுகளாக நடைபெறும் கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வு எம். மாணிக்கவாசகம் தலைமையில் நடைபெறும். இவ் ஆரம்ப நிகழ்வில் ‘கருத்தரங்கின் குறிக்கோளும் அடிப்படை வசதிகளும்’ எனும் தலைப்பில் கோபியோவின் சர்வதேசத் தலைவர் பி. பி. தேவராஜ் உரையாற்றுவார். முதலாவது அமர்வு குமார் நடேசன் தலைமையில் நடைபெறும். இந்நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழக கல்வித்துறைத் தலைவர் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் ‘அறிவுப் பொருளாதார வளர்ச்சிக்கு கல்வியின் முக்கியத்துவம்’ எனும் தலைப்பில் உரையாற்றுவார்.
இரண்டாவது அமர்வு தெ. ஈஸ்வரன் தலைமையில் நடைபெறும். இந்நிகழ்வில் பெருந் தோட்டப் பகுதிகளில் இந்திய வம்சாவழி இலங்கை பிரஜைகளின் தற்போதைய கல்வி நிலை குறித்து மத்திய மாகாண கல்வி அமைச்சு அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை மத்திய மாகாண அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் சமர்ப்பிப்பார். அத்துடன் என். வாமதேவன் ‘பெருந்தோட்ட சமூகத்திற்கு கல்வியுடன் கூடிய தேசிய சமூக அபிவிருத்தித் திட்டமும் நடவடிக்கை யும்’ எனும் தலைப்பில் உரையாற்றுவார்.
ராஜு சிவராமன் தலைமையில் நடைபெறும் மூன்றாவது அமர்வில் கல்விப் பிரச்சினைகள் குறித்து ஆழமாக குழுநிலையில் ஆராயப்படும். அத்துடன் ‘முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலைக் கல்வி’ எனும் தலைப்பில் சி. நவரட்ண உரையாற்றுவார். ரி. தனராஜ் ‘கல்வியாளர்களுக்கான முகாமைத்துவ தொழில்சார் அபிவிருத்தி’ எனும் தலைப்பில் உரையாற்றுவார். பேராசிரியர் எம். எஸ். மூக்கையா தலைமையில் பேராசிரியர் எம். சின்னத்தம்பி, டாக்டர். ஏ. எஸ். சந்ரபோஸ் ஆகியோர் கலந்துகொள்ளும் ‘மூன்றாம் நிலைக் கல்வி’ தொடர்பான குழுநிலைக் கலந்துரையாடலும் இடம்பெறும்.
நான்காவது அமர்வு டாக்டர். எஸ். செளலா தலைமையில் நடைபெறும். இந்நிகழ்வில் தொழில்நுட்ப தொழிற்பயிற்சி அமைச்சர் பி. இராதாகிருஷ்ணன் ‘தொழில் மற்றும் தொழில்நுட்ப பயிற்சித் துறையிலுள்ள வசதி வாய்ப்புக்கள்’ எனும் தலைப்பில் உரையாற்றுவார்.
ஐந்தாவது அமர்வு எம். முத்துசாமி தலைமையில் இடம்பெறும். இந்நிகழ்வில் இந்திய தூதரகத்தின் முதலாவது செயலாளர் ஆர். ஸ்ரீவஸ்தவா கலந்துகொண்டு உரையாற்றுவார். அத்துடன் ஏ.கே. சுப்பையா மற்றும் ஆர். விஜயலிங்கம் ஆகியோர் கலந்துகொள்ளும் கருத்தாடலும் இடம்பெறும்.