கலாபூஷண விருதுக்கு தெரிவானவருக்கு இன்னமும் பணம், சான்றிதழ் இல்லை

கடந்த வருடம் (2008) கலாபூஷணம் விருதுக்கென கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட சமய,சமூக சேவையாளரான நாகலிங்கம் வியாக்கிரத பாதர் என்பவருக்கு விருதுக்குரிய பணமும் சான்றிதழும் வழங்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் நடத்திய கலாபூஷணம் விருது வழங்கும் நிகழ்வில் யுத்த நிலைமை காரணமாக அவரால் கலந்து கொள்ள முடியாது போய்விட்டது. இவ்வருடம் ஜனவரி 6 ஆம் திகதி கிளிநொச்சி செயலகத்தில் இவ்விருது வழங்கப்படுமென அரச அதிபர் அறிவித்திருந்த போதும் இடம்பெயர்வு காரணமாக அவ்வேளையிலும் அவரால் விருதைப்பெற்றுக்கொள்ள முடியவில்லை.

செட்டிக்குளம் முகாமில் தங்கியிருந்த இவர் தற்போது வவுனியா தோணிக்கல்லில் தங்கியிருக்கும் நிலையில் வவுனியாவில் இயங்கும் கிளிநொச்சி அரச அதிபர் அலுவலகத்தில் விருதைக் கோரியபோது அதற்குரிய ஆவணங்கள் தம்மிடம் இல்லையென்றும் அவற்றை கிளிநொச்சி தர்மபுரத்தில் விட்டுவிட்டு வந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் மற்றும் இடம்பெயர்வு காரணமாக மிகவும் வறுமை நிலையில் இருக்கும் இம்முதியவர் தன் நிலை கருதி தனது விருதையும் பணத்தையும் சான்றிதழையும் வழங்கி உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *