நாட்டில் இன்று பொலிஸ் அடக்குமுறை தலைவிரித்தாடத் தொடங்கியிருப்பதாக கடும் கண்டனத்தை வெளியிட்டிருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, அடுத்தடுத்து மாணவர்களும், இளைஞர்களும் பொலிஸ் அடாவடித் தனத்துக்குள்ளாக்கப் பட்டுவருவதாகவும் விசனம் தெரிவித்தது. பொலிஸ் தலைமையகமும் பிராந்திய பொலிஸ் உயரதிகாரிகளும் முன்னுக்குப்பின் முரணான அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் செய்தியாளர் மாநாட்டில் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
பயங்கரவாதம் நாட்டில் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் அமைதியும் சுமுக நிலையும் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் உள்நாட்டிலும் சர்வதேசமட்டத்திலும் பிரசாரம் செய்துவரும் அரசாங்கம், மறுபுறத்தில் தமக்கு எதிரானவர்களை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளை மறைமுகமாக முன்னெடுத்துள்ளதை காணமுடிகிறது. மிகமோசமாக மனித உரிமை மீறப்படும் நாடாக இலங்கை மாறிவருகிறது. மன்னாரிலிருந்து குண்டு நிரப்பிய வாகனம் வந்ததாகவும் அதனை ஒரு உயர் பொலிஸ் அதிகாரி கண்டுபிடித்ததாகவும் பொலிஸ் தலைமையகமும் பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகரவும் தெரிவித்துள்ளனர். மறுபுறத்தில் வட பிராந்திய பொலிஸ் அத்தியட்சர் நிமல் லெவ்கே அப்படியொரு வாகனம் வந்தமைக்கான ஆதாரமெதுவுமே கிடையாதென பகிரங்கமாகவே அறிவித்துள்ளார். இதுவொரு நாடகமாகவே இன்று காணப்படுகிறது.
இந்த விவகாரத்தோடு சம்பந்தப்பட்ட பொலிஸ் உயரதிகாரியும் அவரது மனைவியும் மகனும் மாலபேயிலுள்ள தகவல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் நிபுண ராமநாயக்க மீது மேற்கொண்ட அடாவடித்தனமான செயல்கள் தொடர்பில் அரசாங்கமோ பொலிஸ் தலைமையகமோ இன்று வரையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனை மூடி மறைப்பதற்காகவே இந்த குண்டு வாகன விவகாரத்தை பெரிதுபடுத்திக்காட்ட முனைகின்றனர்
இதற்கிடையில் கம்பஹா மாவட்டத்தில் சேவைபுரியும் பொலிஸ் அத்தியட்சர் ஒருவர் புலிகளுடன் தொடர்பிருந்ததாகவும் புலிகளிடமிருந்து அவருக்குப் பெரும் தொகை நிதி கைமாறப்பட்டிருப்பதாகவும் தெரியவந்ததையடுத்து அந்த அத்தியட்சர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கை பேணவேண்டிய பாதுகாப்புத் தரப்பினரே அவை மீறப்படுவதற்கு துணை போயிருப்பது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.
இது இவ்விதமிருக்க, அங்குலானையில் இரு இளைஞர்கள் பொலிஸ் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்ததையடுத்து அப்பகுதி யுத்தகளமாக மாறியுள்ளது. மாலையில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை பெற்றோர்கள் பார்க்கச் சென்றபோது காலையில் வருமாறு அங்குலான பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலையில் போனபோது மொரட்டுவ, அல்லது கல்கிஸை பொலிஸில் போய்ப்பார்க்கும் படி கூறியுள்ளனர். இதற்கிடையில் அந்த இளைஞர்கள் இருவரும் லுனாவை பாலத்திற்கருகில் சடலங்களாக போடப்பட்டிருப்பது தெரியவந்ததையடுத்தே பிரதேச மக்கள் ஆத்திரமடைந்து பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதுபோன்ற மோசமான, கண்டிக்கத்தக்க வெறியாட்டத்தை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இதன் பின்னணியில் பெரும் அரசியல் சக்தி ஒன்று காணப்படுவதாக பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. நாட்டில் இன்று ஜனநாயகம் காணப்படவில்லை. பொலிஸ் அதிகார இராஜ்ஜியமொன்று படிப்படியாக உருவாகிவருகிறது. இந்த நிலை தொடருமானால் நாட்டில் அராஜகமும் படுகொலைகளும் வீதிக்கு வீதி இடம்பெறலாம் என்ற அச்சம் தலைதூக்கியுள்ளது.
இத்தகைய வெறியாட்டங்களை அரசு கண்டுகொள்ளாமல் இருக்கின்றது. ஜனநாயகமும் மனித உரிமைகளும் சுதந்திரமும் முற்று முழுதாகக் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
2002 இல் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவை அமைத்ததன் மூலம் சட்டம், ஒழுங்கு சீராகப் பேணப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு பதவிக்கு வந்த பின்னர் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு நியமிக்கப்படவில்லை. சுயாதீன ஆணைக்குழு இருந்தால் இன்று நடக்கும் எத்தகைய அடாவடித்தனமும் இடம்பெற்றிருக்காது. அரசாங்கம் தொடர்ந்தும் இவ்விடயத்தில் மௌனப் போக்கைக் கடைப்பிடித்தால் நாடு மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடலாம். தவறிழைத்தவர்களை, குற்றவாளிகளை உடனடியாகச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் சட்டத்தைக் கையிலெடுக்கும் நிலைமை உருவாவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது போகலாம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது.