முன்னாள் புலி உறுப்பனர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக மேலும் ஐந்து புனர்வாழ்வு நிலையங்களை அமைக்க நடவடிககை எடுத்துள்ளதாக நீதி மற்றும் நீதி மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்தது. சுமார் 10 ஆயிரம் முன்னாள் புலி உறுப்பனர்களுக்கு தற்பொழுது புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு மட்டங்களில் இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருவதோடு, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொழில் தொழிற்பயிற்சி அளிக்கவும், சிறுவர்களுக்கு கல்வி வசதி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு உயரதிகாரி ஒருவர் கூறினார்.
அம்பேபுஸ்ஸ புனர்வாழ்வு நிலையத்தில் 12 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட 106 சிறுவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுகிறது. இவர்களில் 55 சிறுவர்கள் 5-6 வருடங்களுக்கு மேலாக தமது பெற்றோரை கண்டதில்லை எனவும், இவர்களுக்கு தமது பெற்றோரை
சந்திக்க அண்மையில் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது. 12 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட 455 சிறுவர்களும் 1,700 பெண்களும் பல்வேறு புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு பெற்று வருகின்றனர்.
நீதி நீதிமறுசீரமைப்பு அமைச்சின் பங்களிப்புடன் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயாரத்நாயக்க முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.
முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதோடு, புதிய புனர்வாழ்வு நிலையங்களை நிர்மாணிக்கும் பணிகளை இந்த மாதத்தினுள் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சு அதிகாரி தெரிவித்தார்.