நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா லக்ஷபானா தோட்டத்தைச் சேர்ந்த இருயுவதிகள் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், 16, 17 வயதுடைய இந்தப் பெண்களை வேலைக்கு அமர்த்தியமை உரிமை மீறல் என்றும் இது தொடர்பாக சிறுவர் உரிமை மீறல் வழக்கைத் தாக்கல் செய்யப் போவதாகவும் கண்டி மனித அபிவிருத்தி தாபனம் தெரிவித்துள்ளது.
கொழும்பு பௌத்தாலோகா மாவத்தையிலுள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து நேற்றுமுன்தினம் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்ட இரு யுவதிகளின் பெற்றோர்களைக் கண்டி மனித அபிவிருத்தித் தாபன பணிப்பாளர் பி.பி.சிவப்பிரகாசம் நேரில் சந்தித்து விபரங்களைத் திரட்டியுள்ளார்.
மேலும் அதே தோட்டப் பிரிவின் இன்னும் 30 யுவதிகள் இவ்வாறு கொழும்பில் பணிப்பெண்களாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் இவர்களை வேலையில் அமர்த்தியுள்ளோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள சகல விபரங்களையும் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் உயிரிழந்த மேற்படி இரு யுவதிகளுக்காக இன்று சிறுவர் உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதற்கென அத்தோட்டப் பிரிவில் குழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளதுடன், அந்தக் குழுவினர் கிராம சேவையாளர் சமூக உத்தியோகத்தர், தோட்ட குடும்ப நல உத்தியோகத்தர்களிடம் இந்த யுவதிகள் தொடர்பான விபரங்களைத் திரட்டுமாறும் அவர் கேட்டுள்ளார்.