தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளில் ஒன்றான “பவ்ரல்’ அமைப்பின் ஸ்தாபக தலைவரான கிங்ஸ்லி ரொட்றிகோ நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது 55 ஆவது வயதில் காலமானார். கிங்ஸ்லி ரொட்றிகோ மாரடைப்பு காரணமாகவே காலமானதாக அவரது குடும்பத்தை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனந்தாக் கல்லூரியின் பழைய மாணவரான கிங்ஸ்லி ரொட்றிகோ பட்டதாரியும் ஆவார். இவர் சமூகப் பணியாளராவதற்கு முன்னர் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்ததுடன் சந்தைப்படுத்தல் துறையில் சிறப்பு வாய்ந்தவராகவும் இருந்திருக்கிறார்.
ரொட்றிகோ நேற்று காலமாவதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே சுகயீனமுற்றிருந்தார். அன்னாரது பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக மாலபே, மிஹிந்து மாவத்தையிலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் இறுதிக் கிரியைகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.