வியாபார விசா இன்றி மட்டக்களப்பு நகர பிரதேசத்தில் தங்கியிருந்து புடைவை வியாபாரத்தில் ஈடுபட்ட இந்திய வியாபாரிகள் 7 பேரையும் இன்று குற்றவாளியாகத் தீர்மானித்த மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் எச்சரிக்கையுடன் விடுதலை செய்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த கருப்பையா ராமசாமி, மாரியப்பன் ராமகிருஸ்ணன், மாரியப்பன் சின்ன சுப்பையா, சின்னவேல் சுப்பையா, ராமு சுப்பிரமணியம், ராஜகோபால் ஜீவானந்தம், சாந்தப்பன் முருகன் ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பு நகரிலுள்ள விடுதியொன்றில் வைத்துக் கைது செய்யப்பட்டு இன்று வரை இவர்கள் 7 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். சுற்றுலாப் பயணிகளுக்கான விசா பெற்று நாட்டுக்குள் நுழைந்து சட்ட விரோதமான முறையில் புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டதாகப் பொலிசாரால் மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இன்று மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி வீ.இராமக்கமலன் முன்னிலையில் மீண்டும் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது, இவர்களைக் குற்றவாளியாகக் கண்ட நீதிபதி தலா ரூபா 2000 அபராதம் விதித்து, வியாபார விசா இன்றி வியாபாரத்தில் ஈடுபடக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் விடுதலை செய்தார்.
சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஒரு தொகுதி புடைவைகளை அவர்களிடமே ஒப்படைக்குமாறும் பொலிசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தில் சுமார் 500 இற்கும் மேற்பட்ட இந்திய வியாபாரிகள் கடந்த 5 வருடங்களாக வீடுவீடாகவும் காரியாலயங்கள் தோறும் சென்று புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். எனினும், கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட முதலாவது சம்பவம் இதுவாகும்.