கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் இரு தமிழ் யுவதிகளின் மரணத்திற்கான காரணம் தொடர்பாக முழுமையாக விசாரணை செய்து உண்மை நிலையினை வெளிக் கொணர வேண்டும் என்று நீதி சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வீ.புத்திரசிகாமணி கேட்டுள்ளார்.
இவ்விரு தமிழ் யுவதிகளின் மர்மமான மரணம் தொடர்பாக மேல் மாகாணப் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,
அப்பாவி தமிழ் யுவதிகள் உழைப்பதற்கென்று இப்படி வருகின்றபோது அவர்களது பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாத நிலையில் இருப்பது கவலைக்குரியது. கறுவாக்காட்டு பொலிஸார் காலம் தாழ்த்தாது இவர்களது மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டறிய வேண்டும்.
வறுமைக்காக ஏழை பெற்றோர்கள் வீட்டு வேலைக்கு அனுப்பினார்கள். இப்படி மர்மமான மரணம் எமது இளைஞர், யுவதிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்தவித தராதரம் பார்க்காமல் மரணமான யுவதிகள் சேவை செய்த வீட்டின் உரிமையாளர்கள் பூரண விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
அச்சமின்றி வாழும் ஒரு சூழலை உருவாக்குவதில் பொலிஸாரின் பங்கு மிக முக்கியமானது. மலையக இளைஞர், யுவதிகள் ஆயிரக்கணக்கானோர் கொழும்பில் தொழில் நிமித்தம் வந்துள்ளனர்.
இத்தகைய கொடூர சம்பவங்களும் அவர்களது உடல்கள் கிடந்த இடங்களை பார்க்கும்போது அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஜீவராணி, சுமதி இருவரின் மரணத்தை விசாரிக்குமாறு அமைச்சர் பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கேட்டுள்ளார்.