மடுத் திருவிழாவிற்குச் சென்று விட்டு தமது இருப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்லும் வழியில் சீகிரியா குன்றில் ஏறுவதற்குச் சென்ற மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சீகிரியாவிற்குச் சென்ற பெருமளவிலான மக்களே இவ்வாறு ஏமாற்றமடைய நேரிட்டது.
சனிக்கிழமை பிற்பகல் நேரத்தில் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் சீகிரியா குன்றுக்குச் சென்று ஏறிய வேளையில் குளவிகள் கொட்டி 48 பேர் காயமடைந்த நிலையில், சீகிரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் பத்துப்பேர் மேலதிக சிகிச்சைகளின் பொருட்டு தம்புள்ள ஆதார வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்டிருந்தனர்.
சனிக்கிழமை நான்காவது தடவையாகவும் இவ்வாறு உல்லாசப் பயணிகளைக் குளவிகள் கொட்டி காயப்படுத்தியதைத் தொடர்ந்து சீகிரியா குன்றின் இடை நடுவில் அமைந்துள்ள சங்கபாதம் வரையிலான பிரதேசத்திற்கு மாத்திரமே அனுமதிக்கப்பட்டதுடன், குன்றின் மேற்தளத்திற்கு ஏறுவது சுற்றுலாப் பயணிகளுக்கு நேற்று முன்தினம் முதல்தடை செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமை குளவிகளால் கொட்டப்பட்டு காயத்திற்குள்ளானவர்களில் 9 சிறுவர்களும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் அடங்குவதாகவும் இவர்கள் களுத்துறை, கல்முனை, வத்தளை, கிரிபத்கொட மற்றும் நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் சீகிரியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குளவியிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட வேண்டியிருந்த போதிலும் குறித்த உத்தியோகத்தர்கள் சம்பவ தினம் விடுமுறையில் சென்றிருந்ததால் பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்படவில்லை எனவும் கலாசார முக்கோண மத்திய நிலையப்பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை சிகிரியா குன்றின் உச்சியில் குளவிகளின் தாக்குதலுக்கு அஞ்சி அங்குள்ள சேறுநிறைந்த நீர்த்தடாகத்தினுள் 3 மணிநேரம் சுமார் 15 பேர் வரை குந்தியிருக்க நேர்ந்ததாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்ததுடன், சிகிரிய கலாசார முக்கோண நிதிய ஊழியர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களால் தமக்கு எவ்வித உதவிகளும் பாதுகாப்பும் இல்லை எனவும் பயணிகள் விசனம் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து சீகிரியா குன்றின் சிங்கபாதத்தைத் தாண்டி மேலே செல்வதை தற்காலிகமாக தடை செய்யத் தீர்மானித்ததாக சீகிரியா கலாசார முக்கோண மத்திய நிலைய முகாமையாளர் சுமேத கருணாரத்ன தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும் காலங்களில் பாதுகாப்பு அங்கிகளை அணியாது எவரும் சீகிரியா குன்றிலேறுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.