‘எவ்வித வினாத்தாள்களும் முன்கூட்டியே வெளியாகவில்லை’ கல்வியமைச்சர் சபையில் அறிவிப்பு

susil_premajayant000.jpgஉயர்தரப் பரீட்சை தொடர்பான எந்த ஒரு வினாத்தாளும் முன்கூட்டி வெளியாகவில்லை எனவும், அது தொடர்பாக வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் நேற்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். க.பொ.த. உயர் தரப் பரீட்சை வினாத்தாள் வெளியானதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக பரீட்சைத் திணைக்களமும் பொலிஸ¤ம் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வினாத்தாள் வெளியானதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட கல்வி அமைச்சர் மேலும் கூறியதாவது:- உயிரியல் விஞ்ஞான பாட வினாத்தாள் முன்கூட்டி வெளியாகவில்லையென பரீட்சை ஆணையாளர் எழுத்து மூலம் கல்வி அமைச்சிற்கு அறிவித்துள்ளார். ஆனால் மேற்படி குற்றச்சாட்டு தொடர்பாக பரீட்சை சட்டத்திற்கு அமைவாக விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். சில ஊடகங்கள் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திகள் தவறானதாகும். பெளதீகவியல் பாட வினாக்களை முன்கூட்டி வெளியிட்டதாக கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியருக்கு எதிராகவும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கம்பஹா தக்சிலா வித்தியாலய மாணவர்கள் மூவருக்கு தவணைப் பரீட்சையில் பெளதீகவியல் பாட வினாத்தாள்கள் கிடைக்கவில்லை என்ற சம்பவம் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படுகிறது. மூன்று வினாத்தாள்கள் குறைவாக அனுப்பப்பட்டதாலே இந்தப் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் துரிதமாக அவர்களுக்கு வினாத்தாள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பரீட்சை தாமதமின்றி நடத்த ஒழுங்குகள் செய்யப்பட்டது என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜே.வி.பி. எம்.பி. அநுரகுமார திஸாநாயக்க கூறியதாவது, பெளதீகவியல் வினாத்தாள்களன்றி சில வினாக்களே வெளியாகியுள்ளன. தனியார் வகுப்பு நடத்தும் ஆசிரியர் ஒருவர் பெளதீகவியல் பாட வினாத்தாளில் உள்ள ஆறு வினாக்களை மாணவர்களுக்கு தபால் மூலம் அனுப்பியுள்ளார். கம்பஹா தக்சிலா வித்தியாலய தவணைப் பரீட்சையில் 3 மாணவர்களுக்கு பெளதீகவியல் பாட வினாத்தாள்கள் கிடைக்காததாலும் பிரச்சினை ஏற்பட்டது என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • indiran.raja
    indiran.raja

    சிங்கள பௌத்தம் மகிந்த குடும்பத்தினரால் இலங்கையின் அனைத்துத் துறைகளிலும் தனது பாசிசச் சிந்தனைகளை விதைத்து வருகிறது. இன்று நடைபெற்ற நாடு தழுவிய அளவில் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தமிழ்ப் பேசும் மக்களுக்கெதிரான வினாக்கள் இடம்பெற்றிருந்தன. அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்த இவ்வினாக்கள் வருமாறு.

    1. வடக்கில் மேற்கொள்ளப்பட்ட மனிதநேய நடவடிக்கையின்போது இலங்கை அரச பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்ட புலிப் பயங்கரவாதிகள் சேகரித்திருந்த போர் தளபாடங்கள், அவர்கள் கற்பனை செய்திருந்த ஈழ இராச்சியத்தைக் கட்டியெழுப்பும் நோக்கத்தை மீறிய வேறுவிதமான நோக்கங்களாகக் காணப்பட்டதாக சிலர் அனுமானித்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விடயம் தொடர்பான உங்களின் பார்வையை உள்ளடக்கி கட்டுரை ஒன்றை எழுதுக.

    2. இலங்கையின் அரச சார்பற்ற சில அமைப்புகளின் செயற்பாடுகள் நாட்டின் இறையாண்மை, அமைதி, கலாசாரம் மாத்திரமல்லாது அபிவிருத்திக்கும் பாதிப்பக்களை ஏற்படுத்தியிருப்பதாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதுகுறித்து உங்களின்
    நிலைப்பாட்டை காரணங்களுடன் விளக்கிக் கட்டுரையொன்றை எழுதுக.

    ஆகிய இரண்டு வினாக்கள், நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் சிங்களம்-2 வினாத்தாளில் இடம்பெற்றிருந்ததுடன் இந்த வினாக்களுக்கு 25 புள்ளிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.??…

    இனிஒரு.கொம்

    Reply