கலேவெல ஸ்ரீமுத்துமாரியம்மன் காணி அபகரிப்பு பிரச்சினை ஜனாதிபதியூடாக தீர்த்து வைப்பு

கலேவெல ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் மற்றும் அது அமைந்துள்ள காணி தொடர்பாக நீண்ட காலமாக இருந்து வந்த இழுபறி நிலை முடிவிற்கு வந்திருப்பதாக மாத்தளை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் மாயழகு சசீகரன் தெரிவித்தார்.
ஆரம்ப காலத்தில் இக்கோவிலுக்கென 53 பேர்ச்சஸ் காணி இருந்த போதிலும் காலப்போக்கில் சில தீய சக்திகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் காரணமாக கோவிலும் கோவிலுக்கான காணியும் அபகரிக்கப்பட்டு மூன்று பேர்ச்சஸில் கோவில் பகுதி மாத்திரம் தான் எஞ்சுகின்ற நிலை உருவானது.

இந்நிலையில் இக்கோவில் தொடர்பாக கோவில் நிர்வாகம் மாயழகு சசீகரனின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் முறையிட்டுள்ளார். அதன் பலனாக சுமுகநிலை தோன்றும் அறிகுறிகள் தென்பட்டதாக கலேவெலஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்தது.

கலேவெல ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்திற்கு 32 பேர்ச்சஸ் நிலத்தைக் கையளிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மாத்தளை மாவட்ட செயலாளர் காமினி செனவிரத்னவிற்கு பணிப்புரை வழங்கியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து கலேவெல பிரதேச செயலாளர் பீ.ஏ.யூ. வீரசிங்க மாயழகு சசீகரனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கலேவெல ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்திற்கு 32 பேர்ச்சஸ் காணி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் காணி அளவீடு செய்யும் நடவடிக்கைகள் அரச நில அளவையாளரால் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.

1958,1977 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற வன்செயல் சம்பவங்களின் போது கலேவெல ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டும் சிலைகள் திருடப்பட்டும் சூறையாடப்பட்டும் சின்னா பின்னமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *