யாழ் மாவட்ட உயர்பாதுகாப்பு வலயங்களில் விரைவில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. யாழ் மாவட்டத்தில் மக்களை மீள் குடியேற்றுவதற்காக இனம் காணப்பட்ட பிரதேசங்களின் விபரங்களை உடனடியாக யாழ் அரசாங்க அதிபரிடம் சமர்ப்பிக்குமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி யாழ் படை அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
யாழ் மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை படிப்படியாக மீளக் குடியமர்த்துவது தொடர்பாக கடந்த 13 ஆம் திகதி படை அதிகாரிகளுடன் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி கலந்துரையாடினார்.
இதேவேளை, மணற்காடு உட்பட உயர்பாதுகாப்பு வலயமாகவுள்ள பிரதேசங்களில் மக்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பான விபரங்களை இன்னும்சில தினங்களில் வெளியிடப்படவுள்ளதாக யாழ் செயலக வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீள் குடியேற்றப்படும் மக்களின் வதிவிடங்கள் அடையாளம் காணப்பட்டு, கண்ணிவெடி அகற்றப்பட்டமைக்கான உத்தரவாதப் பத்திரம் யாழ் மாவட்ட செயலகத்தின் கண்ணிவெடி அகற்றல் பிரிவினரால் வழங்கப்பட்ட பின்னரே மீள் குடியேற்றத்திற்கான இறுதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென யாழ் மாவட்ட செயலக வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.