ஆப்கானிஸ்தானில் இன்று ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்றது. தலிபான்களின் ஆட்சி அகற்றப்பட்ட பின்னர் நடைபெறும் இரண்டாவது தேர்தல் இதுவாகும். ஜனாதிபதி ஹமித் அல் கர்ஸாயி உலக வங்கியின் முன்னாள் உறுப்பினர் அஷ்ரஃப் கானி மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ஆகியோர் பிரதான வேட்பாளர்களாவர்.
ஜனாதிபதியையும் 34 மாகாண சபைகளின் 420 உறுப்பினர்களையும் தெரிவு செய்யும் இத் தேர்தலில் 17 இலட்சம் மக்கள் வாக்களிக்கவுள்ளனர். ஆறாயிரம் வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப் பதிவுகள் இடம்பெறவுள்ளன. தேர்தலைக் கண்காணிக்கவென இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் தயாராகவுள்ளனர்.
மோசடிகளைத் தவிர்க்கும் பொருட்டே இவ்வளவு தொகையான கண்காணிப்பாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதேபோல் வன்முறைகள் கலகங்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் வீதிகள் பிரதான சந்திகளில் பாதுகாப்புப் படை யினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் வாக்களி ப்பு நிலையங்களிலும் இராணுவம் குவிக்க ப்பட்டுள்ளது.
ஜனநாயக அரசாங்கத்தை தெரிவு செய்ய ஆப்கான் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென ஐ. நா. செயலாளர் பான் கி மூன் கேட்டுள்ளார். காலை தொடங்கும் வாக்களிப்பு மாலையில் முடிவடையவுள்ளது. வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆரூடம் கூற முடியாதுள்ள நிலையில் ஹமித் அல் கார்ஸா யியும் அஷ்ரஃப்கானியும் உள்ளனர். முன்னாள் நிதியமைச்சரின் செல்வாக்கு குறைவாகவே உள்ளது.
அஷ்ரஃப் கானியின் உரை கவர்ச்சிகரமாக அமைந்தது. உணவையும், குடி நீரையும்தான் ஹமீத் அல் கார்ஸாயியால் தரமுடியும் பல தொழில்களையும் இலட்சக்கணக்கான வீடுகளையும் பாதுகாப்பையும் தன்னால் தரமுடியும் என அஷ்ரஃப் கானி தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தார். வெளிநாட்டுப் படைகளின் பொறுப்பற்ற இராணுவ நடவடிக்கைகளால் ஆப்கானிஸ்தான் பெண்கள், சிறுவர்கள் உயிரிழந்தமை தற்போதைய ஜனாதிபதி ஹமித் அல் கர்ஸாயியின் செல்வாக்கைப் பாதித்துள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தலிபான்கள் தேர்தலைக் குழப்பும் நோக்குடன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதுடன் வாக்களிப்போரின் கரங்கள் துண்டிக்கப்படுமென்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த செவ்வாய்கிழமை ஜனாதிபதியின் மாளிகை மீது தலிபான்கள் ரொக்கட் தாக்குதல்களை நடத்தினர். மற்றும் தற்கொலைத் தாக்குதல்களையும் நடத்தினர். இத்தாக்கதல்களில் குறைந்தது 15 பேர் வரை கொல்லப்பட்டனர். தேர்தல் கண்காணிப்பாளர்கள் பாதுகாப்பு குறைவாக உள்ள பகுதிகளுக்குச் செல்லத் தயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.