தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரியின் வாகனத்தை அவரிடம் திருப்பி ஒப்படைக்காது மறுத்ததாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் வன்னிப் பிராந்தியக் கிளையின் நிர்வாகச் செயலாளர் வி.சகாயதேவனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை செப்டெம்பர் 1 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தனது வாகனத்தை மோசடி செய்ததாக சகாயதேவன் மீது வீ.ஆனந்தசங்கரி குற்றஞ்சாட்டி வவுனியா பொலிஸ் நிலையத்தில் செய்த புகாரையடுத்து சகாயதேவன் வவுனியா பொலிஸாரால் திங்கட்கிழமை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவரது வாக்கு மூலமும் பொலிஸாரால் பெறப்பட்டது.
இது தொடர்பான விசாரணை வவுனியா நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராசா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இருதரப்பினரின் சட்டத்தரணிகளும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
வவுனியா நகரசபைத் தேர்தலை முன்னிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகம் வவுனியாவில் திறந்துவைக்கப்பட்டதுடன், வி.சகாயதேவன் அதன் இணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வாகனம் தற்போது வவுனியா பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.