சயீட் அன்வரின் சாதனையை சமன்செய்த கொவென்ட்ரி தரவரிசையில் முன்னேற்றம்

17-charles-coventry222.jpgஒருநாள் போட்டியில் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற சயீட் அன்வரின் சாதனையை சமன் செய்த சிம்பாப்வே வீரர் சால்ஸ் கொவென்ட்ரி ஐ.சி.சி. ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

பங்களாதேஷடனான 4 ஆவது ஒருநாள் போட்டியில் 194 ஓட்டங்களை பெற்று சாதனை படைத்த 26 வயதான கொவென்ட்ரி ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான ஐ.சி.சி. இன் புதிய தரவரிசையில் 100 இடங்களுக்குள் முன்னேறினார். இதன்படி 103 ஆவது இடத்தில் இருந்த கொவென்ட்ரி 83 ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

இது தவிர, பங்களாதேஷடனான ஒருநாள் தொடரில் சோபித்த சீன் வில்லியம்ஸ், எல்டன் சிகும்புரா ஆகியோரும் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். இதில் சீன் வில்லியம்ஸ் 9 இடங்கள் முன்னேறி 47 ஆவது இடத்தையும் சிகும்புரா 6 இடங்கள் உயர்ந்து 50 ஆவது இடத்தையும் பிடித்தனர்.

இந்த இருவரும் மாத்திரமே ஐ.சி.சி. ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதல் 50 இடங்களுக்குள் இருக்கும் சிம்பாப்வே வீரர்களாவர்.

அதேபோன்று சிம்பாப்வேயுடனான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை வென்ற பங்களாதேஷ் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமீம் இக்பால் இரண்டு இடங்கள் முன்னேறி 36 ஆவது இடத்தை பிடித்தார்.

இதனிடையே ஐ.சி.சி. ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் பங்களாதேஷ் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஷகீப் அல் ஹஸன் இரண்டாவது இடத்தை இழந்தார். சிம்பாப்வேயுடனான ஒருநாள் தொடரில் சோபிக்க தவறிய ஷகீப் அல் ஹஸன் இரண்டாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டார்.

இதனால் நியூஸிலாந்து வீரர்களான கைல் மில்ஸ் மற்றும் டானியல் விட்டோரி ஆகியோர் முறையே 2, 3 ஆவது இடங்களுக்கும் முன்னேற்றம் கண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *