பிரதமரால் ஏற்கனவே சபையில் பதில் அளிக்கப்பட்ட விடயம் தொடர்பில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா நேற்று (20) மீண்டும் கேள்வி எழுப்ப முற்பட்டதால் ஆளுந்தரப்பு எதிர்த் தரப்பு உறுப்பினர்களுக்கிடையில் சுமார் 30 நிமிட நேரம் சர்ச்சை நிலவியது.
எதிர்க் கட்சியின் பிரதம கொறடாவான ஜோசப் மைக்கல் பெரேரா சமர்ப்பித்திருந்த ஒரு கேள்வி ஏற்கனவே பிரதமரால் பதில் அளிக்கப்பட்டது எனவும். அதேநேரம் அந்தக் கேள்வி இரண்டு பக்கங்களுக்கு மேற்பட்டிருந்ததுடன் ஜோசப் மைக்கல் பெரேராவின் கையொப்பத்தைக் கொண்டதாக இருக்கவில்லை என்றும் கூறி அதனை மீண்டும் எழுப்புவதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை.
கடந்த செவ்வாய்க்கிழமை (18) எழுப்பிய கேள்வியை மீண்டும் கேட்பதற்கு அனுமதிக்க முடியாதென ஆளுந்தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும் மறுத்துவிட்டார். ஜோசப் மைக்கல் பெரேரா, கட்சித் தலைவரின் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதாகவும் அமைச்சர் குணவர்த்தன குற்றஞ்சாட்டினார்.
‘கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடிக்கடி சபைக்கு வருகை தராததால் அவர் சார்பில் கேள்வி எழுப்ப உங்களை நியமிப்பதாகக் கூறியதால் நாம் ஏற்றுக்கொண்டோம். ஆனால் நீங்கள் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி தினமும் சபையில் கேள்வி கேட்டு நாடகம் ஆடுகிர்கள்.
நாட்டைத் தவறாக வழிநடத்தி குழப்பப் பார்க்கிர்கள். இப்படித் தொடர்ந்தால் கட்சித் தலைவர் மாத்திரம் கேள்வி கேட்கலாம் என்ற விதியை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டிய நிலைக்குத் நாம் தள்ளப்படலாம் என்றார் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன.
எனினும் இதனை மறுத்த ஜோசப் மைக்கல் பெரேரா இல்லை நான் எழுப்பிய கேள்விக்குப் பிரதமர் முழுமையான பதிலை அளிக்கவில்லை என்றார்.
அப்படியாயின் ஏன் நேருக்கு நேர் பிரதமரிடம் மறுத்துக் கேட்கவில்லை? என்று திருப்பிக் கேட்டார் சபாநாயகர்.
விவாதம் நடத்தக்கூடாது என்று கட்டுப்பாடு உள்ளதே.
சரி மீண்டும் எஎனக்கு எழுத்து மூலம் தாருங்கள். நான் அனுமதி தருகிறேன்.’
என்ற சபாநாயகர் டபிள்யூ ஜே. எம். லொக்குபண்டார, 17வது திருத்தச் சட்டத்தைத் தவிர்த்து வேறு விடயங்கள் குறித்தும் கேள்வி கேளுங்கள். அதற்குப் பிரதமர் அன்றே பதில் அளித்துவிட்டார். அன்று (18) எழுப்பிய கேள்விகளை மீண்டும் கேட்காதீர்கள் என்று அறிவுறுத்தினார். கேள்வி கேட்கப்படாமல் இந்தச் சர்ச்சையே சுமார் 30 நிமிடம் நீடித்தது.
மாலபே மாணவன் கடத்தப்பட்டுத் தாக்கப்பட்டமை, அங்குலானவில் இரு இளைஞர்கள் கொலையுண்டமை இவற்றுக்கு காரணம் 17வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தாமை என்ற கருத்துப்பட கடந்த செவ்வாய்க்கிழமை எழுப்பிய கேள்விகளையே ஜோசப் மைக்கல் பெரேரா மீண்டும் கேட்கவிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.