சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை ஓர் இலட்சத்து 12 ஆயிரத்து 543 வீடுகள் மீள நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்த்தன நேற்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சுனாமி மீள்கட்டுமானத்திற்கெனக் கடன் உதவியாவும், நிதி உதவியாகவும் 1006.58 மிலியன் அமெரிக்க டொலர் கிடைக்கப்பெற்றதாகவும் அமைச்சர் கூறினார். ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய வாய்மூல விடைக்கான கேள்வியொன்றுக்குப் பதில் அளிக்கையிலேயே அமைச்சர் குணவர்தன இந்தத் தகவலை வெளியிட்டார்.
சுனாமியால் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு, பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களின் தொகை யாது என்றும், மீள நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை, கிடைக்கப்பெற்ற நிதி உதவிகள் தொடர்பாக விளக்கமளிக்குமாறும் ரவி கருணாநாயக்க எம்.பி. கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதில் அளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, ‘சுனாமிப் பேரலையால் 23,275 பேர் மரணித்துள்ளனர். 1,93,765 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் தவிர்ந்த பகுதிகளில் அரசாங்கத்தினால் 68,814 வீடுகள் நிர்மாணித்துக்கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளூர், வெளியூர் அரச சார்பற்ற நிறுவனங்களால் 43,729 வீடுகள் மீள நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சுனாமி மீள் கட்டுமானத்திற்காக கடனுதவியாக 300.43 மில்லியன் அமெரிக்க டொலரும், நிதியுதவியாக 706.15 மில்லியன் டொலரும் கிடைக்கப்பெற்றன’ என்றும் குறிப்பிட்டார்.