இந்தியா வின் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவிவரும் ஏ (எச்1 என்1) நுண்ணியிரித் தாக்குதலினால் உண்டாகும் நோய்க்கு நேற்று மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்வைன் ஃபுளூ என்றழைக்கப்படும் இந்நோய்க்கு மிக அதிகமானோர் உயிரிழந்த புனே நகரில் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்தார். தமிழ்நாட்டிலும், கோவா மாநிலத்திலும் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இந்நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது.
நாடு முழுவதும் இந்நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 2,600ஐ கடந்துள்ளது.
புனே நகரில் மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இநநகரிலுள்ள கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சென்னை நகரில் இந்நோயால் பாதிக்கப்பட்ட 45 வயது ஆண் ஒருவர் நேற்று உயிரிழந்தார். இவரையும் சேர்த்து தமிழ்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள மாதா அமிர்தானந்தமயி உயர்கல்விக் கூடங்களில் பயின்றுவரும் 3 மாணாக்கர்களுக்கு இந்நோய் தாக்கியுள்ளது தெரியவந்ததையடுத்து அங்கு படித்துவரும் மாணாக்கர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறி சொந்த ஊருக்குத் திரும்புமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் மேலும் 4 பேருக்கு இந்நோய் பரவியுள்ளது தெரியவந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்நோய் மிகக் கடுமையாக பரவி வருகிறது.