வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களில் யாழ்ப்பாணம், திருகோணமலை போன்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் வயோதிபர்கள், வலது குறைந்தவர்கள் என பல தரப்பட்டவர்கள் அடங்கலாக சுமார் ஒரு லட்சம் பேரை விரைவில் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் சுமார் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் விபரங்கள் திரட்டப்பட்டு, அவர்களைச் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான ஜனாதிபதி செயலகத்தின் அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதற்கிடையில் வன்னிப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவதற்காகக் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளும், வீதிகள் அமைத்தல், குடிநீர் வசதிகளை ஏற்படுத்துதல், மின்சார விநியோகச் செயற்பாடுகள் உட்பட உட்கட்டமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
வவுனியா ஓமந்தையில் இருந்து புளியங்குளம் வரையிலான பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு, அந்தப் பிரதேசத்தின் பாதுகாப்பு குறித்த சான்றிதழை எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டத்தவர்கள் தவிர்ந்த ஏனையோர் சரியான தகவல்களை வழங்கினால் சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதி
வவுனியா முகாம்களில் தங்கி இருப்பவர்களுள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் தொடர்பான சரியான தகவல்களை வழங்கி அவற்றை உறுதிப்படுத்துவார்களாயின் அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
தற்போது முகாம்களில் உள்ளவர்களுள் 60 வயதிற்கு மேற்பட்டோர், மனநோயாளர்கள், அங்கவீனர்கள் மற்றும் நோயாளிகள் தங்கள் உறவினர்களோடு சென்று வாழ விரும்பினால் தமது உறவினர்கள் தொடர்பான சரியான விபரங்களை வழங்குவõர்களேயானால் அந்த தகவல்கள் பாதுகாப்பு தரப்பினர் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு அவர்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைப்போம்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தாங்கள் தொடர்பான சரியான தகவல்களை வழங்குவார்களானால் அதனை அப்பகுதியை சேர்ந்த அரசாங்க அதிபரிடம் அல்லது கிராம சேவகரிடம் ஒப்படைத்து இவர்களது பதிவுத் தகவல்களை உறுதிசெய்யப்பட்ட பின்னர் அவர்களை அவரவர் இருப்பிடங்களுக்கு அனுப்பி வைப்போம். அது தொடர்பான வேலைகளை தற்பொழுது நாம் மேற்கொண்டு வருகிறோம்.
தத்தமது பிரதேசங்களில் சென்று வசிப்பதில் மக்கள் ஆர்வமாகவே உள்ளனர். இவற்றில் பாதுகாப்பு தரப்பினரை நாடி நாங்கள் பேசியுள்ளோம். எனவே அனைவரினதும் ஒத்துழைப்புக்களுடனும் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் துரிதகதியில் முன்னெடுக்கப்படும்.
கடந்த இரண்டு மூன்று நாட்களாக கடும் மழை பெய்ததால் கூடாரங்கள் உள்ள பகுதிகளில் வெள்ள நீர் பாதிப்பை ஏற்படுத்தினாலும் தற்போது அந்நிலைமை சீர்படுத்தப்பட்டுள்ளது. நீர் தேங்கி நின்ற பகுதியில் உள்ள கூடாரங்கள் அகற்றப்பட்டதுடன் அக்கூடாரங்களில் வசித்த மக்களுக்கு வேறு கூடாரங்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர வடிகான்களும் சீரமைக்கப்பட்டுள்ளன. பழுதடைந்திருந்த கூடாரங்கள் புனரமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் மழை காலத்தை சமாளிக்கும் வகையில் அம்மக்களுக்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்றார் அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்
மாயா
இது போல ஏனையவர்களைளயும் கொஞ்சம் கொஞ்சமாகவாவது குடியேற்றினால் நல்லது. அடுத்த மழை , மழையாக இருக்காது . மக்கள் தங்கியுள்ள இடங்கள் சேறும் சகதியும் உண்டாகக் கூடிய இடம். அது வெள்ளமாக மாறும். அதன் பின் கட்டுப்பாடுகளை மக்கள் உடைத்துக் கொண்டு வெளியேறும் அபாயம் உண்டு. அது எதிர் மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
பல்லி
இதுவரை புலிவருகுது; ஆமி வருகுது; சிலவேளைகளில் வெள்ளைவானும் வரும் என மக்களை மிரட்டிய ஊடகங்கள் (உன்மையான விடயங்கள்தான்) இன்று (இயற்க்கயான)மழை வருகுது; வெப்பம் வருகுது; மிருக காச்சல் வருகுது; நோய் வருகுது, வெள்ளம் அடிக்குது இப்படி வரக்கூடிய சம்பவங்களை சொல்லி மிரட்டுகிறார்கள், மக்கள் இயற்க்கைக்கு பாதுகாப்பான இடத்தில் இல்லை என்பதைதானே இது காட்டுகிறது; முல்லை கிளிநொச்சி மக்கள் தவிர்ந்த மக்களை விபரம் கேட்டிருக்கும் அரசு ஏன் அந்த இரு இடத்து மக்களும் என்ன பாவம் செய்தனர், மிருகம் போய் அங்கு குடி கொண்டது அவர்கள் குற்றமா? இது சிங்கள மக்கள்; தமிழ் மக்கள், முஸ்லீம் மக்கள் ;மலையக மக்கள்; என்பது போல் புதிதாக ஒரு வன்னிமக்கள்; என உருவாக்க படுகிறதா?
காலபோக்கில் அவர்களுக்கு அந்த தாழ்வுமனபாண்மை வர வாய்பிருகல்லவா? இதுகூட இன்னும் ஒரு பேயாட்டகாரர்களுக்கு ஆழ்சேர்ப்புக்கு வசதியாகிவிடும். இதுகூட பல்லியின் அனுபவம்தான்; அன்று பாதிக்கபட்ட மக்களையே புலி தனக்கு சாதகமாக்கி கொண்டது என்பதை யாரும் மறுக்கமுடியாது;
மாயா
இடைத்தங்கல் முகாமில் இருந்து வெளியே செல்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக புகார்
இலங்கையின் வடக்கே வவுனியா மெனிக்பாம் பகுதியில் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள், ஒரு முகாமில் இருந்து அடுத்த முகாமுக்குச் செல்ல முடியாதவாறு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்புக்கு மத்தியிலும் அவ்வாறு செல்ல முற்படுபவர்கள் இராணுவத்தினரால் தாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான ஒரு சம்பவம் ஞாயிற்றுகிழமை காலையில் இராமநாதன் இடைத்தங்கல் முகாமில் நடைபெற்றிருப்பதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தைத் தான் நேரில் கண்டதாகவும், தாங்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாமில் தண்ணீருக்குப் பெரும் கஷ்டமான நிலை காணப்படுவதாகவும், கழிப்பறை வசதிகள் கூட போதிய அளவில் இல்லை என்று அந்த முகாமைச் சேர்ந்த ஒரு பெண்மணி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இதற்கிடையில் முகாம் வாழ்க்கை மிகவும் மோசமானதாக இருப்பதாகவும், அங்குள்ள கூடாரங்களில் அளவுக்கு அதிகமானவர்களைத் தங்க வைக்கப்பட்டிருப்பதனால் இட நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக மற்றுமொருவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
– http://www.bbc.co.uk/tamil/news/story/2008/07/000000_currentaffairs.shtml