இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத் மாநிலங்களில் தலா ஒருவர் இன்று பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானார்கள். இதனால் பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.
குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த ஹஸ்முக் ஹிங்கு என்பவர் இன்று சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். குஜராத்தில் மட்டும் இதுவரை 6 பேர் இறந்துள்ளனர்.
இதேபோல மகாராஷ்டிர மாநிலம் ஜல்னா பகுதியை சேர்ந்த அனில் சேஷ்ராவ் சவான் (26) என்ற வாலிபரும், ஹரியானா மாநிலம் குருசேத்ரா மாவட்டத்தில் 40 வயது நிரம்பிய பெண் ஒருவரும் பன்றி காய்ச்சல் நோய்க்கு பலியானார்கள்.
டெல்லியில் ஒருவர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானதாக தகவல் வெளியானது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை.
2வது கட்ட தாக்குதல் அபாயம்
பன்றிக் காய்ச்சல் பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் 2வது கட்ட பன்றிக் காய்ச்சல் தாக்குதல் ஏற்படவுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உலக நாடுகள் இதை சமாளிக்க தயாராகிக் கொள்ளுமாறும் அது எச்சரித்துள்ளது.
குறிப்பாக இந்தியாவில் மழைக் காலம் நெருங்கியுள்ள நிலையில், பன்றிக் காய்ச்சல் கடுமையாக இருக்கும் எனவும் அது கூறியுள்ளது.
உலகம் முழுவதும் இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு 1799 பேர் உயிரிழந்துள்ளனர். 177 நாடுகளை பன்றிக் காய்ச்சல் பாதித்துள்ளது.