இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் 200வது வருடம், எதிர்வரும் 25 ஆம் திகதி பூர்த்தியடைகிறது. இதனை முன்னிட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி 200 வருட பூர்த்தி விழா பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளதாக சுங்க திணைக்களப் பணிப்பாளர் எஸ். ஏ. சீ. எஸ். ஜயதிலக தெரிவித்தார்.
நேற்று முன்தினம் இலங்கை சுங்கத் திணைக்களத்தில் சேவையாற்றும் 40 முஸ்லிம் சுங்க அதிகாரிகளின் ஏற்பாட்டில் மருதானை ஜும்ஆப் பள்ளிவாசலில் இஸ்லாமிய மத வழிபாடு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.இவ்வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் இத்தகவலைத் தெரிவித்தார்.
தொடர்ந்து அங்கு உரையாற்றிய பணிப்பாளர் தகவல் தருகையில், இந்த நாட்டில் தேசிய வருமானத்தில் ஐம்பது வீதத்தை சுங்கத் திணைக்களம் பெற்று வருகின்றது. இது 2009 ஆம் ஆண்டில் 427 பில்லியனும் 2007 ஆம் ஆண்டில் 315 பில்லியனும் 2008 இல் 279 பில்லியனும் வருமானமாகப் பெற்றுள்ளது.200 ஆண்டு விழாவின் போது இருபத்தைந்து ஆண்டுகள் சேவையைப் பூர்த்தி செய்த சுங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதியால் சின்னம் வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.
இவ்வைபவத்தில் மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானாவும் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டனர். இவ்வைபவத்தின் போது மருதானைப் பள்ளிவாசல் இமாமினால் துஆப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.
திஹாரிய அங்கவீன நிலைய த்தின் மாணவர் ஒருவருக்கு முச்சக்கர நாற்காலியும், செவிப்புலன் சாதனங்களும், பாத்திமா அனாதை இல்லத்தில் உள்ள மாணவிகளுக்கு நிதி உதவிகளும் வழங்கப்பட்டன. இவ்வைபவம் சுங்கத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் இஸ்மாயில் சாபி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.