தலவாக்கலை, பெல்கிரேபியா தோட்டக் குடியிருப்பில் நேற்று முன்தினம் இரவு திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் 20 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. இந்தச் சம்பவத்தில் அந்த வீடுகளிலிருந்த சகல பொருட்களும் எரிந்து
நாசமாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சேதங்கள் தொடர்பான மதிப்பீடு மற்றும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் திடீரென தீ பிடித்துள்ளதாகவும் லிந்துல பொலிஸாரும், நகர சபை தீயணைப்பு பிரிவினரும் இணைந்து பல நேரத்திற்கு பின்னர் தீயை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மின் ஒழுக்கு காரணமாகவே இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளி லிருந்து தெரிய வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். தீக்கிரையான வீடுகளில் நேற்று நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களும் இருந்துள்ளனர்.