பன்றிக் காய்ச்சல்; உலக சுகாதார ஸ்தாபனம் புதிய அறிவுறுத்தல்

10092009.jpgபன்றிக் காய்ச்சலுக்கு (ஸ்வைன்புளூ) எதிரான மருந்துகளைப் பயன்படுத்துவது குறித்து புதிய அறிவுறுத்தல்களை விடுத்திருக்கும் உலக சுகாதார அமையம், சிக்கலான வியாதிகளற்ற நோயாளர்கள் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை எடுக்க வேண்டிய தேவை இல்லையென்று கூறியுள்ளது.

உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தொடர்ந்து காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் காணப்படுகின்றனர். அவர்கள் எந்தவொரு மருத்துவ சிகிச்சையும் இல்லாமல் ஒரு வாரத்திற்குள் முழுமையாக குணமடைந்து வருவதாக உலக சுகாதார அமையம் மேலும் தெரிவித்துள்ளது.

சர்வதேச நிபுணர்கள் குழுவின் கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் புதிய வழிகாட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் சிக்கலற்ற வியாதியுடைய நோயாளர்களுக்கு வைரஸ் எதிர்ப்பு மருந்துகளைச் சேர்த்து சிகிச்சையளிக்க வேண்டிய தேவை இல்லை என்று உலக சுகாதார அமையம் தெரிவித்துள்ளது.

ஒசெல்றமிவிர் (Oseltamivir) சனமிவிர் (Zanamivir) போன்ற மருந்துகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் நோயின் தாக்க கடுமையையும் மரணங்களையும் தடுக்கக் கூடியதென்றும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டியதன் தேவையையும் ஆஸ்பத்திரியில் தங்கியிருக்கும் காலத்தையும் குறைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்வைன்புளூ மற்றும் வழமையாக ஏற்படும் காய்ச்சல் என்பவற்றால் மரணத்திற்கு வழிவகுக்கும் காரணமான நியூ மோனியா ஆபத்தைக் கணிசமான அளவுக்குத் தடுக்கும் மருந்தாக ஒசெல்றமிவிர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான பாதிப்பு ஏற்பட்டால் ஒசெல்ரமிவிர் கிடைக்காது விடின் சனமிவிரை கொடுக்கலாம் என்று உலக சுகாதார அமையம் தெரிவித்துள்ளது.

ஸ்வைன்புளூ தாக்கத்திற்கு உட்படும் அதிக ஆபத்து கர்ப்பிணிகளுக்கு இருப்பதாகவும் நோய் அறிகுறிகாணப்பட்டால் சாத்தியமான அளவுக்கு விரைவாக அவர்கள் வைரஸ் எதிர்ப்பு சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றும் உலக சுகாதார அமையம் சிபார்சு செய்துள்ளது.

அத்துடன் சிறுவர்களுக்குக் குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட சிறாருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவது தொடர்பாகவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம், 5 வயதிற்கு மேற்பட்ட ஆரோக்கியமான சிறுவருக்கு அவர்களுக்கு நோயின் தாக்கம் கடுமையாக ஏற்படாவிடின் அல்லது நிலைமை மோசமடையாவிடின் வைரஸ் எதிர்ப்பு சிகிச்சை தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூச்சு விடுதல் சிரமம், மார்பு வலி, கடும் காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தல் போன்றவை H1N1 தாக்கத்துக்கான அறிகுறிகளாகும். H1N1 தாக்க அறிகுறி இருப்பதாக சந்தேகப்பட்டால் அல்லது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்படவேண்டும். குழந்தைகள் மூச்சுவிட சிரமப்பட்டால், எழுந்திருக்கக் கஷ்டப்பட்டால், விளையாட ஆர்வம் காட்டாவிட்டால். சாப்பிடாமல் விட்டால் எச்சரிக்கைக்குரிய அறிகுறிகளாகும் என்று உலக சுகாதார அமைய அறிவுறுத்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *