மஸ்கெ லியாவைச் சேர்ந்த இரு சிறுமிகள் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கையெடுக்கப்பட வேண்டுமென்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பு பௌத்தாலோக மாவத்தையை சேர்ந்த எம்.எம்.பஷால், யூ.எல்.பௌசிக் என்பவர்களின் வீட்டு வேலையாட்களாக பணியாற்றிய வேளயில் கடந்த சனிக்கிழமை இந்த வீடுகளை அடுத்த கழிவு நீர் கால்வாயில் இரு சிறுமிகளின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தன.
இந்த விடயம் தொடர்பில் வழக்கு விசாரணையை அடுத்து கருத்து தெரிவித்த மனோ கணேசன் எம்.பி. கூறியதாவது; சட்டவல்லுனர்கள் மூலம் இது தொடர்பிலான நியாயமான தீர்பை நாம் நீதிமன்றத்தின் மூலம் பெற்றக்கொள்வதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம்.
இதன் காரணமாக கொழும்பிற்கு அழைத்து வரப்பட்ட இச்சிறுமிகளின் பெற்றோர்களிடமிருந்து மனித உரிமை இல்லத்தை சார்ந்த வழக்கறிஞர்கள் தகவல்களை பெற்றுக் கொண்டுள்ளனர். இத்தகவல்கள் வழக்கின் மேல் விசாரணைகளின் போது சமர்ப்பிக்கப்படும். சிறுமிகளின் மரணம் தொடர்பிலான நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்க இயலாது.
ஆனால், மரணங்களுக்கு அப்பால், குறைந்த வயது கொண்ட சிறுவர்கள் வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்படக்கூடாது என்ற சட்டம் மீறப்பட்டுள்ளது. மரணமடைந்த சுமதி என்ற சிறுமியின் பிறந்த திகதி 22.09.1994 ஆகும். இவ்வருடம் ஏப்ரல் மாதம் வேலைக்கு சேர்க்கப்பட்டபொழுது அவரது வயது 14 ஆகும். ஜீவராணி என்ற சிறுமியின் பிறந்த திகதி 27.12.1995 ஆகும். இவ்வருடம் வேலைக்கு சேர்க்கப்பட்டப்பொழுது அவரது வயது 13 ஆகும். இங்கே சிறுவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாத வயதெல்லை தொடர்பிலான சட்டம் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பில் கொழும்பு கறுவாத்தோட்ட பொலிஸார் சம்பந்தப்பட்ட நபர்களின் மீது குற்றம் சாற்றவில்லை.
குழந்தைகளின் வயது தமது விசாரணையின்போது வெளியாகவில்லையென கறுவாத்தோட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி கபில பிரேமதாஸ என்னிடம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இவ்வார ஆரம்பத்தில் ஊடகங்களில் வெளியான மரணமடைந்த சிறுமிகளின் வயது தொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்த தகவல்கள் தவறானவை என ஊர்ஜிதம் ஆகியுள்ளது.
எனவே எனது பணிப்புரையின் பேரில் தற்சமயம் பெற்றோர்களிடமிருந்து வாக்கு மூலங்களை தேசிய சிறார் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் ஜகத் வெள்ளவத்த பெற்றுக் கொண்டுள்ளார். எனவே சட்டத்தை மீறியவர்கள் தொடர்பிலே இந்த ஆணையம் சட்ட நடவடிக்கையை எடுக்க ஆரம்பித்துள்ளது.