பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் கடந்த சனிக்கிழமை நடந்த கார்க் குண்டுத் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன், ஐந்து பேர் காயமடைந்தனர். ரிமோட் கருவி மூலம் தூரத்திலிருந்து இக் குண்டு வெடிக்க வைக்கப்பட்டது. அரசாங்க வைத்திய சாலைக் கருகாமையில் இக்கார் குண்டு வெடிக்கவைக்கப்பட்டது.
பலியான இருவரும் அன்ஸாருல் இஸ்லாம் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என பெஷாவர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். பலியான முபீன் அப்ரிடி இவ்வியக்கத்தின் பேச்சாளராவார். மற்றவர் இவரின் கார் சாரதியாவார். காயமடைந்தோர் பொது மக்களாவர்.
லக்ஷர் இ இஸ்லாம் என்ற அமைப்பு இக் குண்டுத் தாக்குதலை நடத்தியதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குண்டு வெடித்த இடம் சன நெருக்கமுள்ள பகுதியாகும். ரமழான் மாதம் ஆரம்பமானதால் பெருந் தொகையானோர் வீதிகளில் நடமாட வில்லையென்பதால் இழப்புகள் குறைவாக இருந்தன.
பாகிஸ்தான் இராணுவத்தின் பாரிய நடவடிக்கைகள் வஸிரிஸ்தான் பகுதியில் ஆரம்பித்துள்ளதால் இஸ்லாமிய அமைப் புகளிடையே பிளவுகள் ஏற்பட்டுள்ளதை இந்த தாக்குதல் உணர்த்துவதாகக் கூறப்படுகிறது.