ஆஷஸ் தொடரை வென்றது இங்கிலாந்து!

eng0000.jpgஅவுஸ்தி ரேலியாவிற்கு எதிரான சாம்பல் கிண்ணத்துக்கான ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணி வென்று கிண்ணத்தைக் கைப்பற்றியது.

இங்கிலாந்து-ஆஸ்‌ட்ரேலிய கிரிக்கெட் அணிகள் இடையே வரலாற்று புகழ்மிக்க ‘ஆஷஸ்` டெஸ்ட் தொடர் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த போட்டி நடத்தப்படுகிறது. இதன்படி 65-வது ஆஷஸ் டெஸ்ட் கடந்த மாதம் இங்கிலாந்தில் தொடங்கியது. இதில் முதல் 4 டெஸ்டில் இரு அணியும் தலா ஒரு வெற்றி பெற்றன. இரு போட்டி டிராவாகின.

இதனால் தொடர் சமன் ஆன நிலையில் கோப்பையை வெல்வது யார் என்பதை நிர்ணயிக்கும் பரபரப்பான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 20ஆ‌ம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 332 ஓட்டங்களும், ஆஸ்‌ட்ரேலியா 160 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் 172 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 373 ஓட்டங்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் ஆஸ்‌ட்ரேலிய அணிக்கு 546 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

கடினமான இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்‌ட்ரேலிய அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. முந்தைய நாள் சிறப்பான தொடக்கம் அமைத்து தந்த வாட்சன், சைமன் கேடிச் இருவரும் சிறிது நேரத்தில் அடுத்தடுத்து எல்.பி.டபிள்யூ. ஆனார்கள். கேடிச் 43 ஓட்டங்களுடனும் வாட்சன் 40 ஓட்டங்களுடனும் அவுட் ஆனார்கள்.

இதை தொடர்ந்து அ‌ணி‌த் தலைவ‌ர் ரிக்கி பாண்டிங்கும், மைக் ஹஸ்ஸியும் அணியை வீழ்ச்சியில் இருந்து மீட்கும் போராட்டத்தில் இறங்கினார்கள். அணியை ஓரளவு தூக்கி நிறுத்திய இந்த அபாயகரமான கூட்டணி துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட்டில் பிரிந்தது. பிளின்டாப்பால் ரன்-அவுட் செய்யப்பட்ட பாண்டிங் 66 ஓட்டங்களுடன் (103 பந்து, 10 பவுண்டரி) பெவிலியன் திரும்பினார். அடுத்து இறங்கிய துணை தலைவ‌ர் மைக்கேல் கிளார்க்கும் (0) வந்த வேகத்தில் ரன்-அவுட் ஆகவே ஆஸ்‌ட்ரேலிய அணி தோல்வி பாதைக்கு தள்ளப்பட்டது. 5-வது விக்கெட்டுக்கு உள்ளே வந்த மார்கஸ் நார்த்தும் (10 ரன்) நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

இதன் பின்னர் ஒரு முனையில் ஹஸ்ஸி தனது 10-வது சதத்தை பூர்த்தி செய்து கொண்டு போராட, மறுபக்கம் வேகமாக விக்கெட்டுகள் சரிந்தன. ஹேடின் (34 ஓட்டங்கள்), ஜான்சன் (0), சிடில் (10), ஸ்டூவர்ட் கிளார்க் (0) ஆகியோர் சிறிய இடைவெளியில் வெளியேறினர்.

கடைசி விக்கெட்டாக மைக்ஹஸ்ஸி (121 ஓட்டங்கள், 263 பந்து, 14 பவுண்டரி) ஆட்டம் இழக்க ஆஸ்‌ட்ரேலிய அணி 2-வது இன்னிங்சில் 348 ஓட்டங்களு‌க்கு அனை‌த்து ‌வி‌க்கெ‌ட்டுகளை இழ‌ந்தது. இதன் மூலம் 197 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இங்கிலாந்து அணி மீண்டும் ஆஷஸ் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இங்கிலாந்து அணியில் ஸ்வான் 4 விக்கெட்டுகளும், ஹார்மிசன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். வெற்றி கொண்டாட்டத்துடன் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பிளின்டாப் டெஸ்ட கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் ஆஸ்‌ட்ரேலியாவை நிலை குலைய செய்த இங்கிலாந்து ப‌ந்து ‌வீ‌ச்சாள‌ர் ஸ்டூவர்ட் பிராட் ஆட்டநாயகன் விருது பெற்றார். இங்கிலாந்து அ‌ணி‌த் தலைவ‌ர் ஸ்டிராஸ் (மொத்தம் 474 ஓட்டங்கள் ), ஆஸ்‌ட்ரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் (448 ஓட்டங்கள் ) ஆகியோர் தொடர் நாயகன் விருது பெற்றனர்.

இந்த தோல்வியின் மூலம் ஆஸ்‌ட்ரேலிய அணி முதல் முறையாக ஐ.சி.சி. தரவரிசையில் முதலிடத்தை இழந்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *