ஓகஸ்ட் 2ல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘தமிழர்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’ என்ற தலைப்பிலான சந்திப்பில் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்பகால உறுப்பினரும் பின்னர் தீப்பொறிக் குழுவாகச் செயற்பட்டவரும் தீப்பொறியின் வெளியீடாக அமைந்த உயிர்ப்பு சஞ்சிகையின் ஆசிரியருமான ரகுமான் ஜான் (ஜான் மாஸ்ரர்) வழங்கிய ஆரம்ப உரை.
._._._._._._._._.
நீண்ட காலத்தின் பின்பு ஒரு பகிரங்க அரங்கில் உங்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தேசம்நெற் இந்த கூட்டத்திற்கு என்னை அழைத்த போது நான் பலரது கருத்துக்களையும் கேட்கலாமே என்ற ஆர்வத்தில் சம்மதித்து விட்டேன். ஆனால் இங்கு வந்த பின்புதான் நான் உரையாற்ற வேண்டும் என்று கூறினார்கள். இதில் சற்று சங்கடங்கள் இருந்தபோதிலும், எல்லா உரையாடல்களும் ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கித்தானே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் நான் சம்மதித்தேன். இப்போதும் கூட, நான் ஒரு உரையாடலை தொடக்கி வைப்பவன் என்ற வகையிலேயே பேச ஆரம்பிக்கிறேன். இதனைத் தொடர்ந்து ஒரு ஆரோக்கியமான கருத்தாடலுக்கு இது வழிகோலுமாயின் எனது முயற்சியில் நான் வெற்றி பெற்றதாக கருதுவேன்.
ஒரு இருண்ட காலத்தில் இருந்து இப்போதுதான் நாம் படிப்படியாக வெளியே வந்து கொண்டிருக்கிறோம். நந்திக் கடற்கரையில் தோற்கடிக்கப்பட்டது புலிகள் அமைப்பின் தலைமை மட்டுமல்ல. தமிழ் தேசமும், அதன் அரசியலும் கூடத்தான் முறியடிக்கப்பட்டது. அங்கு அவமானப்படுத்தப்பட்டது ஒரு தனிமனிதன் மட்டுமல்ல, முழுத் தமிழருக்கும் தான் சிங்கள பேரினவாதம் கோவணம் கட்டி அசிங்கப்படுத்தியது. தனியொரு அமைப்பிடமும், அதன் தலைமையாக அமைந்த தனியொரு மனிதனிடமும் விடப்பட்டிருந்த தமிழரது தேசியவிடுதலைப் போராட்டமானது, அதன் தலைமையை இழந்து தோற்று அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலைமையில் போராட்டத்தை தொடர்வது என்பது ஒரு புறமிருக்க, கௌரவத்துடன் கூடிய சமாதானத்தை பெற்றுக் கொள்வது கூட கேள்விக்குரிய ஒரு விடயமாகிவிட்டுப் போயுள்ளது. ஈழத்தமிழர் அரசியல்ரீதியாக அநாதைகளாக்கப் பட்டுள்ளார்கள். அரசியல் தலைமையானது வெற்றிடமாக விடப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட கையறு நிலையில் இருந்து மீண்டெழும் முகமாக, எஞ்சியுள்ள போராளிகளையும், ஏற்கனவே சிதறடிக்கப்பட்டிருந்த செயற்பாட்டாளர்கள் (Activist) போன்றோரை ஒருங்கிணைத்து ஒழுங்கமைப்பது என்பது கூட பல சிக்கல்களை முறியடித்தே முன்னேறியாக வேண்டியுள்ளது. கடந்த காலத்தில் நடந்து முடிந்துபோன கசப்பான அனுபவங்களும், அவை ஏற்படுத்திவிட்டுப் போயுள்ள வடுக்களும் ஒரு புறம் என்றால், இப்போது எம்மத்தியிலே உள்ள கருத்து வேறுபாடுகள் அதினைவிட பெரிய தடையாக வியாபித்து நிற்கிறது. இந்த தடைகளையும் விதமாக சில விவாதங்கள் ஆங்காங்கே, ஒழுங்கமைக்கப்படாத விதத்தில் என்றாலும் நடைபெறுவது உண்மையே என்றாலும், துரதிஸ்டவசமாக இவை வெறுமனே பொதுப்புத்தி (commonsense) மட்டத்திலேயே நடைபெற்று வருவது வேதனை தரும் விடயமாக இருக்கிறது.
பொதுப்புத்தி என்பது விஞ்ஞானபூர்வமான கோட்பாட்டினால் அறிவொளியூட்டப்பட்டது (Enlighten) அல்ல. மாறாக, ஆதிக்க சித்தாந்தத்தினால் அறிவுறுத்தப்படுவது (Informed) ஆகும். ஆதிக்க சக்திகள் தமது அதிகாரப்படிநிலைகளை பேணிக் கொள்ளும் விதத்தில் பல கருத்துப் படிமங்களை கட்டமைத்து, அவற்றை தமது கைகளில் உள்ள வெகுஜன சாதனங்களின் துணை கொண்டு ஜனரஞ்சகப்படுத்தி வைத்துள்ளது. இந்த வகையான கருத்துப்படிமங்களே எமது பொதுப்புத்தியில் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கின்றன. எனவே, பொதுப்புத்தி மட்டத்தில் நாம் எனது விவாதங்களை, உரையாடல்களை தொடரும் வரையில், நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஆதிக்க உறவுகளையே மீளக்கட்டமைத்துக் கொண்டு இருக்கப்போகிறோம். இந்த இடர்பாட்டில் இருந்து விடுபடுவதானால் நாம் இந்த ஆதிக்க சிந்தாந்தகளில் மேலாதிக்கத்தை முறியடித்து, புரட்சிகர சித்தாந்த மேலாண்மையை நிறுவியாக வேண்டியுள்ளது. விடயங்களை நாம் கோட்பாட்டு, அரசியல் மட்டத்தில் அணுகும் போது மட்டுமே இப்படியான ஒரு நிலைமை சாத்தியப்படும்.
இன்று எம்மிடையே நடைபெறும் விவாதங்களை சற்று உற்று நோக்கினால் நாம் பயங்கரவாதம் பிரிவினைவாதம் பெரும்பான்மை – சிறுபான்மை போன்ற பல சொற்பதங்களை சர்வசாதாரணமாக காண முடியும். சற்றே இவற்றை கட்டுடைக்கமுயன்றால் இவை ஒவ்வொன்றும் ஆதிக்க சக்திகளான ஏகாதிபத்தியம் மற்றும் சிங்கள பேரினவாதம் என்பவற்றால் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை இனங்கண்டு கொள்ள முடியும். உதாரணத்திற்கு ஒரு விடயத்தை மாத்திரம் எடுத்துக் கொள்வோம். பயங்கரவாதம் என்றால் என்ன?. இவர்கள் சொல்வது போல அரசியல் நோக்கங்களை வன்முறை மூலமாக அடைய முயல்வது பயங்கரவாதமா? அப்படியானால் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் ஆட்சி மாற்றத்தை வன்முறை மூலமாகத்தானே இவர்கள் செய்தார்கள். அல்லாவிட்டால் பொதுமக்களை இலக்காக கொள்வது பயங்கரவாதமா? ஈராக்கின் அதிர்ச்சி வைத்தியமும், இன்று பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் நடைபெறும் வெறும் பக்கவிளைவுகள் (collateral damage) என்று இவர்கள் உதாசீனப்படுத்தும் பொது மக்களது இழப்புகள் இவர்களைப் பொறுத்தவரையில் பயங்கரவாதமாக ஆகாமற் போவது எப்படி சாத்தியமாகிறது? ஒரே விளக்கத்தைதான் நாம் எட்ட முடியும். அதாவது, இந்த ஆதிக்க சக்திகள் வன்முறையை பயன்படுத்துவதற்கான உரிமையை தமது ஏகபோகமாக வைத்துக் கொள்ள முயல்கிறார்கள். மக்களது போராட்ட முயற்சிகள் அத்தனையையும் களங்கப்படுத்த கட்டமைக்கப்பட்ட புனைவுதான் இந்த பயங்கரவாத பூச்சாண்டியாகும்.
அமெரிக்காவில், ஆயுதம் தாங்கிய வன்முறைகள் மூலமாக பெருமளவிலான அப்பாவி பொதுமக்கள் நாள்தோறும் அநியாயமாக கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்: இந்த நிலையில், சமுதாயத்தில் கட்டற்ற விதத்தில் புளக்கத்தில் உள்ள ஆயுதங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மக்கள் நலன் விரும்பிகள் எடுக்கும் அத்தனை முயற்சிகளையும், ஆயுதம் ஏந்துவதற்கான தனிமனிதனது அரசியல் அமைப்பின் மூலமாக உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள உரிமை பற்றி கூச்சலிட்டு ஒரு வலதுசாரிக் கும்பல் குழப்பியடித்துக் கொணடிருக்கிறது. அதேவேளை இதே கும்பல் தேசங்கள் தம்மை தற்காத்து கொள்வதற்காக ஆயுதம் தரிப்பதற்காக உள்ள உரிமையை பயங்கரவாதம் என்று பூச்சாண்டி காட்டுகிறது. இது மிகவும் அயோக்கியத்தனமானதாகும். இப்படியாக நாம் எம்மையும் அறியாமல் ஆதிக்க சக்திகளது ஆய்வுச் சட்டகத்துள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதில் விழிப்பாக இருக்க வேண்டும். இது நிறைவேறாத வரையில் நாம் எமது நோக்கத்தில் ஒரு அங்குலமேனும் முன்னேறுவது சாத்தியமில்லாமல் போய்விடும். “நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே” என்ற வாசகங்களை நாம் எண்பதின் ஆரம்பம் வரையில் அடிக்கடி கேட்கக் கூடியதாக இருந்தது. பிற்காலத்தில் இந்த வாசகம் மட்டுமல்ல, அது சுட்டி நிற்கும் கருத்துச் சுதந்திரம் என்பது கூட எமது சமூகத்தில் தொலைந்துதான் போனது. எண்பதுகளில் புலிகளது ஏக பிரதிநிதித்துவம் பற்றிய ஒற்றைப் பரிமாண சிந்தனையுடன் தமிழரது அரசியலானது முடங்கிப் போனது. அதனால்தான் இப்போது நாம் 1976 ம் ஆண்டின் “வட்டுக்கோட்டை தீர்மானத்தை” தூசு தட்டி எடுத்து மீண்டும் ஒரு தடவை கருத்துக் கணிப்பு நடத்தியாக வேண்டியுள்ளது.
இந்த முப்பத்தி மூன்று ஆண்டுகால இழப்புகளையும் ஈடு செய்வது என்பது அத்தனை இலகுவான காரியமல்ல. நாமெல்லோரும் வெளிப்படையாகவும், மனம் திறந்தும் நிறையவே பேசியாக வேண்டியுள்ளது. அதுவும் கோட்பாட்டு, அரசியல் தளத்தில் தீவிரமாக சிந்தித்து, விரிவான கருத்தாடல்களை மேற்கொண்டாக வேண்டியுள்ளது. அப்படியாக செய்தால் மட்டுமே நாம் ஒவ்வொருவரும் எங்கெங்கு நிற்கிறோம் என்பது தெளிவாகும். இந்த நிலையில் மட்டும்தான் கருத்தொற்றுமை காண்பதும், அல்லது குறைந்தபட்சம் எமக்குள் உள்ள வேறுபாடுகள் எவை எப்பது பற்றியாவது எல்லைக் கோடுகளை நாம் கீறிக் கொள்வது சாத்தியப்படும். அப்படியாக செய்வதனால் மட்டுமே ஒருங்கிணைவதோ, அல்லது கூட்டு செயற்பாட்டிற்கான அடித்தளங்களை இடுவதோ சாத்தியப்படும். இதனால் நாம் நிறையவே பேசியாக வேண்டியுள்ளது, விவாதித்தாக வேண்டியுள்ளது.
மாற்று கருத்தை கொண்டிருப்பதற்கான உரிமையை ஏற்றுக் கொள்ள, ஆங்கிலத்தில் சொல்வார்களே Agree to Disagree என்று, அது போல. விட்டுக் கொடுக்க, தேவைப்படும் போது சமரசங்கள் செய்து கொள்ள நாம் புதிதாக கற்றுக் கொண்டாக வேண்டியுள்ளது. இன்னோர் அர்த்தத்தில் பார்த்தால் அரசியல் என்பது விட்டுக் கொடுப்பது, சமரசம் செய்து கொள்வது என்பவற்றின் மூலமாக கருத்தொற்றுமையை அடைய முயல்வது என்றும் வரையறை செய்யலாம் அல்லவா? ஆதலால் நாம் எல்லோரும் நிறையவே பேசியாக வேண்டியுள்ளது. அதிலும் அடுத்தவர் தமது கருத்தை முன்வைப்பதற்கான உரிமையை ஏற்றுக் கொள்ளுவதற்கு கற்றுக் கொண்டாக வேண்டியுள்ளது. ஒத்த நலன்கள் கொண்ட நட்பு சக்திகள் தமக்குள் விட்டுக் கொடுப்பது, சமரசம் செய்வது, இணக்கம் காண்பது என்பவை ஒன்றும் மோசமான குற்றச் செயல்கள் அல்ல. இவைதாம் மனித நாகரீகத்தின் அச்சாணிகள் என்ற புரிதல் வந்தால் அதுவே அரை கிணறு தாண்டியது போலத்தான்.
இப்போது நாம் தேசிய பிரச்சனையை அரசியல், கோட்பாட்டு தளத்தில் அணுகுவது பற்றிய பிரச்சனைக்கு வருவோம். நவீன சமுதாயத்தில் தேசத்திற்கு பொருத்தமான அரசியல் வடிவம் தேச – அரசு தான் என்பது அடிப்படையான அரசியல் உண்மையாக மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேசமும் தனக்கென தனியான அரசை கொண்டிருக்கும் போதுதான் அது தனது முழுமையான உள்ளாற்றலையும் வெளிப்படுதுவதும், உயர்ந்தபட்ச சுபீட்சத்தை அடைவதும் சாத்தியப்படுககிறது. மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவ புரட்சிகளின் பிரிக்க முடியாத ஒரு கூறாக தேச– அரசை நிறுவுவது நடைபெற்றது ஒன்றும் தற்செயலானதல்ல. இதற்கு மாறாக பல்தேச அரசுகள் நிலவ முடியாது என்பதல்ல. ஆனால் இப்படிப்பட்ட நிலையில் தேசங்களுக்கிடையில் தப்பெண்ணங்களும் (Prejudice), சண்டைகளும் சச்சரவுகளும் நிகழ்வது வழக்கமாகிவிடும். இது எவ்வாறு நடைபெறுகிறது என்று பார்ப்போம்.
அரசானது தனது சட்டங்களை முதலாளித்துவ ஜனநாயக நடைமுறைப்படி பெரும்பான்மை மூலமாக நிறைவேற்றுகிறது என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு சமூகமும் தான் பிறர் எனக் கருதும் சமூகங்கள் தொடர்பாக பல தப்பெண்ணங்களை (Prejudice) கொண்டிருப்பது இயல்பானதாகும். இப்படிப்பட்ட சூழலில், தேசங்களது எண்ணிக்கையில் மோசமான அசமத்துவம் நிலவும் பட்சத்தில், எண்ணிக்கையில் பலம் கூடிய ஒரு தேசம் ஏனைய தேசங்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் “ஜனநாயகபூர்வமாகவே” சட்டங்களை இயற்றுவதும், அவற்றை செயற்படுத்துவதும் சாத்தியமானதாகிறது. இங்கு நிகழ்வது முதலாளித்துவ ஜனநாயகம் அல்ல. மாறாக ‘பெருன்பான்மைவாதமாகும்’ (Majoritarianism). அதாவது, முதலாளித்துவ ஜனநாயகத்தை அதன் எழுத்துக்களின் அளவில் ஏற்றுக் கொண்டு, அதன் ஆத்மாவை சாகடிக்கும் செயலாகும். ஆனால் ஜனநாயகத்தில் இரண்டாம் தர பிரசைகள் என்ற கருத்தாக்கத்திற்கு இடமில்லையானால், இந்த முரண்நிலையை தவிர்ப்பது எவ்வாறு என்ற கேள்வி எழுகிறது அல்லவா?
இங்குதான் பல்தேச அரசுகள் தமது ஏற்பாடுகளை கவனமாக மேற்கொண்டன. அதாவது, முதலாளித்துவ ஜனநாயகமும் இருக்க வேண்டும், ஆனால், அது வெறுமனே பெரும்பான்மைவாதமாக குறுக்கப்படவும் கூடாது. இதனை சாத்தியப்படுத்துவதாயின் நாம் முதலில் ஒவ்வொரு தேசத்திற்கும் குறிப்பான விடயங்களையும், பொதுவில் எல்லா தேசங்களுக்கும் பொதுவானதும் என்று விடயங்களை பிரித்துக் கொண்டு, குறிப்பிட்ட தேசங்களுக்கு பிரத்தியேகமாய் அமைந்த விடயங்களை அந்தந்த தேசங்கள் மட்டுமே தீர்மானிப்பதாகவும், எல்லா தேசங்களுக்கும் பொதுவான அம்சங்களை பொதுவில் பெரும்பான்மை மூலமாக தீர்மானிப்பது என்றும் வரையறுத்தாக வேண்டியுள்ளது. இப்படியாக ஒவ்வொரு தேசத்தினதும் மொழி, கலாச்சாரம், பிரதேசம், பொருளாதாரம், கல்வி, அபிவிருத்தி போன்றவற்றை தனித்தனியே அந்தந்த தேசங்களே தீர்மானித்துக் கொள்வதாகவும், எல்லா தேசங்களுக்கும் பொதுவான அம்சங்களை மாத்திரம் எல்லா தேசங்களும் சேர்ந்து மத்தியில் தீர்மானிப்பதாகவும் ஒரு ஏற்பாட்டை கற்பனை செய்து கொள்வோமேயானால், அதுவே கூட்டாட்சி (Confederation), சமஷ்டி (Federal system), மாநில சுயாட்சி (Regional Autonomy) என்று வெவ்வேறு பெயர்களுடன், வேறுபட்ட அளவிலான அதிகாரப் பகிர்வு மத்திய – மாநில அரசுகளுக்கிடையில் நிலவும் ஏற்பாடுகளாக இருப்பதை நாம் காண முடியும்.
இந்த வகையான ஏற்பாட்டின் மூலமாக ஒவ்வொரு தேசமும் தனது தனித்துவ தன்மைகளை பேணிக் கொள்வதுடன், பல்தேசிய அரசில் இடம் பெறுவது சாத்தியப்படுகிறது. இந்த ஏற்பாடுகள், அந்தந்த நாடுகளில் “பிரிவினைவாதத்தை” தோற்றுவித்து விடவில்லை. மாறாக, இப்படிப்பட்ட ஒரு ஏற்பாட்டின் மூலமாக மட்டுமே அந்தந்த நாடுகளில் இருந்த தனியரசுக்கான கோரிக்கைகள் கூட தனிக்கப்பட்டன. ஆகவே பல்தேச அரசு என்பது வரலாற்றில் என்றுமே சாத்தியப்படாதது அல்ல. தற்போதும் நடைமுறையில் இருந்து வரும் ஒரு ஏற்பாடேயாகும். எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்கும் ஒரு தேசம் தானாக முன்கையெடுப்பதன் மூலமாக, எண்ணிக்கையில் சிறியனவாக இருக்கும் தேசங்களது சந்தேகங்களை களைந்து, அவர்களது பிரிந்து செல்வதற்கான சுயநிர்ணய உரிமையையும் உத்தரவாதப்படுத்துவதன் மூலமாகவே இப்படிப்பட்ட பல்தேச அரசுகளை சாத்தியமானதாக ஆக்கின. இப்படிப்பட்ட ஒரு விரிவான சுயாட்சிக்கான ஏற்பாடுகள் இல்லாதவரையில் தேசங்களுக்கிடையில் சண்டைகளும், சச்சரவுகளும் தோன்றுவதும், அது ஒரு கட்டத்தில் யுத்தங்களாக வெடிப்பதும் தவிர்க்கப்பட முடியாததாகிறது. சோவியத் யூனியனது தகர்வை அடுத்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற, இன்றும் தொடர்ந்து வரும் யுத்தங்களும் பேரழிவுகளும் இதற்கான சான்றுகளாக அமைகின்றன.
இலங்கையின் நிலைமைகளை எடுத்துக் கொண்டால் சிங்கள தேசத்தின் தலைவர்கள் இலங்கையை ஒரு பல்தேச அரசாக கட்டமைக்கும் அரசியல் முதிர்ச்சியும், தாராள மனப்பான்மையும் இல்லாதவர்களாக இருந்தார்கள். பொன். அருணாச்சலம் கோரிய கொழும்பு மேற்கு தமிழருக்கென தனித் தொகுதி விடத்திலேயே அந்த நம்பிக்கையை பேணத்தவறிவிட்டார்கள். இந்த கோரிக்கை ஒன்றும் ஒரு தேசம் தனக்கென தனிச்சலுகை கோரும் நோக்குடையது அல்ல. எண்ணிக்கையில் குறைந்த அல்லது குடிசன பரம்பலில் அல்லது வேறொரு காரணத்தால் தமது அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்காமற் போய்விடும் என்று ஒரு குறிப்பிட்ட சமூகம் பயப்படும் சந்தர்ப்பங்களிலெல்லாம் இப்படிப்பட்ட ஏற்பாடுகள் மூலமாகவே இந்த அச்ச உணர்வு களையப்பட்டுள்ளது. இன்று கூட இந்தியாவில் பெண்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் என்று விசேட தொகுதிகள் ஒடுக்கப்பட்டுள்ளன. மலையக மக்களது வாக்குரிமை மற்றும் பிரஜா உரிமை பறிப்பும் இந்த அரசியல் பிரதிநிதித்துவம் பற்றிய கணிப்பிலிருந்து பிறந்தவையாகும். இதன் மூலமாக தேசிய மற்றும் வர்க்கரீதியில் அவர்கள் தாக்கப்பட்டார்கள்.
தமிழர் தாயகத்தில் நடைபெற்ற சிங்களக் குடியேற்றம் என்பதும் முதலில் தமிழரது அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையில குடிசன பரம்பலை மாற்றியமைக்கும் (Altering Demographic Pattern) ஓர் நடவடிக்கைதான். ஆனால் இது ஒரு நாட்டின் பொருளாதார வளங்களை பகிரும் நடவடிக்கையாக நியாயப்படுத்தப்பட்டது. அப்படி பகிர்வதாயினும் அதனை செய்வதற்கு சிங்கள தேசம் தமிழ் தேசத்தின் அனுமதியை பெற்றாக வேண்டாமா? ஆனால் அப்படிப்பட்ட ஒரு சிந்தனையே சிங்கள அரசியல் தலைவர்களுக்கு சகிக்கமுடியாததாக இருந்தது. ஒருக்கால் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்ட பின்பு அது மூலவளங்களுக்கான போட்டியாக மாறி (Resourse War), அந்த பிரச்சனை இனக்கலவரத்தில் தமிழர்களை வெளியேற்றியதன் மூலமாக தீர்வு காணப்பட்டது. ஆயினும் முதலில் இதுவோர் தமிழரது அரசியல் பிரதிநிதித்துவம் பற்றிய பிரச்சனை என்பதும் பின்னர் ஒரு கட்டத்தில்தான் இது வளங்கள் பற்றிய போட்டியாக மாறியது என்பதும் வலியுறுத்தப்பட வேண்டியதொன்றாகிறது.
இப்படியாக அடுத்தடுத்து வந்த மொழி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம், ஒற்றையாட்சி மற்றும் சிங்கள பௌத்தர்களுக்கு முதலிடத்தை அரசியமைப்பின் மூலமாக வழங்கும் அரசியலமைப்புச் சட்டம் போன்ற அனைத்துமே இலங்கையின் பாராளுமன்றத்தில் “ஜனநாயக பூர்வமான” செயற்பாடுகளின் ஊடாகவே நிறைவேற்றப்பட்டனவாகும். அவ்வாறே, இந்த பிரச்சனைகள் தொடர்பாக சட்ட மற்றும் காவல் துறையின் பாதுகாவல் தேடுவதற்கு தமிழர் எடுத்த முயற்சிகளின் போதும் இந்த அமைப்புக்களும் சிங்கள அமைப்புக்களே என்பதை நிரூபிக்கும் விதத்திலேயே அவை நடந்து கொண்டன. இந்தவிதமான ஒடுக்கு முறைகளுக்கு எதிராக தமிழ்மக்கள் ஜனநாயகரீதியாகவும், அகிம்சை வழியிலும், வெகுஜனப் போராட்ட வடிவலுமே தமது ஆரம்ப எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இவையெல்;ம் அரசினால் வன்முறை கொண்டு நசுக்கப்பட்ட நிலையிலேயே எதிர்ப்பியக்கங்களும் வன்முறை வடிவத்தைப் பெற்றன. இறுதியில் அது சென்று முடிந்த இடம் பற்றி பலரும் மிகவும் அதிருப்பியுறுவது புரிந்து கொள்ளத்தக்கதே. ஆனால் தமிழ் மக்கள் அடாவடியாக வன்முறையை நாடினார்கள் என்ற கருத்து தவறானது என்பதை குறித்துக் கொள்வது அவசியமானதாகிறது.
முதலாளித்துவ புரட்சிக்கு முந்திய காலத்தில் மக்கள் படிப்பறிவு அற்றவர்களாகவும், தமது மொழி, கலாச்சாரம் பற்றிய போதிய விழிப்புணர்வு அற்றவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பொதுக்கல்வி, சர்வஜன வாக்கெடுப்பு நிகழும் சமூக அரசியல் சூழலில் இப்படிப்பட்ட அடக்குமுறைகள் அவர்களுக்கு சகிக்கவொண்ணா நிலைமைகளை இலகுவில் தோற்றுவித்து விடக்கூடியவை ஆகின்றன. மக்களது ஜனநாயகபூர்வமான எதிர்ப்பியக்கங்கள் வன்முறை கொண்டு நசுக்கப்படும் பொழுது அவை தன்னியல்பாகவே ஆயுதம் தாங்கிய வடிவை பெற்று விடுகின்றன. இதுதான் வரலாறு திரும்பத் திரும்ப படிப்பிக்கும் பாடமாகும். மக்கள் எவ்வளவு மோசமாக தோற்கடிக்கப்பட்டாலும், அவர்களது போராட்டத்திற்கு அடிப்படையான ஒடுக்குமுறைகள் தொடரும் வகையில் அவர்கள் யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போராட்டங்கள் திரும்பத் திரும்ப வெடிக்கவே செய்யும். இப்போது இன்னமும் தீவிரமாக, கடந்த கால படிப்பினைகளுடன் இன்னமும் எச்சரிக்கையுடன் இது நிகழவே செய்யும். ஆகவே பகுத்தறிவுடன் சிந்திப்பவர்கள் இந்தவிதமான போராட்டங்களை நசுக்குவது எப்படி என்று சிந்திப்பதிலும் பார்க்க, இந்த போராட்டத்திற்கு திரும்பவும் இட்டுச் செல்லக் கூடிய நிலைமைகளை தணிப்பது எப்படி என்றுதான் சிந்திக்கத் தலைப்பட வேண்டும்.
இப்போது நாம் எம்முன்னுள்ள பிரச்சனைக்கு வருவோம். இன்று தமிழரது போராட்டம் புலிகளது தலைமையில் இவ்வளவு மோசமாக தோற்கடிக்கப்பட்ட நிலையில் நாம் எப்படிப்பட்ட தீர்வுகளை நோக்கி நகரப்போகிறோம் என்பதுதான் இப்போதுள்ள பிரச்சனையாகும். இன்றுள்ள நிலைமையில் மகிந்த ராஜபக்ஷவினால் ( உத்தியோகப்பற்ற விதத்திலும் ஒருவித ஜனரஞ்சக பாணியிலும்) முன்வைக்கப்படும் தீர்வான தமிழரும், சிங்களவரும், முஸ்லிம்களும் தமக்குள் திருமண உறவுகளை மேற்கொள்வது, எல்லா மக்களும் நாட்டின் எந்த பிரதேசத்திலும் சுதந்திரமாக குடியிருப்பதற்கான உரிமைகளை உள்ளடக்கிய ‘ஒன்றுகலப்பது’ (Assimiliation) தொடக்கம், தனியான அரசை அமைப்பது வரையிலான பல தரப்பட்ட தீர்வுகளும் இங்கே சாத்தியமானவைதாம். கூட்டாட்சி, சமஷ்டி, மாநில சுயாட்சி, வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைந்த, தனித்தனியாக பிரிந்த சுயாட்சி அலகுகள், மாவட்ட சபைகள், உதவி அரசாங்க அதிபர் பிரிவு மற்றும் கிராம அளவிலான அதிகாரப் பகிர்வு ஆகியவை உள்ளடக்கிய பல தரப்பட்ட விதமான, பல தரப்பட்ட அளவிலான அதிகாரப்பகிர்வு மாதிரிகளையும் ஒருவர் இங்கு கருத்திற் கொள்ள முடியும். ஆனால் இங்கு பிரச்சனை என்னவென்றால், தனியான ஒரு அரசை நிறுவது என்ற ஒரு முடிவைத்தவிர ஏனைய எல்லா தீர்வுகளுமே எண்ணிக்கையில் பெரும்பான்மையாக உள்ள, அரசதிகாரத்தை தனது கைகளில் வைத்துள்ள சிங்கள தேசத்தின் நல்லெண்ணம் மற்றும் முன் முயற்சியிலேயே தங்கியுள்ளன.
இப்போதுள்ள பிரச்சனை என்னவென்றால், இலங்கைளில் தேசிய பிரச்சனை என்ற ஒன்று இருப்பதையே ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களுடன், சமஷ்டி என்ற சொல்லையே அசூசையாக நினைப்பவர்களுடன், வடக்கு – கிழக்கு மாகாணங்கள் பிரிந்த நிலையில் கூட அந்தந்த மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் நிலம் தொடர்பான அதிகாரங்களை வழங்க மறுப்பவர்களுடன் எவ்வளவு தூரம் சமரசம் செய்து கொள்ளலாம் என்பதுதான். (இந்த இடத்தில் நாம் மேற்கு நாடுகளில் சாதாரண சிறிய நகரங்களுக்கே பொலிஸ் மற்றும் நில அதிகாரங்கள் இருப்பதை ஒரு ஒப்பீட்டுக்காக குறித்துக் கொண்டு செல்வோம்) இங்கு பிரச்சனை தீர்க்கப்படுவதற்கு ஒடுக்கப்படும் தேசம் விரும்பினால் மட்டும் போதாது. ஒடுக்கும் தேசம் தன்னிடம் நியாயமற்ற முறையில் குவித்துக் கொண்டுள்ள அதிகாரங்களை கைவிடத்தயாராக இருக்க வேண்டும். ஒடுக்கும் தேசம் இப்படிப்பட்ட ஒரு முடிவை தானாக முன்வந்து எடுப்பதற்கான நிலைமைகள் தற்போது இலங்கையில் இல்லை என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருப்பதாக தோன்றவில்லை. ஆனால் இந்த நிலைமைகளை மாற்றியமைக்கும் விதத்தில் நாம் ஏதாவது செய்வது சாத்தியமா? அப்படியானால் அந்த பணியை எங்கிருந்து தொடங்கலாம் என்பதில்தான் எமக்குள் கருத்த வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த வேறுபாடுகளை களைவதற்கு நாம் தீவிரமாக உழைத்தாக வேண்டியுள்ளது. குறைந்தபட்சம் இந்த வேறுபாடுகளுடன் நாம் கூட்டு செயற்பாடுகளை ஒரு குறிப்பிட்ட அளவிற்காவது மேற்கொண்டு கூட்டுத்தண்டனைக் குள்ளாக்கப்பட்டிருக்கும் (Collective punishment) வன்னி மக்களது இன்றைய அவலங்களை குறைக்க முடியுமா என்றாவது சிந்திக்காவிட்டால் வரலாறு எம்மை மன்னிக்காது என்பதை நாம் மறந்துவிடலாகாது.
இத்தோடு இன்னொரு விடயத்தையும் நான் தொட்டுச் செல்வது அவசியம் என்று நினைக்கிறேன். இன்றை விவாதங்களில் பேசப்படும் ஒரு குறிப்பான விடயம் தொடர்பாக எனது கருத்தை சொல்வது அவசியம் என்று கருதுகிறேன். கடந்த காலத்தில் ஆயுத போராட்டம் நடத்தப்பட்ட விதம், அது கொண்டுவந்து விளைவுகள், இறுதியில் அது தோற்கடிக்கப்பட்ட விதம் என்பவற்றை பார்க்கும் பலரும் வன்முறை மற்றும் வன்முறையற்ற போராட்ட வடிவங்களை ஒன்றிற் கொன்று எதிரெதிரானவையாக வைத்துப் பார்க்கும், இவற்றுள் ஒன்றை முற்றாக நிராகரித்து மற்றொன்றை மாத்திரம் ஆதரிக்கும் போக்கு தென்படுகிறது. இது ஆரோக்கியமான ஒரு போக்கல்ல என்பதுதான் எனது கருத்தாகும். இதன் அர்த்தம் நான் கடந்த கால படிப்பினைகளை நிராகரிப்பதாகவோ அல்லது இன்றுள்ள மக்களதும், செயற்பாட்டாளர்களதும் உணர்வுகளை புரிந்து கொள்ள மறுப்பதாகவோ அர்த்தப்படுத்தப்படக் கூடாது. ஆனால் அவ்வப்போது போராட்டத்தில் ஏற்படும் வெற்றி – தோல்விக்கு ஏற்ப, போராட்டத்தின் வேகம் எழும் – தணியும் நிலைமைக் கேட்ப எமது கொள்கைரீதியான முடிவுகள் அமையக் கூடாது என்ற கருத்தையே நான் இங்கு வலியுறுத்த முனைகிறேன். ஒரு மக்கள் கூட்டம், தேசம் தனது உரிமைகளை வென்றெடுக்க தன்னிடமுள்ள அத்தனை சாதனங்களையும், வழிமுறைகளையும் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை உடையது என்பதை மறந்துவிடக் கூடாது. மால்கம் எக்ஸ் (Malcom X) கூறியது போல, தேவைப்பட்டால் அத்தனை வழிகளிலும் போராடுவதற்கான உரிமை (If necessary by any means) ஒவ்வொரு சமூகத்திற்கும் இருக்கிறது.
கடந்த காலத்தில் தவறு எங்கு நேர்ந்தது என்றால், போராட்டத்தில் வடிவங்களை அதிகாரப்படிநிலைப்படுத்தியதில்தான். நாம் ஆயுதப் போராட்டத்தையும் ஏனைய போராட்ட வடிவங்களையும் ஒன்றிற்கொண்று எதிரெதிரானவையாக பார்த்தோம். அவற்றுள் ஆயுத போராட்டமே உயர்ந்தது என்றும், இறுதியில் அதுவே ஒரே போராட்ட வடிவம் என்று ஆகிவிட்டது. இப்போது நாம் பெற்ற தோல்வியின் பின்பு அடுத்த கோடிக்கு செல்லும் போதும் அதேவிதமான இன்னொரு தவறைத்தான் மேற்கொள்கிறோம். என்னை பொறுத்தவரையில் போராட்ட வடிவங்கள் ஒவ்வொன்று அவற்றிற்கே உரிய பாத்திரத்தை கொண்டவையாகும்: ஒன்றிற் கொன்று துணையானவை: ஒன்றையொன்று நிரப்பிச் செல்பவை (Compoimentary). போராட்டத்தின் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு போராட்ட வடிவங்கள் முதன்மை பெறும். வரலாற்று நிலைமைகளும், மக்களது எழுச்சியின் தன்மையும், ஏன் எதிரியின் நடவடிக்கைகளும் போராட்ட வடிவங்களை தீர்மானிக்கக் கூடியவையாகும். இவற்றுள் ஒன்றை விலையாகக் கொடுத்து மற்றொன்றை முன்னெடுக்க முனைவது மீண்டும் ஒரு தோல்விக்கே இட்டுச் செல்லக் கூடியதாகும். இது குறித்து எச்சரிக்கையாக இருப்பதும், இந்த பிரச்சனைகள் குறித்தும் விவாதங்களில் கவனத்தை குவிப்பதும் அவசியமானதாகிறது.
சரி இப்போது அரசியல் தீர்வு பற்றிய விடயத்திற்கு வருவோம். சிறீலங்கா அரசுகள் கடந்த பல தசாப்தங்களாக தாம் அரசியல்ரீதியான தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைக்க முயன்று வருவதாக பாசாங்கு காட்டி வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு தீர்வுத் திட்டத்தை வரைவது என்ன ஒரு காரிய சாத்தியமற்ற ஒரு விடயமா என்று யோசித்துப் பார்ப்போம். குறைந்த பட்சம் தமிழ் மக்கள் தரப்பில் இதுவரையில் பலவிதமான முன்மொழிவுகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை தேர்ந்தெடுத்து, தமிழ் மக்கள் முன்
அவற்றை வைத்து அதனை அவர்கள் சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாக தேர்வு செய்ய விடுவதில் கொள்கைரீதியாக எனக்கு பிரச்சனைகள் ஏதும் இருப்பதாத தோன்றவில்லை. இதற்கு முன் மாதிரிகள் இலங்கை அரசியலிலேயே ஏற்கனவே நிகழ்ந்துள்ளன. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண சபை அமைப்பில், கிழக்கு மாகணம் வடக்கு மாகாணத்துடன் இணைந்து இருப்பதா இல்லையா என்பதை இரண்டு வருடகாலத்தில் கிழக்கு மாகாண மக்கள் சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாக தீர்மானிக்கலாம் என்று முன் மொழியப்பட்டு இருக்கிறது. இதே நியாயம் தமிழ் மக்கள் ஒரு தேசம் என்ற வகையிலும் கூட சாத்தியமானதுதானே. தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் எப்படிப்பட்ட அரசில் ஒழுங்கமைப்பிற்குள் சேர்ந்திருக்க விரும்புகிறார்கள்: அல்லது முற்றாக தனியான அரசை அமைப்பதுதான் அவர்களது அரசியல் முடிவாக இன்னமும் இருக்கிறதா என்பதை கண்டறிவது ஒன்றும் காரியசாத்தியமற்ற விடயம் அல்லவே? இது சர்வதேச ரீதியில் கூட அங்கிகரிக்கப்பட்ட நடைமுறையே. கிழக்கு தீமோர் உட்பட அன்றாடம் பல தேசங்கள் இந்த விதமான தீர்வை நோக்கி சர்வதேச அனுசரனையுடன் முன்னேறி வருகின்றன.
இங்கே தேவைப்படுவது பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற அரசியல் முனைப்பேயன்றி, சாத்தியப்பாடுகள் பற்றிய பிரச்சனை அல்ல. இலங்கையில் தேசிய பிரச்சனை என்ற ஒன்றே கிடையாது என்று சாதிக்க முனைபவர்கள் மத்தியில் இதனை சமாதானபூர்வமாக தீர்வுகாண முடியுமா என்பது கேள்விக்குறியதே. இப்படியாக அரசியல் தீர்வை சிங்கள தேசத்துடன் இணக்க பூர்வமாக அடைவது சாத்தியப்படாதபோது நாம் எமது முயற்சிகளை சர்வதேச அளவிற்கு நகர்த்துவது தவிர்க்க முடியாததாகிறது. அடுத்த கட்டமாக தமிழர் தாயகத்தை சர்வதேச சமூகத்தின் பொறுப்பில் ஒப்படைக்குமாறு கோருவதும், சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ், ஆயுதங்கள் களையப்பட்ட ஒரு அமைதியான சூழ்நிலையில் தனிநாடு அமைப்பது உட்பட விரிவான அரசியல் தீர்வுகளை உள்ளடக்கிய அரசியல் தேர்வுகளின் ஒரு பட்டியலில் இருந்து தமிழ் மக்கள் தாம் தமது பிரச்சனைகளுக்கு உண்மையான தீர்வாக அமையும் என உறுதியாக நம்பும் ஒரு முடிவை நோக்கி நகரவும், அந்த ஜனநாயகபூர்வமான தேர்வை சிறீலங்கா அரசு அங்கிகரித்தாக வேண்டும் என்ற நிலைமையை தோற்றுவிப்பதை நோக்கி நாம் முன்னேற முடியும்.
இப்போதும் கூட நாம் இலங்கையில் சிங்கள தேசத்துடன் ஒரு முறையாக அதிகாரப்பகிர்வுடன் கூடிய அரசில் தீர்வை எட்டுவது கொள்கையளவில் சாத்தியமானதே. ஆனால் இது ஒற்றையாட்சி அமைப்பு என்பதன் கீழ் ஒருபோதும் சாத்தியப்பட மாட்டாது. சிங்கக் கொடி உட்பட, சிங்கள பௌத்தத்திற்கு முதலிடம் வழங்கும் அரசியலமைப்பு போன்ற அனைத்தையும் சிறீலங்கா அரசு ஒரு பல்தேச கூட்டாட்சி அமைப்பினை நோக்கி மாற்றிக் கொள்ள முன்வருவது இந்த அரசியல் தீர்வு எதற்கும் முன்னிபந்தனையாகிறது. அதற்கான அரசியல் மனத்திட்பம் (Political Will) சிங்கள தேசத்திடம் இருக்கிறதா என்பதே இப்போதுள்ள பிரச்சனையாகும். சிங்கள தேசத்திடம் இப்படிப்பட்ட ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவது, அது முடியாத போது தமிழர் தாமே சுயாதீனமான ஒரு அரசியல் ஒழுங்கமைப்பை நோக்கி முன்னேறுவது என்பதே இப்போது எம்முன்னுள்ள தேர்வுகளாகும். இதில் எந்தவிதமான ஒரு முடிவை நோக்கி நாம் முன்னேறுவதாக இருப்பினும் முதலில் தமிழர் தம்மை அரசியல்ரீதியாக ஒழுங்கமைத்துக் கொள்வது அவசியமானதாகிறது. இதுவே இப்போது எம்முன்னுள்ள உடனடிப்பணியாகிறது. அதனை தொடங்குவதற்கே நாம் ஒரு விரிவான கருத்துப் பரிமாற்றத்தை உடனடியாக தொடங்கியாக வேண்டியுள்ளது.
kumar
கட்டுரை படிக்கும் போது பாதி அமிர்தலிங்கம் பாதி சந்ததியார் நினைவுக்கு வருகின்றனர். தமிழீழம் ஏன் வேண்டும் என அமிர்தலிங்கம் பேசியதும் அதன் பின்னர் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க புளொட் இயக்கம் ஏன் வேண்டும் என்று சந்ததியாரும் அந்தக்காலத்தில் பேசியவையே நினைவுக்கு வருகின்றன. கட்டுரையாளரிடம் நிறைய எதிர்பார்த்தேன். ஆனால் அவர் ஏமாற்றிவிட்டார். ஆனால் கட்டுரையாளர் ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ள தவறிவிட்டார். நாம் இப்போதும் 1983ஆண்டு அரசியல் அரிவரி வகுப்பு நிலையிலேயே இருப்பதாக எண்ணி எமக்கு பாடம் எடுக்க முனைந்துவிட்டார்.
தயவுசெய்து மீண்டும் தமிழீழம் போன்ற கோசங்களை முன்வைத்து தமிழ் சிங்கள உழைக்கும் மக்களின் ஜக்கியத்திற்கு உலை வைக்காதீர்கள். இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் எதிரிதான்.இல்லை என்றால் 1989ம் ஆண்டு அறுபதாயிரம் சிங்கள மக்களை கொன்று குவித்திருப்பார்களா?
மேலும் தமிழீழம் கிடைத்தாலோ அல்லது சுயாட்சி கிடைத்தாலோ அனைத்துப்பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று மக்கள் மத்தியில் ஒரு கற்பனையை விம்பத்தை உருவாக்காதீர்கள். இவற்றின் மூலம் இனப்பிரச்சனை மட்டுமே ஓரளவு தீரும் என்பதையும் ஆனால் அனைத்துப் பிரச்சனைக்கும் மூல காரணமான வர்க்க முரண்பாட்டை புரட்சி முலமே தீர்க்க முடியும் என்ற உண்மையை தயவு செய்து மறைத்து விடாதீர்கள்.
thambi
ஜான் நீங்கள் சொன்னது அவ்வளவம் சரி எல்லா இயக்கங்களுக்குமே கைகள் நிறையவே இரத்தங்கள் உண்டு இன்னும் சொல்லப்போனால் மிகச் சிறிய குட்டி இயக்மான பேரவை கூட தன்கு வேண்டியவர்களை வேறு ஒரு குட்டி இயக்மான ரிஎன்ஏ என்ற தம்பா இயக்கம் மூலம் கொலை செய்துள்ளது ஆனால் பின்நாட்களில் தமக்கும் அந்தமாதிரியான கொலைகளக்கும் சம்பந்தமில்லை என பேரவை சொல்லித்திரிந்ததும் தாங்கள் புரட்சிகர இயக்கம் என்றும் மாக்ஸீயவாதிகள் என சண்முகதாஸனையும் விளையாடிவிட்டு ஒளிந்து கொண்ட இயக்கம்.
இன்று மக்களின் தேவைகள் நிலைமைகள் ஒரு பக்கமும் அதற்கான செயற்ப்பாடுகளும் பல வழிகளிலும் நடைபெறுகின்றது அதற்கு அடுத்த பக்கத்தில் அரசியல் உரிமைகளுக்கான போராட்டம் எது எப்படி இருப்பினும் நாம் 1980 களின் நிலைப்பாட்டை திரும்ப பார்க்வும் அதை விமர்சிக்கவும் தேவையுள்ளதும் அன்று தொடுக்கப்பட்ட உரிமைப்போரின் கேள்விகள் இன்றும் பொருந்துமா? அல்லது அந்த அடிப்படைகளை மீண்டும் சிலவேளை அரசிடன் ஒரு உடன்பாட்டில் ஏற்ப்படுத்திக் கொள்ள முடியுமா? என்றெல்லாம் சிந்திக்கவும் கூடிப் பேசி முடிவுகள் எடுக்கவும் அவசியமான உரையாகவே நான் கருதுகிறேன்.
இணைந்து பேசுவோம் இணைந்து செயலாற்றுவோம் இப்படிப்பட்ட கூட்டங்களை தேசம் தொடர்ந்து செய்ய வேண்டுகிறேன்
மேலும் குமார் போன்றோர் பல வருடங்களாகவே இந்த குழப்பல் வேலைகளை செய்கிறார்கள் இவர்கள் வர்க்கப் புரட்ச்சி என்பார்கள் ஆனால் கூடிப்பேச கிடைத்தசந்தர்ப்பங்களில் கலந்து கொண்டு தமது வர்க்கப் புரட்ச்சி வழிவகை என்ன எப்படி முன்னெடுப்பது என்று கருத்துக்களை சொல்லமாட்டார்கள் இவர்கள் வேலைக்கு போகாத வீணர்கள் தொழிலாளர்களின் பிரச்சினைகளை கதைப்பது போல் இருக்கும்.
kumar
தம்பிக்கு! அகிம்சை என்று கூறிய த.வி.கூட்டனியே புலிகள் மூலம் பல கொலைகளை செய்ததாக அறியும்போது ஆயதபோராட்டத்தை முன்னெடுப்பதாக கூறிய பேரவை இயக்கம் கொலை செய்தது என்பது ஒன்றும் ஆச்சரியமானது அல்ல.ஆனால் அவர்கள் எந்தஒரு சக போராளியையும் கொன்றதாக நான் இதுவரை அறியவில்லை.
கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து சொல்லாவிட்டால் நான் குழப்பல்வாதி என்று அர்த்தம் என்றால் நான் குழப்பல்வாதி என்பதை மிக்க சந்தோசத்தோடு ஏற்றுக்கொள்கிறேன்.
மாயா
கொலை செய்பவனை விட கொலை செய்ய தூண்டுபவனே மாபெரும் குற்றவாளி. அப்படியானவர்களை நல்லவனாக்க குமார் முயல்வதாக தெரிகிறது. பிரபாகரன் ஒன்று இரண்டு கொலைதான் செய்தார். அதுவும் தெரியாத வயதில். அடுத்த கொலைகள் ஏனையவர்காளால் செய்யப்பட்டது. எனவே பிரபாகரன் நிரபராதி.
இது மாதிரிதான் நம் போராட்டம்.(பார்த்து மகிழுங்கள்)
http://www.oneminute.ch/uploads/images/winner09/03.mov
பல்லி
//மாற்று கருத்தை கொண்டிருப்பதற்கான உரிமையை ஏற்றுக் கொள்ள, ஆங்கிலத்தில் சொல்வார்களே ஆக்ரே டொ Dஇசக்ரே என்று, அது போல. விட்டுக் கொடுக்க, தேவைப்படும் போது சமரசங்கள் செய்து கொள்ள நாம் புதிதாக கற்றுக் கொண்டாக வேண்டியுள்ளது. இன்னோர் அர்த்தத்தில் பார்த்தால் அரசியல் என்பது விட்டுக் கொடுப்பது, சமரசம் செய்து கொள்வது என்பவற்றின் மூலமாக கருத்தொற்றுமையை அடைய முயல்வது என்றும் வரையறை செய்யலாம் அல்லவா? ஆதலால் நாம் எல்லோரும் நிறையவே பேசியாக வேண்டியுள்ளது. அதிலும் அடுத்தவர் தமது கருத்தை முன்வைப்பதற்கான உரிமையை ஏற்றுக் கொள்ளுவதற்கு கற்றுக் கொண்டாக வேண்டியுள்ளது. ஒத்த நலன்கள் கொண்ட நட்பு சக்திகள் தமக்குள் விட்டுக் கொடுப்பது, சமரசம் செய்வது, இணக்கம் காண்பது என்பவை ஒன்றும் மோசமான குற்றச் செயல்கள் அல்ல. இவைதாம் மனித நாகரீகத்தின் அச்சாணிகள் என்ற புரிதல் வந்தால் அதுவே அரை கிணறு தாண்டியது போலத்தான்//
உங்களது நல்ல முயற்ச்சி அனைத்துக்கும் பல்லியின் அத்துழைப்பு என்றும் உண்டு, ஆனால் நீங்கள் மேலே சொல்லிய ஜக்கியத்துக்கு விட்டு
கொடுப்புக்கு என்னும் ஒரு முப்பது வருடம் வேண்டாமா?? இதைதான் அன்று நீண்டகால யுத்தம் என சொன்னார்களா?
தம்பி, குமாரது கருத்தில் உங்களுக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம்; அதுக்காக வீட்டில் இருந்து எழுதுபவர்கள் குழப்பவாதிகள் என ஆதங்கபட்டு ரகுமானின் ஜக்கியத்துக்கு ஆரம்பத்திலேயே முற்றுபுள்ளி வைக்கபடாது; பலர் கூட்டம் கூடியதால்தான் தமிழருக்கு இன்று இந்த அரியவாய்ப்பு (வன்னி சிறை) கிடைத்தது; குமார் போல் கருத்து சொல்பவனெல்லாம் குழப்பவாதியெனில் அதை மகிழ்ச்சியுடன் சொல்வதில் பல்லியும் உடன்படுகிறது; ஆனாலும் உங்கள் ஜக்கியத்துக்கு இடையூறு இல்லாமல் எம்கருத்தை சொல்ல முனைகிறோம்;
alagan
சிங்கள தேசம் சிங்கள் தேசம் என்று ரகுமான் ஜான் சொல்லுகிறாரே. எழுபது வருடமாக சிங்கள எதிர்ப்பு பேசி அரசியல் செய்த தமிழ் தலைவர்கள் தமிழரை ஏமாற்றினார்கள்.
தமிழருக்கு தேவை அதிகாரம் அல்ல அபிவிருத்தி. அடுத்த சில வருடங்களில் ராஜபக்சே சகோதரர்கள் தமிழ் பிரதேசங்களை அபிவிருத்தி செய்து தமிழரை முன்னேற்றுவார்களா?
கிணத்தடியில் குளித்துக்கொண்டிருந்த என் மகளை உடுத்த உடுப்போடு கடத்தி களத்தில் பலி கொடுத்தனர் பிள்ளைபிடிகார புலிகள். அன்று ஆயிரக்கணக்கில் பிள்ளை பிடித்த புலிகளின் புது தலைவனையே இன்று கடத்தி இருக்கிறார்கள் இலங்கை படைகள். தன் வினை தன்னை சுடும்
thambi
குமார் பல்லி இருவருக்கும்
நான் சொன்னது வர்க்கப் புரட்ச்சி செய்ய வேண்டும் என்று எழுதிக் கொண்டிராமல் தற்போதுள்ள சூழ்நிலையிலிருந்து எப்படி வர்க்கப் புரட்ச்சியை முன்னெடுப்பது என்பதை தாம் தமது கட்சிகளினுடாக அல்லது பொது கூட்டஙகளை நடாத்திஎன்றாலும் இன்றுள்ள நிலைமைகளிலிருந்து தொடர்ந்து என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்ல அல்லது தமது பாதையை தெரிவுபடுத்த வேண்டும் என்பதேயாகும். இந்த அரத்தத்திலேயே நான் எழுதினேன் இதை திரிவுபடுத்தி, மாற்றி குமார் சொன்னதை பல்லி நீங்கள் தொடரந்து விட்டீர்கள்.
தமிழரின் முன்னெடுப்புக்கள் யார் செய்தாலும் வரவேற்கத்தானே வேணும். இதை யார் செய்தாலும் சரி யார் தற்போது முன்வருகிறார்கள் எல்லோரும் வீட்டில் இருந்து கொண்டு எழுதினால் சரி என்று இருக்க முடியாதே இதை பிழையாக விளஙக வேண்டாம் இதை வேறு திசைக்கு எடுத்துப்போக வேண்டாம்.
suganthy arumugam
Normally i do not subscribe to “the thesamnet” point of view, but john’ speech is very very good.very good intellectual exercise. thanks for publishing it.
Jeevan
ரகுமான் ஜான் இன்னமும் சிங்கள அரசு… சிங்கள அரசு…. என்று முப்பது வருடமாக இரத்தம் தோய்ந்த இனவாத அரசியல் குண்டு சட்டிக்குள்
குதிரை விடுகிறார். இலங்கை அரசு இராணுவ, அரசியல் ரீதியாக மாறி விட்டது. பங்கருக்குள் இருந்த பிரபாவுக்கும் இது விளங்கவில்லை!!
ரகுமான் ஜானுக்கும் இது இன்னமும் புரியவில்லை!!!
Ramanan
சிங்கள எதிர்ப்பு மட்டும் தான் தமிழருக்கு தெரிந்த ஒரே அரசியல். இதற்கு ரகுமான் ஜானும் விலக்கல்ல என்பது அவரின் பேச்சு உறுதி செய்கிறது
chandran.raja
ஜீவன் ரமணன் கருத்தை நான் முழுமையாக ஆமோதிக்கிறேன். இந்த தவறை நானும் பல தடவை பாவித்திருக்கிறேன். இது சிறு தவறல்ல. மாபெரும் தவறு. இப்படியான வார்த்தை பிரயோகங்களில்லிருந்து தான் இனதுவேஷ மனப்பான்மையே வளர்ச்சி அடைகிறது. இலங்கையரசு நாம்மெல்லாம் அதற்குட்பட்டவர்களே. இதில் அவதானம் கொள்வோம்.
visva
புளட் ரகுமான் ஜானின் பேச்சை விட புளட் சித்தார்த்தனின் கொழும்பு தமிழ் சங்க பேச்சில் உள சுத்தியும் நேர்மையும் சமகால பிரச்சனைகளை புரிந்து கொள்ளும் பக்குவமும் இனி செய்ய வேண்டியது பற்றிய தெளிவும் தெரிகிறது.
அண்மைய வவநியாவ தேர்தல் முடிவு சித்தார்த்தனுக்கு கிடைத்த பிடரிஅடி போல இருக்கு. இப்ப சரியா கதைக்கிறார்.
பல்லி
ரகுமான் அவர்களுக்கு உங்களது சிந்தனை செயல்பாடு ஒருங்கினைப்பு சீர்திருத்தம் அனைத்துமே அந்த வன்னிமக்களை பாதுகாக்க அல்லது சிறைமீக்க ஆக இருந்தால் வரவேற்க்கலாம், ஆனால் பேரினவாதம் இளம்பிள்ளைவாதம் என பளய பல்லவியில் புதிய சரணத்தை புகுத்தி என்னும் சில லட்ச்ச மக்களை சிறை கைதிகளாக மாற்றி இழப்பின்றி விடிவு இல்லை என்னும் காலைகடன் சமாசாரமாக மாற்றிவிடாமல் தங்களை போன்ற அனைத்தும் அறிந்த அனுபவசாலிகள் அந்தமக்களுக்கு ஏதாவது செய்யமாட்டீர்களா? என ஏங்கும் பலரில் பல்லியும் ஒருவன், உங்களது கட்டுரைக்கு பின்னோட்டம் விடுவதே பல்லியின் மேதாவிதனம் என்பதை பல்லி அறியும், ஆனாலும் மக்களுக்கு சதகமாக இல்லாவிட்டால் எந்த தீர்வு மீதும் பல்லியின் விமர்சனம் வருவது வழமையாகி விட்டது,இருப்பினும் உங்களை போன்றோரிடம் இருந்துதான் எமது இனத்துக்கு சாதாரன விடிவாவது கிடைக்க வேண்டும் என்பது பல்லியின் அவா,அதுக்காக எமது ஒத்துழைப்புகள் என்றும் தங்களை போன்றோருக்கு உண்டு,
karan
”பொதுப்புத்தி என்பது விஞ்ஞானபூர்வமான கோட்பாட்டினால் அறிவொளியூட்டப்பட்டது அல்ல. மாறாக ஆதிக்க சித்தாந்தத்தினால் அறிவுறுத்தப்படுவது ஆகும். ஆதிக்க சக்திகள் தமது அதிகாரப்படிநிலைகளை பேணிக் கொள்ளும் விதத்தில் பல கருத்துப் படிமங்களை கட்டமைத்து அவற்றை தமது கைகளில் உள்ள வெகுஜன சாதனங்களின் துணை கொண்டு ஜனரஞ்சகப்படுத்தி வைத்துள்ளது. இந்த வகையான கருத்துப்படிமங்களே எமது பொதுப்புத்தியில் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கின்றன.”
சிலருடைய கருத்துகள் இலங்கை அரசின் மகிந்த சிந்தனையின் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளது போலவே உள்ளது. ஜான் மாஸ்ரரின் தமிழீழமே தீர்வு என்ற கோட்பாட்டு ரீதியான அணுகுறை பற்றிய எதிர்விவாதத்தை யாராவது முன்வைப்பது ஆரோக்கியமாக அமையும். குமார் அது பற்றி விரிவாக எழுதலாமே.
பல்லி நீங்கள் மேலோட்டமான விமர்சனங்களை மட்டுமே வைக்கிறீர்கள். சற்று ஆழமாக கருத்தக்களை வைத்து ஜான் மாஸ்ரரின் கருத்தில் எங்கு முரண்படுகிறீர்கள் என்று கூறமுடியுமா?
Tharnalingam
புளட் தீப்பொறி போன்றவற்றில் ரகுமான் ஜான் இருக்கும்போது தான் விட்ட தவறுகளை ரகுமான் ஜான் சுய விமர்சனம் செய்திருந்தால் அது மிகவும் முன் மாதிரியாக இருந்திருக்கும்.
Rajmohan
சிங்கள எதிர்ப்பு பேசியே தமிழன் தமிழனை அளித்து விட்டான். இனியாவது தமிழ் நாட்டு சினிமா அரசியலை நம்பாமல் எமக்காக உண்மையாக குரல் கொடுக்கும் எத்தனையோ சிங்கள சகோதரர்கள் இருக்கிறார்கள் அவர்களுடன் சேர்ந்து ஜனநாயகத்தையும் நமது நாட்டையும் கட்டி எழுப்புவோம்.
நாம் இலங்கையர்கள்
நமது நாடு இலங்கை
எனது மொழி தமிழ்
மாயா
நாம் இலங்கையர்கள்
நமது நாடு இலங்கை
எனது மொழி தமிழ்
– Rajmohan
நல்ல ஆதங்கம்.
பார்த்திபன்
Rajmohan
மாயா இது நல்ல ஆதங்கமல்ல. நல்ல ஆரம்பம். இது தற்போதைய தேவையும் கூட.
chandran.raja
இதை ஆரம்பமாகக் கொள்ளாவிட்டால் தமிழ்சமூகம் விருத்தியடையாத சமூகமாக இருப்பதோடு இந்தியா தவிர்ந்த வேறுநாடுகளின் தேவைக்காக பாவிக்கப்படுவதோடு முழுஇலங்கைக்கும் அழிவைத் தேடியவர்கள்ளாவோம்.
BC
Rajmohan
நாம் இலங்கையர்கள்
நமது நாடு இலங்கை
எனது மொழி தமிழ்
நன்றி ராஜ் மோகன். நான் நினைக்கவில்லை. வருந்துகிறேன். இது தான் உண்மை.
பல்லி
நாம் இலங்கையர்கள்
நமது நாடு இலங்கை
எனது மொழி தமிழ்
இந்த எண்ணம் உள்ளவர்களாலேயே அவதிபடும் மக்களை பற்றியும் சிந்திக்க முடியும்; இதில் ஒன்று தவறுமாயினும் பேரினவாதமோ இளம்பிள்ளை வாதமோ வந்துவிடும், எமது வமர்சனம் அனைத்தும் சம்பந்தபட்ட நிர்வாகத்துக்கும் தலமைக்குமே ஒழிய இனத்துக்கெதிரானது அல்ல; இதை ரகுமான் கவனித்தில் எடுப்பாரென நம்புவோம்;
BC
இயற்கையின் சூட்மத்தை உணரக் கூடிய தன்மையும் பல்லிக்கு உண்டு என்று சொல்கிறார்கள். இந்த தன்மை எங்கள் பல்லிக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன்.
kumar
கம்யுனிஸ்ட்டுக்கள் கட்சி கட்டுவதையே குறிக்கோளாக கொண்டு செயற்படுவர். ஆனால் அவர்கள் கட்சியில் யார் யார் உள்ளனர் என்பதையோ அமைப்பு வடிவங்கள் பற்றியோ வெளியில் விளம்பரப்படுத்த மாட்டார்கள். எதிரி தெரிந்து கொண்டால் அழித்துவிடுவான் என்பதால் அவர்கள் அதை இரகசியமாக வைத்திருப்பர்.
yoganathan
சரியாகச் சொன்னீர்கள். குமார் அவர்களைத்தான் சொல்லுறது கள்ளக் கொமியூனிஸ்டுக்கள் என்று.
kuru
ஒரு புதிய அமைப்பின் தேவை நோக்கிய ரகுமானனின் அரசியல் பார்வை சரி எனின் இது பற்றி தொடர்ந்து ஒரு விவாதம் தேவை ஆகவே இது பற்றி தமது கருத்தினை குறிப்பாக மேலே கருத்து சொன்னவர்கள் தங்களின் அரசியல் நிலைப்பாடு என்ன? எந்த விடயத்தில் நீங்கள் முரண்படுகின்றீகள் என வாசு, குமார், சுகந்தி போறன்வர்கள் தெரிவ்தால் நல்லது
பல்லி
குமார் எப்போ ஒரு மனிதன் தான் தானாகவே இருக்கிறானோ அவந்தான் உன்மையான கமினிஸ்ட், பல்லி பல்லியாகவும் குமார் குமாராகவும் இருப்போமேயானால் எந்த நாட்டிலும் அவலங்கள் ஏற்படாது; ஆனால் பல்லி என்று குமாராக செயல்பட நினைக்கிறதோ அன்றுதான் பாஸிசமோ பாயாசமோ தொடங்குகிறது,
கமினிஸ்ட் என்றாலே (திருப்பதிக்கு லட்டுபோல்; புலிக்கு கொலை போல்; தேசத்துக்கு பின்னோடம் போல் ,சங்கரியருக்கு கடிதம் போல், தோழருக்கு பதவி போல் தமிழருக்கு இன்னல்கள் போல், ஏன் பல்லுக்கு கடுப்பு போல்)நினைவுக்கு வருவது ரஸ்யா ,சீனா தான் ஆனால் அங்குதான் உலகத்தின் கொடூரமான எண்ணம் கொண்ட மாவியா புகுந்தவீடு மாறி பிறந்த வீடு மாறி குடும்பம் நடத்துவதை பலரோடு பல்லியும் அறிவேன்;
ஒரு காலத்தில் எம்மினம் பாடபுத்தகமான (புவியியல் சரித்திரம்) அதில் மட்டுமே உலகத்தையும் உலக நடப்பையும் பார்த்தோம்; அரியாலை மக்களுக்கு ஆனைபந்தி தெரியாது, அரசடி மக்களுக்கு ஆவரங்கால் தெரியாது; ஆனால் இன்று அமெரிக்கா முதல் அவுஸ்ரேலியாவரை சின்ன சின்ன தெருக்கள் கூட எம்மவர்க்கு அடிக்கடி பேசப்படுவதாயிற்று, ஆக அன்று கமினிஸ்ட் கிலோ நல்ல விலைக்கு விற்றது என்னமோ உன்மைதான், ஆனால் இன்று நெல்லசன் மண்டலோவே அமெரிக்கா போகத்தான் ஆசைபடுகிறார்; தனது கடைசி காலத்தை அங்கு முடிக்க, கமினிஸ் பாண்டியன் பிரபாகரனின் ரசிகனாம்; இப்படி பல ஏதார்த்த கதைகளை பல்லி சொல்லும்; ஆனால் அதை விட்டு எம்மவர்க்கு ஏதாவது செய்ய அனைத்த்கையும் துறந்து மனித நேயத்துடன் செயல்படுவோம்; இனையுங்கள் இஸம் இன்றி;
பல்லி
//பல்லி நீங்கள் மேலோட்டமான விமர்சனங்களை மட்டுமே வைக்கிறீர்கள். சற்று ஆழமாக கருத்தக்களை வைத்து ஜான் மாஸ்ரரின் கருத்தில் எங்கு முரண்படுகிறீர்கள் என்று கூறமுடியுமா?//
கரன் முரன்படும் நேரம் இதுவல்ல; விட்டு கொடுப்புடன் அனைவரும் செயல்பட வேண்டிய காலம் இது, இது எமக்கான கள மேடையல்ல, எம்மினத்தின் தூக்கு மேடை, ஆகவே இதில் பல்லி விட்டு கொடுப்புடனேதான் எழுதுவேன், பல்லியை பொறுத்தமட்டில் மக்கள்நலன் பற்றியே சிந்திப்பேன், எழுதுவேன், அனைத்தையும் விமர்சிக்கும் அறிவு எனக்கில்லை; ஆனால் ரகுமான் சார்ந்தோர் 26 ஆங்கில எழுத்தில் மூன்றையோ அல்லது நான்ங்கையோ எடுத்து ஒரு அமைப்புகட்ட முன்பட்டால் கண்டிப்பாக விமர்சிப்பேன், ஆனால் அவர்கள் தமிழரின் தலைஎழுத்து பற்றி சிந்தித்து அதுக்கான உடனடி தேவைகளை பூர்த்தி செய்ய ஒன்றினைந்தால் கருத்து முரன்பாடுஇன்றி இனைந்து செயல்படுவேன்; இருப்பினும் பின்னதே அவர்கள் சிந்தனையாக இருக்கும் என பல்லி நம்புகிறேன்;
Shanmugarajah
அன்று மங்கையற்கரசி சிங்களவனின் தோலில் செருப்பு தைத்து போடவேணும் என்று சொல்லி இனவாதம் வளர்த்தா!!!! இப்போ சிங்கள தேசம் சிங்கள தேசம் என்று சொல்லி இனவாத நெருப்புக்கு எண்ணெய் ஊத்துகிறார் ரகுமான் ஜான் !!!!!!!!
senthil
திரு.பல்லி உடனடி தேவைகளை பூர்த்தி செய்ய ஒன்றினைந்தால் கருத்து முரன்பாடுஇன்றி இனைந்து செயல்படுவேன்;…. நட்புடன் செந்தில்
chandran.raja
சிங்களவனின் தோல்லில் செருப்பு தைத்துபோட வேண்டும் என்று ஒருகாலமும் நான் சொன்னதாகக் கேட்டதில்லை. தமிழனின் தோலில் செருப்பு தைத்து போட வேண்டும் என்பது ஒரு சிங்களஅரச தலைவரின் மேடைப்பேச்சு. வாக்கு வசூலிப்பு. இனவாதத்தை கக்கி இனவாதத்தை வளர்த்து விட்டதுதான் எமது கடந்த கால தமிழ் தலைவர்கள் தமிழ்மக்களுக்கு செய்த பணி. இதன் வளர்ச்சின் ஒட்டுமொத்தத்தையும் தம்பி பிரபாகரன் எழுதிச்சென்றுவிட்டார். இதில்லிருந்து எப்படி மீழ்வது என்பதே தமிழரின் அதாவது ஈழத்தமிழரின் இன்றையக் கேள்வி.
பல்லி
// உடனடி தேவைகளை பூர்த்தி செய்ய ஒன்றினைந்தால் கருத்து முரன்பாடுஇன்றி இனைந்து செயல்படுவேன்;…. நட்புடன் செந்தில்:://
இப்படி பல செந்தில்களும் பல்லிகளும் எம்மினத்துக்காக பாடுபடவோ அல்லது உதவவோ முரன்ன்பாடு இன்றி தயாராகத்தான் இருக்கிறார்கள், ஆனால் பலரும் அமைப்பு என்னும் பூதத்தை காட்டி மிரட்டுவதால் யாருடன் வேலை செய்வது என பயப்பிடுகிறார்கள், காரனம் பலர் நெருப்பை தொட்டவர்கள் (அமைப்பில் இருந்தவர்கள்) ஆகவேதான் பல்லி அடிக்கடி நட்புடன் செயல்படுவோம் ,எமக்கு தலையும் வேண்டாம் உளவுதுறையும் வேண்டாம் என ஓலமிடுகிறேன்; நன்றி செந்தில்;
பல்லி
நன்றி BC; எங்கள் பல்லி என உனர்ந்ததுக்கு; பல்லியின் ஆசையும் அதுவே, எங்கள் மக்கள் எங்கள் இனம், எங்கள் பிரச்சனை என நாம் அனைவரும் கருத்து முரன்பாடுகளுக்கு அப்பால் அந்த அப்பவியாக அனாதைகளாக ஆதரவின்றி இருக்கும் மக்களை நேசிப்போம்; இந்த எண்ணம் எம்மிடம் துளிர் விட்டாலே, தாமும் இந்த உலகத்தில் வாழ முடியும் என்னும் நம்பிக்கை எமது மக்களுக்கு வந்துவிடும்; காவிரி என்ன கொல்லடம் என்ன வேறுநதிகள் அல்ல, என்னும் வரிகள்தான் பல்லியின் நினைவில் வருகிறது, எமது சிந்தனைகள் ஒன்றுதான் ஆனால் வேறு வேறு பாதையில் போக துடிக்கிறோம் என்பதே உன்மை;
maniam
சந்திரன் ராஜா!!
மங்கையட்கரசியின் சிங்களவனின் தோலில் செருப்பு தைத்து போட வேணும் என்று
முற்றவெளியில் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் முழங்கும் போது
முன் வரிசையில் நின்று கேட்டு உணர்ச்சி வசப்பட்ட
கேவலமான அனுபவம் எனக்கு உண்டு
chandran.raja
இருக்கலாம் மணியம். மனிதத்தோல்லில் செருப்பு தைக்கிற கண்டுபிடிப்பு சிங்கள இனவாதியையே சாரும். முப்பத்தைந்து வருடத்திற்கு முற்பட்டது.
பல்லி
மங்கயர் அரசி சொல்லி இருந்தால் அது அவர் சார்ந்த அரசியலாகதான் இருக்குமே ஒளிய எம்மவர் அப்படி எண்ணம் கொண்டவர்கள் அல்ல (இதில் புலி இல்லை) ஆனால் ஒரு சிங்கள தலமை சொன்னால் அது அந்த இனத்தின் வேதவாக்கு, சிங்கள அரசுக்காக எத்தனையோ தமிழ்அமைப்புகள் வக்கிலாக செயல்படுகின்றனர்; ஆனால் எமக்காக எம்மினத்துக்காக வன்னி மக்களுக்காக எத்தனை சிங்கள தலமை குரல் கொடுக்கின்றன; சந்திரன் ராசா எம்மை விட(பல்லியை) புலியை விமர்சிப்பவர் ; பல நாட்டு அரசியல் தெரிந்தவர்(பார்க்க அவரது பின்னோட்டங்களை) ஆனால் அவரே இன்று அரசுமீது விமர்சனம் கொள்வதை ஏன் ஏற்றுகொள்ள உங்களால் முடியவில்லை, தேசத்தின் நிலைபாடு எமக்கு தெரியாது, ஆனால் நாம் அந்த மக்களுக்கு என்ன வில்லன்களா? ஆகவே நண்பர்களே புலியை கண்டிப்போம்; அரசை விமர்சிப்போம்;
முன்னாள் பொரளி
இயற்கையின் சூட்மத்தை உணரக் கூடிய தன்மையும் பல்லிக்கு உண்டு என்று சொல்கிறார்கள். இந்த தன்மை எங்கள் பல்லிக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன்………. BC என்னசொல்ல வருகின்றீர்… இங்கு? பல்லி உமது பாணி தொடரட்டும்
ஏ.எம்.எம். நௌசாட்
ஒரு நாட்டின் பிரஜையாக உரிமைகளை கோரும்போது கடமையும் அதனுடன் இணைந்துள்ளதை யாரும் மறக்கக்கூடாது. நாட்டின் பிரஜைகளின் கடமைகள் தேசப்பற்று, ஜனநாயத்தைப்பேணுதல், பல்லின சமுகத்தின் பண்மைகளுக்கு இடைஞ்சல் இல்லாமல் தமது மதத்தையும் கலாச்சாரத்தையும் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுதல் என்பவற்றை உள்ளடக்கும்.
ஒரே நாடு, இலங்கையர் என்ற ஒரே இனம் என்று இன்றையத் தேசத்தலைவர் எங்கும் பேசி வருகின்றார். அப்படியாயின் சிங்களவரோ, தமிழரோ, சோனகரோ, மலாயரோ யாவருமே இந்நாட்டின் பிரஜைகள் என்ற குடையின் கீழ் ஒன்றுபடுகின்றனர். இதன்படி ஒரு பிரஜைக்குறிய உரிமைகள் எல்லாம் பாரபட்சமின்றி வழங்கப்பட வேண்டும். இதுவே முஸ்லிம்களின் நியாயமான அபிலாஷையுமாகும்.
இலங்கையின் இனங்களுக்கிடையே ‘சந்தேகமற்ற சூழ்நிலை’ இதனூடாக உருவாகுமேயானால் அதுவே போதுமானது. சிறுபான்மை இனங்கள் நிராகரிக்கப்படாத சூழ்நிலை உருவாக வேண்டும். அதற்கு அரசியலமைப்பு ரீதியான உறுதிப்படுத்தல் வேண்டும். இதற்காக தமிழ், சிங்கள, முஸ்லிம் சமுகங்கள் கலந்துரையாட வேண்டும்.
இலங்கையில் சமுகங்களுக்கிடையில் சந்தேகமான சூழ்நிலை தவிர்க்கப்பட வேண்டும்
80 வருடங்களுக்கு முன்னர் பெங்காலி எழுத்தாளரும் கவிஞருமான Pramatha Chauduri அவர்கள் சொல்லியதை நினைவு கூற விரும்புகிறேன்.
‘ஒரு நாட்டினை நேசிப்பதென்பது அந்நாட்டு மக்களை நேசிப்பதாகும் ஏனெனில் ஒரு மனிதன் அடுத்த மனிதனை நேசிக்கிறான். எவராவது ஒரு ஆத்மாவை அன்றி மன்னை விரும்புகிறானோ அவன் ஒரு உயிருள்ள மனிதன் அல்ல ஒருபொருள் இன்னொன்றை கவர்வது இரக்கமற்றதும் கண்மூடித்தனமானதும் என விஞ்ஞானம் ஒரு விதியைக் கூறுகிறது. சிந்தனை ரீதியிலும் மொழி இணைப்பாலும் ஒரு பெங்காலி இன்னொரு பெங்காலியின் உறவினர் ஆவான். அவனது எண்ணத்தில் மொழி இனைப்பென்பது இரத்த உறவாகும்’.
chandran.raja
அரசை விமர்சிப்பது எப்பவும் ஆரோக்கியமானது. அந்த விமர்சனம் மனிதநேயத்தை உதட்டளவில் முனுமுனுத்துக் கொண்டு ஆதாயத்தை மட்டும் குறிகோளாகக் கொண்டு வல்லாதிக்க சக்திகள் இலங்கை அரசியல் உலாவரும் போது உங்கள் விமர்சனம் அவர்களுக்கு உதவுமாகயிருந்தால் அது சதியல்லவா? விமர்சனம் ஆகுமா?
நீண்டகாலம் நடந்த வன்முறையை முடிவுக்கு கொண்டுவர எந்த தமிழ்மகனாலும் சக்தியில்லாதபோது… தமது அரசியல் சூனியத்தில் இலங்கையின் பலபகுதிகளிலும் தற்கொலை குண்டதாரிகளை ஏவி சின்னாபின்னப்படுத்தி இலங்கையை தீபற்றி எரியும் என்று அச்சுறுத்தல் விடும் போது
மக்களே அச்சபீதியில் அடங்கியெடுங்கும் போது அதை எதிர்கொள்ளாது விட்டால் அவன் நாட்டுக்கு தலைவனாக இருக்க அருகதையில்லாதவனே!இதை தான் பல்லாயிரம் ஏழை இராணுவவீரர்களை அர்ப்பணித்து தான் ஒரு தலைவன் என மகிந்தாராஜபக்சா நிரூபித்துள்ளார்.
சரி. மகிந்தா ராஜபக்சா பாசிஸசக்தியாக வரையறுத்தவர்கள் நிறையவே இருக்கிறார்கள். . மகிந்தாவை நீக்கிவிட்டு அந்த இடத்தில் யாரை அமரவைக்கப் போகிறீர்கள்?. ஒரு ரணில். ஒரு சோமவம்சா. புத்தமதத்தின் ஞானத்தைப் புரிந்துகொள்ள முடியாத ஒரு புத்தபிக்குவையா? அல்லது புலத்தில் ஒருகுழு தயாராக இருக்கிறதா? அரசைப் பொறுப்பெடுப்பதற்கு?
ஆகவே எஞ்சியவை இவையே. குண்டுவீச்சு விமானங்கள் செல்லடி இடப்பெயர்வு நாளை இராணுவம் கொல்லுதா எமதுவிடுதலைப்படை என கருதியவர்கள் எம்மை கொல்லுகிறார்களா? என்ற அச்சநிலையில்லிருந்து மக்கள் மீண்டுவந்திருக்கிறார்கள் குற்றம்மில்லாதவர்களும் சிலசமயம் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதை எண்ணுபோது வேதணையை இல்லாமல் இருக்கமுடியுமா? கடந்த காலத்தை ஒப்பிடும்போது இவைமிகையல்லவே!
இந்தியா பர்மா இந்தோனிசியா பிலிப்பையின் இலங்கை போன்ற நாடுகளில் லஞசம் ஊழல் கொலை புதியதல்லவே!இவற்றின் ஊடாகத்தான் இடைத்தங்கல் முகாமில்லுள்ளவர்களையும் அரசியல்சிறை கைதிகளையும் காணவேண்டியாகவுள்ளது. ஆத்திரப்படாமல் பொறுமை காப்பதும் தொடர்சியான பேச்சுவார்த்தைகளை அரசுடன் தொடர்ந்து நடத்துவதிற்கு வாய்புகளை தேடிக் கொள்வது தான் இன்றைய கடமை எனநினைக்கிறேன்.
பல்லி
//இந்தியா பர்மா இந்தோனிசியா பிலிப்பையின் இலங்கை போன்ற நாடுகளில் லஞசம் ஊழல் கொலை புதியதல்லவே!இவற்றின் ஊடாகத்தான் இடைத்தங்கல் முகாமில்லுள்ளவர்களையும் அரசியல்சிறை கைதிகளையும் காணவேண்டியாகவுள்ளது. ஆத்திரப்படாமல் பொறுமை காப்பதும் தொடர்சியான பேச்சுவார்த்தைகளை அரசுடன் தொடர்ந்து நடத்துவதிற்கு வாய்புகளை தேடிக் கொள்வது தான் இன்றைய கடமை எனநினைக்கிறேன்.//
சந்திரா, இதில் பல்லியும் உடன்படுகிறேன் ஆனால் அந்த பேச்சுவார்த்தை மக்களுக்காக இருக்கவேண்டும்; ஏதோ ஒரு அமைப்பை வளம்படுத்தவோ அல்லது வளர்க்கவோ இருக்குமாயின் அது காலபோக்கில் எம்மினத்தின் சண்டியர்கள்(அரசியல்) தொடர வாய்ப்பு இல்லையா? எனக்கு நான் எழுதுவது சரியோ தவறோ தெரியவில்லை, அது பற்றி ஆய்வு செய்யும் ஆற்றலும் எனக்கில்லை, ஆனால் எம்மினத்தின் மீது சவாரிசெய்ய யார் முற்பட்டாலோ அல்லது நினைத்தாலோ அவர்களை நான் விமர்சிப்பேன், அது அவர்கள் செயலை தடைபடுத்தா விட்டாலும் தடங்கலாக இருக்கும் என்பது என் எண்ணம்; பல்லி அரசின் எதிரியல்ல, தமிழ் மக்களின் நண்பன் என்பதால்;
கேதீஸ்வரன்
கள்ளக் கடத்தலும் கொலை செய்யவும் மட்டுமே தெரிந்தவனிடம் போராட்டத்தை குத்தகை கொடுத்து விட்டு அதை குறை சொன்னவனை எல்லாம் துரோகி என்று போட்டு தள்ள பேசாமல் இருந்து விட்ட நாங்கள் தான் இன்றைய அவலத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். பலி எடுக்கவும் பலி கொடுக்கவும் மட்டுமே தெரிந்த புலிகள் பிணங்களை வைத்து பணங்கள் சேர்த்தனர். பிண கணக்கை காட்டி தம் வங்கி கணக்கை வளர்த்தனர்.
santhanam
இன்றைய புலம்பெயர் தேசத்தில் வன்னியை மையமாகவும் பிரபா என்ற மாயை ஒன்றை வைத்து உருவாக்கபட்ட கட்டமைப்பு படும் பாட்டையும் உண்மையாக தேசத்திற்காக உழைத்தவர்கள் படும் மனவேதனையும். இப்பவும் அப்படியே அந்தகட்டமைப்பை வைத்து தமிழன் தழையில் சவாரி செய்ய என ஒரு குழு. அடுத்தவன் தலையை அறுத்து தாங்கள் முன்னுக்குவர ஒரு குழு தமிழனிற்குள் அன்றாட வாழ்வியலை கண்காணிக்க புலனாய்வு புண்ணாக்கு குழு. இது எங்க போய்முடியுமோ ஆண்டவா.
லோகன்
இலங்கை மக்களின் விடுதலைக்கான இரு களங்கள்
ஓகஸ்ட் 2ல் தேசம் நெற்றால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘தமிழர்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’ என்ற தலைப்பிலான சந்திப்பில் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்பகால உறுப்பினரும் பின்னர் தீப்பொறிக் குழுவாகச் செயற்பட்டவரும் தீப்பொறியின் வெளியீடாக அமைந்த உயிர்ப்பு சஞ்சிகையின் ஆசிரியருமான ரகுமான் ஜான் (ஜான் மாஸ்ரர்) ஆரம்ப உரையை வழங்கினார். இவ் உரைமீதான எனது தெறிப்பு.
பொதுவான வேலைத்திட்டங்களிற்கான முன்னணிகளுக்கும் (குறுகிய கால- நீண்டகால; அரசியல் – அரசியலற்ற ; இன்னும் பிற )
போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்கான கூட்டுமுயற்சிக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு.
முன்னணியின் நடவடிக்கைகள் பகிரங்கமானவையும், வெளிப்படையானவையுமாகும். இங்கு இரகசியத் தன்மை இருக்கமுடியாது. முன்னணியில் அரசியலிலோ அல்லது பிற விடயங்களிலோ சித்தாந்த ஒற்றுமையோ, சிந்தனைமுறை ஒற்றுமையோ கட்டாயமானதல்ல. வேறுபாடுகள் அனுமதிக்கப்பட வேண்டும். வேலைத்திட்ட ஒற்றுமைமட்டுமே கட்டாயமானது.
ஆனால் அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்கான கூட்டோ முன்னணிகளைப்போல் இது ஊர் கூடித் தேரிழுக்கும் வேலையுமல்ல, அம்பலத்திலாடும் நடனமுமல்ல, சித்தாந்தச் சமரசம் நிலவும் மயானமுமல்ல. இவற்றிற்க்கெல்லாம் நேரெதிரானது. இன்றைய நிலையில், இக்களத்தில் ஆயிரம் பூக்கள் சுயமாக மலரும், இவை தத்தமக்குள் பல்வேறு மட்டங்களில் ஓர் உறவையும் பகமையையும் பேணியபடி வளரும். சில பூக்கள் வாடி வதங்கும், சிலவை மலரும் முன்னரே உதிரும், சில பூக்கள் ம்னிதர்களாலும் விலங்குகளாலும் அழிபட்டுப்போகும். சில பூக்கள் பல பூக்களை உள்வாங்கிக் கொள்ளும் (assimilate) , நூற்றுக்கணக்கான பூக்கள் ஒன்றிணைந்து ஒரு சில பூங்கொத்துக்களாகும் (intigration). தேசிய/ சமுக/ வர்க்க விடுதலை எவ்விதம் ஒரு கடினமான, அலைஅலையான போராட்டமோ அதேபோன்றதுதான் அதற்கான அமைப்பை உருவாக்குவதற்கான போராட்டமுமாகும்.
நடத்தப்பட்ட கலந்துரையாடலில் ஜான் அவர்களின் உரை இந்த இரண்டில் எதற்கானது என்று தெரியவில்லை. குறைந்தபட்ச்ச வேலைத்திட்டம் என்பது ஒரு ஐக்கிய முன்னணிக்கான வேலைத்திட்டமே. ஒரு தேசமா? இரு தேசமா? என்பது ஒரு விவகாரமல்ல (issue) அது ஒரு நிகழ்ச்சிப்போக்கு (phenonmina). இது ஐக்கிய முன்னணிக்களத்தில் விவாததிற்குரிய ஒரு கருப்பொருளல்ல. ஏனெனில் ஐக்கிய முன்னணி எப்போதுமே விவகார மையமானது (issue oriented). உள் இடப் பெயர்வு மக்களின் துயர்துடைப்பு ஒரு விவகாரம். அதுபற்றி இன்னும் விரிவாகப் பேசியிருக்கலாம். சில வேலைத் திட்டங்களையும் முன்வைத்திருக்கலாம்.
இலங்கை மக்களுக்கு இப்போது இரண்டு களங்களும் அத்தியாவசியமானதாக உள்ளது.
ஒன்று மாறுபட்ட கருத்துள்ளவர்கள் ஒரு வேலைதிட்டத்தின் அடிப்படையில் நண்பர்களாகிக் கொள்வதற்கான ஐக்கிய முன்னணிக் களம். இதுதான் மக்களின் உடனடி விவகாரங்களைக் கையாள்வதற்கான வினைத்திறன் மிக்க களமுமாகும்.
இரண்டு இலங்கைத்தீவில் ஒரு அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அரசியல் அமைப்புத் தொகுப்பை/ கட்டுமானத்தை ஏற்படுத்துவதற்கான/ வளர்தெடுப்பதற்கான களம். இக்களம் இருண்டதாகவோ/ வெறுமையானதாகவோ/ அவநம்பிக்கை ஊட்டுவதாகவோ இல்லை. இம்முயற்சியில் பலர் பற்பலவளிகளில், பற்பல துறைகளின் ஊடாக ஆர்வமுடன் ஈடுபட்டுவருவதை அறிய வேண்டியவர்கள் அறிந்தே உள்ளார்கள்.
70களாம் ஆண்டு, முன்னயதைவிட உயர்ந்த பரிமாணங்களுடன் மீண்டும் ஒருமுறை திரும்பியுள்ளது. வரலாற்றின் சுழல்நிலை வளர்ச்சித்தன்மை (spiral growth) நிரூபிக்கப்பட்டுள்ளது. 70களில் விட்ட தவறுகளை இத்தடவை விடாதிருப்போமாக. என்ன தவறு விட்டோம்?
1) ஐக்கிய முன்னணிகள்பற்றி போராளிகள் கணக்கில் கொள்ளவேயில்லை. தமிழ், சிங்களப் போராளிகள் தமது சொந்த அரசியல் கட்டுமானத்தையிட்டுத்தான், (அதிலும் தமது சொந்த இராணுவ அமைப்பை) அதிக நாட்டங்காட்டினாரகள். காலனிக்குப் பின்பான இலங்கையில் உருவான முதலாவது ஆயுதக் குளுக்களானபடியால் ஏற்பட்ட தற்பெருமை கண்களை மறைத்துவிட்டன. இனத்தையும்(த. வி. கு) வர்க்கத்தையும்(சிறிமா இடதுசாரிகள் ஊட்டணி) காட்டிக்கொடுத்த அரசியல் கூட்டணிகள் மீதிருந்த வெறுப்பு இதற்கோர் காரணமாக இருக்கலாம். அதேபோல் வெகுஜனவேலைகளை தமிழர் விடுதலைக் கூட்டணியிடமும்(த. வி. கு), சிறிலங்கா சுதந்திரக்கட்சியிடமும் விட்டுவிட்டார்கள். பாரளுமன்ற சந்தர்ப்பவாதிகளின் பித்தலாட்டங்களில் இருந்த வெறுப்பு வெகுஜன வேலைகளிலேயே வெறுப்பை உண்டாக்கியிருந்தது போலும்.
2) 70களில் இலங்கையில் நிலவிய வர்க்க மற்றும் தேசிய உறவுகளுக்கான காரணங்கள் பற்றிய ஆழமான, முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. தமிழ்ப் போராளிகள் பெளத்த சிங்களப் பேரினவாத அரசின் இனவாத நடவடிக்கைகளையும், அரச பயங்கரவாத நடவடிக்கைகளையும் ஒன்று விடாமல் பட்டியலிட்டு மனப்பாடம் செய்வதையே தமது அரசியல் கல்வியாகக் கொண்டிருந்தார்கள். நுளைவாசலுக்கு அப்பால் செல்லவில்லை.
சிங்களப் போராளிகளோ சந்தர்ப்பவாத இட்துசாரிகளின் துரோகம், இந்தியத் தேசவிஸ்தரிப்பு என்ற எல்லைகளுக்கு அப்பால் செல்லவில்லை. இரு போராளிகளும் ஆயுதம் கைமாறினால் அரசியல் அதிகாரம் மிகச் சுலபமாகக் கைமாறிவிடும் எனக் கருதியிருந்தார்கள்.
இலங்கையின் அனைத்துவகை முற்போக்கு அணியினரும் தற்போது பாராளுமன்ற சந்தர்ப்பவாதிகளையும் பார்த்துவிட்டார்கள், அரசிய- இராணுவவிய சந்தர்ப்பவாதிகளையும் பார்த்துவிட்டார்கள். சிங்களத் தேசியத்தினுதும், தமிழ்த் தேசியத்தினதும் நாசாகாரப் பரிமாணங்கள், முற்போக்குப் பரிமாணங்கள் ஆகிய இரண்டையும் பார்த்துவிட்டார்கள். இதனால் தீவிர இடது அல்லது தீவிர வலதுசாய்வுகள் இன்றிப் பயணிப்பதற்கான பட்டறிவு தழும்புகளும் அவர்களுக்கு உண்டு. அல்லவை நீக்கி நல்லவை எடுத்துக்கொள்ளும் அன்னப்பறவையின் திறனைப் பெற்றுக்கொண்டால் மீண்டும் எழுவதில் சிரமம் இருக்காது. அப் படிப்பினைகளை அரசியல் நெறிகளாக்கிக் கொள்ள முறையான கடுமையான புத்திபூர்வ பயிற்சிகள் மேற்க்கொள்ளப்பட வேண்டும். இப்பயிற்சிகள் வீட்டுவேலையாக (Home Work) நடத்தப்பட்டு பின்னர்தான் அரங்கத்திற்கு வரவேண்டும். அதாவது அனுபவத் தொகுப்பும் பகுப்பாய்வும் என்ற நிகழ்வு தன்னில் இருந்து ஆரம்பித்து கூட்டுக்கும் பின்னர் கூட்டில் இருந்து தன்னுக்குமான சுழற்சி முறையில் வளர்ச்சி பெறவேண்டும். தன் என்பது தனிநபர்களை மட்டும் குறிக்கவில்லை, ஒன்றுபட்டு வேலைசெய்த கூட்டையே குறிக்கிறது. அப்போதுதான் பூங்கொத்துகள் உருவாகும்.
அனுபவத் தொகுப்பும் பகுப்பும் மட்டும் போதாது, அது எம்மை மீண்டும் இருட்டில் அலைய வைத்துவிடும். அனுபவத்தைத் தொகுக்கவும் பகுக்கவும் எமக்கோர் ஆரம்ப அறிவு வேண்டும். பகுப்பு எமது அறிவை மேலும் வளர்க்கும். இது ஒரு சுழற்சியாகும். இந்த ஆரம்ப அறிவைப் பெற்றுக்கொள்வதில் இலங்கைப் போராளிகள் 70களில் நாட்டங்காட்டாம்ல் விட்டதுதான் தமிழ் பகுதியிலும் சிங்களப்பகுதியிலும் மிகப்பெரும் பேரளிவுகளுக்குக் காரணமாக இருந்துள்ளது. தற்போது நிறைந்த பட்டறிவு உள்ளது, நிறைந்த தொடர்புகள் உண்டு, நுட்பங்கள் நிறையத் தெரியும் ஆனால் தேவையான சமுக/ அரசிய- பொருளாதார அறிவோ சற்றேதான் வளர்ச்சியடைந்துள்ளது. இதனால் ஆழமான அறிவைப் பெறுவதற்கான கற்றலை ஒரு இயக்கமாக மேற்கொள்ள வேண்டும். சமுக ஆய்வுப் புலமையை வளர்ப்பதற்கான பட்டறைகள் நடத்தப்பட வேண்டும். இலங்கையின் சமுக உருவாக்கத்தின் இன்றைய நிலையையும், அதன் வரலாற்றுபூர்வமான வளர்ச்சியையும் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவை சாதாரண வாசகனுகும் புரியக்கூடிய நூல் வடிவம் பெறவேண்டும்.
தேசம் நெற்றின் முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்.
லோகன்27/01/2010