பாதுகாப்பு செயலாளரை படுகொலை செய்ய தயார் நிலையில் இருந்த தற்கொலை அங்கி மீட்பு

nimal_madiwaka.jpgபாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மீது தற்கொலை தாக்குதல் நடத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த தற்கொலை அங்கி உள்ளிட்ட பெருமளவு வெடி பொருட்கள் நேற்று கொழும்பிலுள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

மோதரை, மட்டக்குளிய வீடமைப்புத் தொகுதியிலுள்ள இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடியிலிருந்து தேசிய புலனாய்வுப் பிரிவினரால் இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

தற்கொலை குண்டுதாரி மோட்டார் சைக்கிளில் வந்து தாக்குதல் நடத்தும் விதத்திலேயே புலிகளினால் திட்டம் தீட்டப்பட்டிருந்தது அம்பலத்துக்கு வந்துள்ளதுடன் அதற்கேற்ற வகையில் அதி சக்திவாய்ந்த வெடி பொருட்கள் மற்நும் தற்கொலை அங்கிகளை கொழும்புக்கு கடத்தியிருப்பதாகவும் தேசிய புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாக பொலிஸ் பேச்சாளர் மெதிவக்க சுட்டிக் காட்டினார்.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வாகன அணிவகுப்பை இலக்கு வைத்தே இத்தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தாக்குதலின் போது பாதுகாப்புச் செயலாளர் காயங்களுக்கு உள்ளாகும் பட்சத்தில் அவரை எடுத்துச் செல்வதற்காக தயார் நிலையிலிருக்கும் அம்பியுலன்ஸ் வண்டி மீதும் குண்டுத் தாக்குதலை நடத்தவும் புலிகள் ஏற்பாடுகளை முன்னெடுத் திருந்தமையும் அம்பலமாகியிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். தற்கொலையங்கி உள்ளிட்ட அதி சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்ட தையடுத்து அவ்வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளரை இலக்கு வைத்து தற்கொலை தாக்குதலை நடத்துவதற்கிருந்த பிரதான சந்தேக நபரான தற்கொலை குண்டுதாரியையும் மோட்டார் சைக்கிளையும் தேடி பொலிஸ் வலை விரித்திருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

தேசிய புலனாய்வுப் பிரிவினர் கடந்த ஒரு மாதகாலமாக கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மேற்கொண்டுவரும் தேடுதல்களை அடிப்படையாக வைத்தே பொலிஸாரினால் நேற்று இந்த வீடு முற்றுகையிடப்பட்டு மேற்படி வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐந்து கிலோ நிறைகொண்ட தற்கொலையங்கி, இயந்திரத் துப்பாக்கி, அதற்குப் பயன் படுத்தப்படும் 125 ரவைகள், இரண்டு தோட்டா கேசுகள், 05 கிரனேற் கைக்குண்டுகள், 13 சயனைற் குப்பிகள், தற்கொலையங்கியில் பொருத்தும் 05 பற்றரிகள், ஒரு ரிமோட் கருவி, பல இடங்களுக்கும் கொண்டு செல்லக்கூடிய 02 ரிமோட் கருவிகள், 50 அடி நீளமான வயர் மற்றும் ஒரு டெட்டனேட்டர் ஆகியனவே நேற்று மட்டக் குளியிலுள்ள மேற்படி வீட்டின் அலுமாரிக்குள்ளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக விசேட பொலிஸ் குழு புலனாய்வு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மீது 2006 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி கொழும்பு கொள்ளுப்பிட்டியில் வைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆண் தற்கொலை குண்டுதாரியினால் நடத்தப்பட்ட மேற்படி தாக்குதலில் பாதுகாப்புச் செயலாளர் தெய்வாதீனமாக உயிர் தப்பினார். இதன்போது இருவர் கொல்லப்பட்டதுடன் 12 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *