2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் 18 ஆம் திகதி காலி துறைமுகத்தின் மீதான தற்கொலைத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட டோலர் படகு ஒன்றையும் லொறி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேற்படி தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையிலே இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க கூறினார்.
கடந்த 2006 ஒக்டோபர் 18 ஆம் திகதி காலி துறைமுகம் மற்றும் தக்ஷின கடற் படை தளத்தின் மீது புலிகள் தற்கொலை தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கடந்த ஜுலை 24 ஆம் திகதி வவுனியாவில் வைத்து கைதானார். மத்திய மாகாண புலனாய்வுப் பிரிவின் விசேட குழுவொன்றே இவரை கைது செய்தது.
மேற்படி சந்தேக நபரை தடுத்து வைத்து மேற்கொண்ட விசாரணையின் போது தாக்குதல் தொடர்பான பல தகவல்கள் வெளியானதாக பொலிஸ் ஊடகப் பேச் சாளர் கூறினார். இதன்படி 32 அடி நீளமான டோலர் படகு ஒன்று அம்பாந்தோட்டை மீன்பிடித்துறை முகத்தில் வைத்து மீட்கப்பட்டது. இதில் ராடார் உபகரணங்களும் காணப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.
இதேவேளை இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய லொறியொன்று அக்கரைப்பற்று பகுதியில் வைத்து மீட்கப்பட்டதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கூறினார்.
மேற்படி சந்தேக நபரை தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்னவின் கண்காணிப்பின் கீழ் பொவெல்ல பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி மேலதிக விசாரணை நடத்தி வருகிறார்.
5 இயந்திரப் படகுகளில் வந்த தற்கொலை புலி உறுப்பினர்கள் காலி துறைமுகத்தின் மீது மேற்கொண்ட தற்கொலை தாக்குதல் கடற்படையினரால் முறியடிக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு வந்த அனைத்து புலி உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் ஒரு மாலுமி இறந்ததோடு மேலும் 24 பேர் காயமடைந்தனர்.