புலிப் பயங்கரவாதத்தை தோல்வியடையச் செய்தது மட்டுமே எமக்குக் கிடைத்த உண்மையான வெற்றியென நாம் நினைத்துவிடக் கூடாது. நாம் இழந்தவற்றை மீண்டும் பெற்றுக்கொள்வதே உண்மையான வெற்றியாகும் என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தத்தின் முடிவும் சமாதானத்தின் உதயமும் எம்மத்தியில் சுபமான எண்ணங்களை ஏற்படுத்தவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
‘பிஸ்னஸ் டுடே’ சஞ்சிகை கொழும்பில் நடத்திய “பிஸ்னஸ் டுடே டொப் டென்’ நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னரான சமாதானத்தைப் பாதுகாத்து, நாட்டைக் கட்டியெழுப்ப நாமனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும்.
தம்மைப் பற்றிச் சிந்திப்பதற்கு முன்பதாக நாட்டைப் பற்றிச் சிந்திக்கவேண்டும். அப்போது தான், நாட்டுக்கான எமது கடமையைச் செவ்வனே நிறைவேற்ற முடியும். முப்பது வருட கால யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்து, நிலையான இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பயங்கரவாதத்தால் எமது நாட்டில் வர்த்தகம் வீழ்ச்சியடைந்தது. வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டார்கள். இதனால், எமது தொழிற்றுறைகளில் அபிவிருத்தியைக் காணமுடியவில்லை. புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். எனவே, அவர்களால் கிடைக்க வேண்டிய நன்மைகள், பங்களிப்புக்கள் என்பவற்றை நாடு இழந்தது.
எமது சமூக வியூகம் மாற்றமடைந்து, நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் நின்றுபோய், வன்முறைக் கலாசாரம் பயங்கரவாதத்தால் எமது நாட்டில் தோற்றுவிக்கப்பட்டது. இன்று பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது. எனவே, நாம் இழந்ததை, மீண்டும் பெற்றுக்கொள்ளும் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதுவே உண்மையான வெற்றியாகும் என்றும் அவர் கூறினார்.