கொழும்பில் மரணமான, மஸ்கெலியா தோட்ட யுவதிகள் இருவரின் சடலங்களைத் தோண்டியெடுத்து மீண்டும் பரிசோதனை நடத்துமாறு கொழும்பு மஜிஸ்திரேட் நீதவான் நேற்று (25) உத்தரவிட்டுள்ளார். இதற்கமைய நாளை (27) வியாழக்கிழமை காலை சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டு, மேலதிக பரிசோதனைக்காக கண்டி சட்ட வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றன. சடலங்கள் தோண்டியெடுக்கப்படும்போது ஹட்டன் மாஜிஸ்திரேட் நீதவான் பிரசன்னமாகியிருப்பார்.
யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக மலையக சமூக அமைப்புகள் தாக்கல் செய்த மனுவைப் பரிசீலித்தே கொழும்பு மாஜிஸ்திரேட் நீதவான் நேற்று சடலத்தைத் தோண்டியெடுக்க உத்தரவிட்டுள்ளார். இந்த மனுமீதான விசாரணைக்காக மலையகத்தைச் சேர்ந்த பத்து சட்டத்தரணிகள் கட்டணம் எதுவுமின்றி நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
மஸ்கெலியா லக்ஷபான தோட்டத்தைச் சேர்ந்த ஜீவராணி மற்றும் சுமதி என்ற இரு யுவதிகள் கொழும்பில் வீட்டுப் பணிப்பெண்களாகக் கடமையாற்றி வந்த நிலையில், கடந்த 16 ம் திகதி பெளத்தாலோக மாவத்தை கழிவு நீரோடைப் பகுதியிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டனர்.
இவர்களது சடலங்கள் மஸ்கெலியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன. இந்த யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவர்களின் பெற்றோர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்தே கண்டி மனித உரிமைகள் அமைப்பின் நெறிப்படுத்தலில், மலையக சமூக அமைப்புகள் இந்த மனுவைத் தாக்கல் செய்தன.