வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கமே கூடுதல் பங்களிப்பு செய்து வருகிறது.
அரச சார்பற்ற நிறுவனங்கள் அரசாங்கம் முன்னெடுக்கும் பணிகளுக்கு உதவி வருகின்றனவே தவிர முழுப் பொறுப்பையும் அவை மேற்கொள்வது கிடையாது என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று (26) நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை அரச சார்பற்ற நிறுவனங்களே கூடுதலாக நிறைவேற்றுவதாக சில தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த குற்றச் சாட்டில் எதுவித உண்மையும் கிடையாது.
இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை நிறைவேற்ற திறைசேரியினூடாக பெருமளவு நிதி ஒதுக்கப்படுகிறது. மருத்துவர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு தேவையான மருந்துகளும் அரசாங்கத்தினால் அனுப்பப்பட்டு வருகிறது.
முகாமில் உள்ள ஒருவருக்காக தினமும் தண்ணீர் வழங்குவதற்காக மாத்திரம் 150 ரூபா செலவிடப்படுகிறது என்றார்.