இலங் கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செனல்- 4 ஒளிபரப்பிய வீடியோ காடசி குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு முழுமையான நடவடிக்கை எடுக்கும் என தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது செனல் 4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட செய்தி ஒன்றைக் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கை இராணுவ வீரர்கள் நல்லொழுக்கத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்குகின்றவர்கள். பாரிய அர்ப்பணிப்புக்கும் தியாகத்துக்கும் மத்தியில் நாட்டுக்கு அவர்கள் பெற்றுத்தந்த வெற்றியை கொச்சைப்படுத்தும் வகையிலும் அவர்களுக்கும் நாட்டுக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் அந்த வீடியோ காட்சி போலியாகத் தயாரித்துக் காட்டப்பட்டுள்ளது.
அவ்வாறு காண்பிக்கப்பட்ட காட்சியை அரசாங்கம் முற்றாக மறுப்பதுடன் வன்மையாகக் கண்டிக்கிறது. எவ்வாறு முறையாக நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி எமது இராணுவ வீரர்கள் நன்கு அறிவார்கள். அவர்களின் சீரான நடத்தையையும் திறமையையும் கண்கூடாகக்கண்ட பல நாடுகள் அவர்கள் மூலம் தமது வீரர்களுக்கு பயிற்சி அளிக்க விரும்புகின்றன என அமைச்சர் மேலும் தெரிவித்தார்