வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களில் 58 இந்து குருமார் குடும்பங்களைச் சேர்ந்த 222 பேர் இராணுவத்தின் வழித்துணையுடன் இன்று யாழ்ப்பாணம் பயணமாகியுள்ளனர்.
அதேவேளை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய கிழக்கு மாகாண மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய 6 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேருக்கான பிரயாண ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்துள்ளனர்.
இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள இந்துமத குருக்கள் மற்றும் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்டவர்கள், முகாம்களில் இருந்து வவுனியா சைவப்பிரகாச மகளிர் மகாவித்தியாலயத்திற்கு அழைத்து வரப்பட்டு, நேற்றைய தினம், அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் திரட்டிய புள்ளிவிபரத் தகவல்களின்படி 177 குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்களைச் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
107 குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இந்து மத குருமார்கள் நேற்று இடைத்தங்கல் முகாம்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்குச் செல்வதற்கான பிரயாண ஒழுங்குகளை வவுனியா செயலக அதிகாரிகள் செய்துள்ளனர்.
இதேவேளை, உறவினர்களோ அல்லது செல்வதற்கு சொந்த இடங்களோ இல்லாத முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேரை அகில இந்து மாமன்றம் பொறுப்பேற்று திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.