கொழும்பு பௌத்தலோக்க மாவத்தையிலுள்ள சாக்கடையில் சடலமாக மீட்கப்பட்டுப் பின்னர் மஸ்கெலியா முள்ளுகாமம் தோட்டத்தில் புதைக்கப்பட்ட இரண்டு மலையக சிறுமிகளான சுமதி ,ஜீவராணி ஆகியோரின் சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. மீள் பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் இன்று 27 ஆம் திகதி கண்டி பொலிஸ் சவச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கொழும்பு பௌத்தலோக்க மாவத்தையில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த இந்தச்சிறுமிகள் இருவரும் பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள சாக்கடையில் கடந்த 15 ஆம் திகதி சடலங்களாக மீட்கப்பட்டனர். இந்தச் சடலங்களின் பிரதேச பரிசோதனைக்குப்பின் கடந்த 18 ஆம் திகதி முள்ளுகாமம் தோட்ட மயானத்தில் இந்தச் சிறுமிகளின் சடலங்கள் புதைக்கப்பட்டன.
இந்நிலையில் இவர்களின் மரணம் தொடர்பில் சிறுமிகளின் பெற்றோர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் மனுவொன்றினை சமர்ப்பித்திருந்தனர். இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிரதம நீதவான் சிறுமிகளின் சடலங்களை ஹட்டன் நீதிமன்றத்தின் ஊடாக தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார்.
இதற்கேற்ப இன்ற 27 ஆம் திகதி நண்பகல் வேளையில் சிறுமிகளின் சடலங்கள் ஹட்டன் நீதவான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டன. தோண்டி எடுக்கப்பட்ட சடலங்கள் சிறுமிகளின் பெற்றோர்களாலும் கொழும்பு மலர்ச்சாலை ஒன்றின் ஊழியர்களாலும் அடையாளங் காணப்பட்டு உறுதி செய்யப்பட்டன.
இதன் பின்பு முள்ளுகாமத் தோட்ட லொறியில் ஏற்றப்பட்ட சடலங்கள் கண்டி பொலிஸ் பிரேதசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. சிறுமிகளின் பெற்றோரும் சடலங்களுடன் கண்டிக்குச் சென்றுள்ளனர். சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்ட வேளையில் கடும் மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது. மழையையும் பொருட்படுத்தாமல் பெருந்திரளான தோட்ட மக்கள் அங்கு திரண்டிருந்தனர்.
அத்துடன் கண்டி சட்ட வைத்திய அதிகாரி, ஹட்டன் பொலிஸ் பிரிவு அதிகாரிகள்,பொலிஸ் உத்தியோகத்தர்கள், சட்டத்தரணிகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உட்படப் பலர் வந்திருந்தனர். கண்டிக்குக் கொண்டு செல்லப்பட்ட சடலங்கள் சட்டவைத்திய அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான பிரேத பரிசோதனை நாளை 28 ஆம் திகதி மீண்டும் இடம்பெறவுள்ளது