தென் மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. வேட்பாளர் நியமனப் பத்திரங்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் நேற்று நிறைவடைந்ததன் பின்னர், தேர்தல் நடைபெறும் திகதியை தேர்தல்கள் தலைமையகம் அறிவித்தது.
இந்தத் தேர்தலில் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 1091 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களுள் 2 போனஸ் ஆசனம் அடங்கலாக 55 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
காலி மாவட்டத்தில் 15 கட்சிகளிலும் 4 சுயேச்சைக் குழுக்களிலுமாக 494 வேட்பாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 14 கட்சிகளிலும் மூன்று சுயேச்சைக் குழுக்களிலுமாக 357 வேட்பாளர்களும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 10 கட்சிகளிலும் ஆறு சுயேச்சைகளிலுமாக 240 வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர். இதில் காலி மாவட்டத்தில் 23 உறுப்பினர்களும், மாத்தறை மாவட்டத்தில் 18 உறுப்பினர்களும், அம்பாந்தோட்டையில் 12 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மூன்று மாவட்டங்களிலும் வேட்பாளர் களை நிறுத்தியுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காலி மாத்தறை மாவட்டங்களில் மாத்திரம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
தென் மாகாண சபைத் தேர்தல்களுக் கான வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் கடந்த 21 ஆம் திகதியிலிருந்து நேற்று (28) நண்பகல் வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன. பிற்பகல் ஒரு மணி வரை ஆட்சேபம் தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. எனினும் எந்தவொரு வேட்புமனுவும் நிராகரிக்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டது.