ஆஃப்கானிய அதிபர் தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், ஏனைய வேட்பாளர்களைவிட அதிபர் ஹமீத் கர்சாய் அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிப்பதாகத் தெரியவந்துள்ளது.
45 சதவீத வாக்குகளை அதிபர் கர்சாய் பெற்றிருக்கிறார் என்றும் அடுத்த இடத்தில் உள்ள முக்கியப் போட்டியாளர் அப்துல்லா அப்துல்லா 31 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார் என்றும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விபரங்கள் தெரிவிக்கின்றன. மிகப் பெரிய அளவிலும் அரசு நிறுவனங்களின் துணையுடனும் தேர்தல் முறைகேடுகள் நடந்திருப்பதாக அப்துல்லா மீண்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
கர்சாய்க்கு வாக்களிக்கின்ற போலியான வாக்குச்சீட்டுகள் லட்சக்கணக்கானவை வாக்குப்பெட்டிகளில் திணிக்கப்பட்டிருந்தன என்று அவர் கூறியுள்ளார். வாக்குப்பதிவு நியாயமாக நடந்திருந்தால், இந்நேரம் தான் முன்னணி வகிப்பாரென அவர் கூறியுள்ளார்.