தமிழ், சிங்களம், முஸ்லிம் என இனவாத அரசியல் நமது நாட்டிற்கு உகந்ததல்ல. குறுகிய தீர்மானங்களை தவிர்த்து நாட்டை முன்னேற் றக்கூடிய சிறந்த தீர்மானங்களை சிந்தித்து மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வாழ்த்தும் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டமும் நேற்று அக்கரைப்பற்று பொது விளையாட்டரங்கில் விமரிசையாக நடைபெற்றன.
கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து சகல இன மதங்களையும் சார்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதான உரைநிகழ்த்தியதுடன் தேசிய காங்கிரசின் தலைவர் ஏ. எல். எம். அதாவுல்லா சிறப்புரை நிகழ்த்தினர். மாநாட்டின் இறுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேசிய காங்கிரஸ் சார்பில் அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா விருது வழங்கி கெளரவித்தார். இந்த மாநாட்டில் ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:
2005 ஆம் ஆண்டு நான் அக்கரைப்பற்றிற்கு வருகை தந்த போது இங்கு வீசிய காற்றைப் பாரமானதாக உணர்ந்தேன். இன்று அது இலகுவாகி சுதந்திரக் காற்று வீசுவதைக் காண முடிகிறது. இந்த நாட்டை உடன்படிக்கை மூலம் துண்டாடிய யுகம் மாறி இந்த நாட்டை எம்மால் மீள ஐக்கியப்படுத்த முடிந்துள்ளது.
தேசிய காங்கிரஸின் மாநாட்டிற்கு இன்று வருகைதந்து இங்குள்ள மக்களை சந்திப்பதில் பெருமையும் மகிழ்ச்சியுமடைகின்றேன். இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் எமது சகோதரர்கள் போல் வாழ்கின்றனர். நாம் எல்லோரும் ஒரு தாயின் மக்கள் எம்மத்தியில் எந்தவித பேதமும் இருக்க முடியாது.
முப்பது வருடகால பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு இன்று நாட்டில் சந்தேகமின்றி அச்சமின்றி சகலரும் வாழும் நிலை உருவாகியுள்ளது. காத்தான்குடி பள்ளிவாசலில் இடம்பெற்றது போன்ற துர்ப்பாக்கிய சம்பவங்கள் இனி எங்கும் நடக்காது.
கிழக்கில் வயலுக்குத் தொழிலுக்குப் போகின்றவர்களும், பாடசாலைக்குப் போகின்ற மாணவர்களும் கூட அச்சத்துடனும் பயத்துடனும் வாழ்ந்த காலம் இருந்தது. இன்று அந்நிலை இல்லை.
தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற இனவாத அரசியல் இந்த நாட்டுக்கு உகந்த தல்ல. இனி இந்த நாட்டில் சிறுபான்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த தேசத்தின் மீது அன்பு செலுத்தும் மக்கள் இந்த நாட்டின் பிள்ளைகளே. நான் முதல் இரண்டாவது, மூன்றாவது என முழுமையாக நேசிப்பது இந்த நாட்டைத்தான். நாட்டு மக்களும் அப்படியே நாட்டை நேசிக்க வேண்டும். எந்தத் தீர்மானம் எடுத்தாலும் அது குறுகிய தீர்மானமாக இருக்கக் கூடாது. அத்தகைய எண்ணம் வேண்டாம்.
அமைச்சர் அதாவுல்லா ஒரு சிறந்த தலைவர். உங்கள் தலைவர் அவர் முழு நாட்டிற்கும் சேவை செய்யும் திறன் படைத்த செயல்வீரர். கிழக்கின் உதயம் மூலம் இப்பகுதி அபிவிருத்தி காணப்படுகிறது. உங்கள் எதிர்காலம் ஒளிமயமாவது நிச்சயம். இந்தவேளையில் நாம் மறைந்த தலைவர் எம். எச். எம். அஷ்ரப்பை நினைவு கூருவது சிறந்தது.
முஸ்லிம் மக்கள் என்னிடம் கேட்டதையெல்லாம் நான் நிறைவேற்றியுள்ளேன். இன்று எமது அரசில் உள்ள சகல முஸ்லிம்களும் அமைச்சர்கள் என்பதை மறக்கக் கூடாது. கிழக்கில் தனியான மாகாண சபையொன்று இப்போது இயங்குகிறது. ஒலுவில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இது உங்களுக்கான பெரும் வரப்பிரசாதம் ஆகும்.
நான் முஸ்லிம்களின் மத வழிபாட்டுக்குத் தடைபோடுவதாக பலர் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதனை நீங்கள் நம்பவேண்டாம். இலங்கை வானொலியில் ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் ‘பாங்கு’ சொல்வதற்கு வழிவகை செய்தவன் நானே என்பதை மறந்துவிட வேண்டாம். நான் உங்கள் உற்றதோழன் நீங்கள் என்னை நம்பலாம்.
இந்த மாகாணம் 30 வருடங்களாக பாதிக்கப்பட்டு இன்று முழு மாகாணத்திலும் அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன. உங்கள் வெற்றி உங்கள் பிள்ளைகளின் வெற்றியும் நாட்டின் வெற்றியுமாகும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த அழகிய தேசத்தை ஒரேகொடியின் கீழ் கட்டியெழுப்புவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மாயா
அதை முதலில் செய்யுங்கள். கொடி கட்ட நாங்களும் வருவோம். அந்த கொடி கறுப்பா , வெள்ளையா என்பதை பின்னர் தீர்மானிக்கலாம்?
சாந்தன்
அப்பப்பா….எப்படா இந்த தினகரன், வீரகேசரியில் வரும் பொங்கல், தீபாவளி, கிரிஸ்மஸ், ரம்ழான் பிரதமரின் புல்லரிக்கவைக்கும் ஆசிச்செய்தி ரைப் அலம்பல் தீருமோ…..
chandran.raja
மாண்பு மிகு ஜனாதிபதி அவர்களுக்கு!
எல்லா அரசியல் சம்பந்தபட்ட முடிவுகளையும் உடனடியாக எடுக்கமுடியாத நிலமைகளை நாமும் புரிந்துகொள்ளுகிறோம். நீங்கள் எப்படி நாட்டை நேசிக்கிறீர்களோ அப்படியே நாமும் நேசிக்கிறோம். நாடு என்பது நாட்டில் வாழும் மக்கள் தான். நல்லதெளிந்த மனம் உள்ளவர்களுக்கு வேறுபட்டகருத்து இருக்க முடியாது.
நாட்டில் நீண்ட காலமாக நடந்து முடிந்த யுத்ததிற்கு யாரும் நாட்டுமக்களை குறைகூற முடியாது. கடந்த கால அரசியல்வாதிகளே முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும் இந்த அரசியல்வாதிகள் ஒரு இனத்தில்லிருந்து வந்தவர்கள் அல்ல.சிங்கள தமிழ்- தமிழ்முஸ்லீம் சிங்களமுஸ்லீம் மக்களிடையே சரிக்குசரி நிறையவே இருக்கிறார்கள். இன்றையதேவை அவர்களை தேடிக்கண்டு பிடிப்பதல்ல அவர்கள் விட்ட தவறுகளை
நாமும் விடாதிருப்பதேயாகும்.
நாட்டில்வாழும் மக்களைப்பற்றி கருசரணையில்லாதவன் நாட்டைப்பற்றி கதைக்க அருகதையில்லாதவனே! நான் இங்கு என்னத்தை கூறவருகிறேன் என்றால் வன்னியில்லிருந்து முன்றுலட்சம் மக்களை மீட்டுக்கொண்டு வந்த நீங்களும் இராணுவவீரர்களும் நாட்டுமக்கள் கெளரத்துடன் நடத்தப்படுவார்கள். சரித்திரத்திலையும் குறித்துகொள்ளப் படுவார்கள். சிறையில் இருந்து மீண்டுவந்தவர்கள் இன்னொரு சிறையைக்கண்டது தான் துன்பநிகழ்வு. அதில்லிருப்பவர்கள் அனைவரும் புலிகள் எனகருதிவீர்களேயானால் அதைவிட முட்டாள்தனம் வேறுஎதுவும் இல்லை.
கோடிக்கணக்காண பணத்தை செலவழித்து நாளாந்தம் யுத்தத்தை நடத்திய நீங்கள் முகாம்களில் இருக்கும் குடும்பம் நாளாந்தம் இருபதுலிட்டர் தண்ணீர் தான் பெறமுடியும் என்றால் நாம் என்ன சுனையில்லாத பாலைவனத்திலா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?. இந்த தண்ணீர் அளவுகோலை வைத்தே அவர்களின் மற்றைய வசதிகளை கணக்கிடமுடியும்.
பயங்கரவாதம் முடிவுக்கு மூன்றுமாதமும் கிழமையும் கடந்தவிட்டது. அவர்கள் விரும்புவதெல்லாம் தமது குடிமனைகளுக்கு திரும்பிச்செல்வதையே! அதையே அவர்கள் உங்களிடம் எதிர்பார்பது.நாட்டை செழிப்புநிலையை அடைவது இவர்கள்ளிடம்மிருந்தே ஆரம்பிக்கவேண்டும் என்பது யாரும் சொல்லித்தெரியவேண்டியதல்ல.
மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்களே! கற்பனையாக ஒருகதை சொல்லுகிறேன். எனக்கு அரசியல் அதிகாரம் கிடைக்குமென்றால் ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் கட்டாயம் ஒருமாதத்தில் ஒருகிழமை முகாமில்தங்கி வாழ வேண்டுமென்று உடனடிச்சட்டம் கொண்டுவருவேன். நன்றி.
நண்பன்
//மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்களே! கற்பனையாக ஒருகதை சொல்லுகிறேன். எனக்கு அரசியல் அதிகாரம் கிடைக்குமென்றால் ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் கட்டாயம் ஒருமாதத்தில் ஒருகிழமை முகாமில்தங்கி வாழ வேண்டுமென்று உடனடிச்சட்டம் கொண்டுவருவேன்.- chandran.raja //
ஒரு நாள் (24 மணி நேரம்) முழுமையாக கழித்தாலே அந்த இன்பத்தையோ, துன்பத்தையோ உணரலாம். தார்மீக யுத்தம், எம் கண்களுக்கு அதார்மீக யுத்தமாக தொடரக் கூடாது. மக்களை வெளியேற்றுவதோடு நின்று விடாமல், அவர்களுக்கு வாழ்வதாரமும், நிவாரணமும் குறைந்தது 6 மாதங்களுக்காவது அளிக்கப்பட வேண்டும்.
இதற்காக இலங்கை வாழ் மக்களின் ஊதியத்தில் அரை நாள் ஊதியத்தை கேட்டாலே தருவார்கள். அது இந்த 3 லட்சம் மக்கள் மனங்களை மாற்ற போதுமானது. மேடைப் பேச்சுகளை விட, அனைவரும் எதிர்பார்ப்பது அதை நடைமுறைப்படுத்தும் நாட்களையே. கெளரவமானவர்கள் காதுகளுக்கு கேட்டால் போதும்.
palli
சந்திரா உமது பின்னோட்டத்துக்கு என் தாழ்மயான நன்றிகள் அல்ல வணக்கங்கள்;
மேலே எழுத முடியவில்லை; தொடர்க உங்கள் அறிவாற்றலை;
பார்த்திபன்
இன்று முகாங்களில் வாடும் மக்கள் இலங்கை அரசு தம்மைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் தான் வந்து சரணடைந்தவர்கள். அந்த நம்பிக்கை வீண் போகாமல் காப்பாற்ற வேண்டியது இலங்கை அரசின் கடமை. கடந்த கால ஏனைய அரசுகள் மற்றும் விடுதலைப்புலிகள் விட்ட அதே தவறை இந்த அரசும் தொடர்ந்தால் நாட்டின் இனப்பிரைச்சினை என்பது என்றும் தொடர்கதையாக தொடரந்து மேன்மேலும் நாடு சீரழியவே வகைசெய்யும். எனவே ஜனாதிபதி அவர்கள் தனது நல்லெண்ணணத்தை வெறும் பேச்சோடு நிறுத்திவிடாமல் செயற்பாடுகளாகக் காட்டி அனைத்து மக்களின் மனங்களையும் வெல்ல வேண்டும். இதைத்தான் தனது தாய் நாட்டை நேசிக்கும் ஒவ்வொரு குடிமகனும் விரும்புகின்றான்.