சர்வதேச எழுத்தறிவு தினம் – International Literacy Day – புன்னியாமீன்

international-literacy-day.jpgசர்வதேச எழுத்தறிவு தினம்   International Literacy Day ஆண்டு தோறும் செப்டம்பர் 8ம் திகதியன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அடிப்படை எழுத்தறிவை கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், எழுத்தறிவைப் பெற்றுக்கொள்ள முடியாமற் போன வளர்ந்தோருக்கு முறைசாராக் கல்வித் திட்டத்தின் மூலம் எழுத்தறிவைப் போதிக்கும் நோக்கத்துடனும் ஆண்டுதோறும் எழுத்தறிவு தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் திகதி தெஹ்ரான் நகரில் உலகளாவிய கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இம் மகாநாட்டில் உலகளாவிய ரீதியில் எழுத்தறிவின்மையால் ஏற்படக் கூடிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமுகமாக பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 8ஆம் திகதியை  சர்வதேச எழுத்தறிவு நாளாக அனுசரிக்க வேண்டும் என்பது முக்கியத் தீர்மானங்களில் ஒன்றாகும்.

இதனடிப்படையில் 1965 நவம்பர் 17, திகதி யுனெஸ்கோ நிறுவனம் கூடியபோது  செப்டம்பர் 8ஆம் திகதியை  சர்வதேச எழுத்தறிவு தினமாகப் பிரகடனம் செய்தது. இத்தினம் 1966ம் ஆண்டு முதல் கொண்டாடப்படுக்கிறது. தனி மனிதர்களுக்கும் பல்வேறு வகுப்பினருக்கும் சமுதாயங்களுக்கும் எழுத்தறிவு எவ்வளவு முதமையானது என்பதை எடுத்துரைப்பதே இந்த நாளின் குறிக்கோள் ஆகும்.

எந்த மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என ஐநாவின் சாசனம் எழுத்தறிவின்மையை வரையறுக்கிறது. பொதுவாக எழுத்தறிவு ஒரு மொழியை வாசிக்க, எழுத, பேச, கேட்டுப் புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றலைக் குறிக்கும். இன்று எழுத்தறிவு பல்வகைப்பட்ட தொடர்பாடல் முறைகளைப் பின்பற்றி ஒரு எழுத்தறிவுள்ள சமூகத்துடன் இணையாக பங்களிக்க கூடிய ஆற்றலைக் குறிக்கின்றது. இதில் கணித்தலும், கணினி பயன்பாடும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் எழுத்தறிவைப் பின்வருமாறு வரையறை செய்கின்றது: “எழுத்தறிவு என்பது, பல்வேறு சூழ்நிலைகளுடன் தொடர்புடைய அச்சிடப்பட்ட அல்லது எழுதப்பட்டவற்றைப் பயன்படுத்தி அடையாளம் காண்பதற்கும், புரிந்து கொள்வதற்கும், விளக்குவதற்கும், ஆக்குவதற்கும், தொடர்பு கொள்வதற்கும், கணிப்பதற்குமான திறனைக் குறிக்கும். எழுத்தறிவு,  ஒரு தனியாளுக்கு தன்னுடைய இலக்கை அடைவதற்கும், தனது அறிவையும், தகுதியையும் வளர்ப்பதற்கும், பரந்த சமுதாயத்தில் முழுமையாகப் பங்குபற்றுவதற்குமான ஆற்றலைப் பெறுவதற்குரிய தொடர்ச்சியான கல்வியைப் பெறுவதோடு தொடர்புடையது. “தற்காலத்தில் எழுத்தறிவுப் பிரச்சினை என்பது கல்வியால் தீர்க்கப்படவேண்டிய சமூகப் பிரச்சினையாக நோக்கப்படுகின்றது.

உலகில் சுமார் 776 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வயது வந்தவர்களில் 5 பேரில் ஒருவருக்கு எழுதப்படிக்கத்தெரியாது. இவர்களில் மூன்றில் இரு பகுதியினர் பெண்கள். அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறார்கள் பாடசாலை வசதிகள் அற்ற நிலையில் உள்ளார்கள்.படிப்பை பாதியில் நிறுத்திவிட்டவர்கள், அரைகுறையாக பள்ளிகள் செல்பவர்கள் ஏராளம். இதனால் இவர்கள் அடிப்படைக் கல்வியான எழுத, வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.
உலகமயமாக்கத்தில் விழிப்புடன் செயற்பட்டு வரும் காலத்தில் எழுத்தறிவின்மை என்பது வெட்கப்படக்கூடிய  விளைவு தான் என்றால் பிழையாகாது. அதி நவீன தொழில்நுட்ப திறனும் கணிணிப்பயன்பாடும் இன்றைய உலகை ஆக்கிரமித்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் எந்தவொரு நாடும் தனது மக்கள் எழுத்தறிவில் பின்தள்ளப்பட்டுள்ளனர் என்று கூற வெட்கப்பட்டே ஆக வேண்டும்.

இவ்வாறாக எழுத்தறிவைப் பெற்றுக் கொள்ள முடியாமைக்கான காரணங்களாக உள்ள சமூக நிலைகள் பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டும்.வறுமை, போஷாக்கின்மை,  அரசியல் நெருக்கடிகள்,  கலாசார பாகுபாடு,  அடிமைப்படுத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் எழுத்தறிவின்மை உலக நாடுகளில் இன்றும் காணப்படுகின்றது என்பதை ஏற்றாக வேண்டியுள்ளகல்வியறிவு அல்லது எழுத்தறிவின் முக்கியத்துவம் தான் என்ன? தேசிய ரீதியிலும், சர்வதேசரீதியாக இது தொடர்பான செயற்றிட்டங்கள் எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன? இவற்றை கொண்டு செல்வது யார் என்ற வினாக்களுக்கு நாம் விடை காணவேண்டியதாக உள்ளோம்.

எழுத்தறிவு என்பது மனித உரிமைகளுடன் தொடர்புபட்ட ஒரு அம்சம். தனிநபர் ஆளுமையிலிருந்து சமூக மனித வள அபிவிருத்தி மற்றும் கல்வி செயற்பாடுகள் அதற்கான சந்தர்ப்பங்கள் என்பன எழுத்தறிவிலேயே தங்கியுள்ளன. எழுத்தறிவின்மை எனும் போது எந்த ஒரு மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியாமல் இருத்தலாகும் என ஐக்கிய நாடுகள் சபை எழுத்தறிவின்மையை தனது சாசனத்தில் வரையறை செய்துள்ளது.

எழுத்தறிவின் பயனை அறிந்த பெற்றோர் தான் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புகின்றனர். எழுத்தறிவு பெற்றோர் கல்வி வாய்ப்புக்களை இலகுவாக பெற்றுக்கொள்கின்றனர், மேலும் ஒரு கல்வி கற்ற சமுதாயமானது அபிவிருத்தி இலக்குகளை இனங்கண்டு சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டது. ஆனால் உலகில் இன்று பல நாடுகள் பல பிரச்சினைகள் காரணமாக எழுத்தறிவை பெறமுடியாதுள்ளனர்.

வறுமையை ஒழித்தல்,  சிறுவர் இறப்பு வீதத்தை குறைத்தல்,  சனத்தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்தல்,  பால் சமத்துவத்தை கட்டியெழுப்பல்,  முறையான அபிவிருத்தியை உறுதி செய்தல் சமாதானம் மற்றும் ஜனநாயகம் போன்ற பல விடயங்களின் அபிவிருத்தியையும் எழுத்தறிவு அபிவிருத்தியுடன் இணைத்து நோக்க வேண்டியுள்ளது. எழுத்தறிவு என்பது கல்விக்கு எந்தளவில் முக்கியமான ஒரு மையப்புள்ளியாக விளங்குகிறது என்பதற்கு பல நல்ல வழுவான உதாரணங்களைக்கூறலாம். ஒரு சிறந்த அடிப்படை கல்வியானது மக்களுக்கு வாழ்க்கைக்கு எந்தளவிற்கு முக்கியமோ அதேயளவிற்கு ஏனைய பிற தேவைகளுக்கும் காரணகர்த்தாவாக இருக்கின்றன.

யுனெஸ்கோவின் “அனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கை (2006)” அறிக்கையின்படி தெற்கு மற்றும் மேற்கு ஆசியாப் பகுதிகளிலேயே மிகக் குறைந்த வீதமானோர் (வயது வந்தோரில்) (58.6 %) படிப்பறிவில்லாமல் உள்ளனர். அதற்கு அடுத்த படியாக உள்ள பகுதிகள் ஆபிரிக்கா (59.7 %), அரபு நாடுகள் (62.7 %). எழுத்தறிவின்மைக்கும் நாடுகளின் வறுமைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

2009 சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு  ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பான்-கி-மூன்  வெளியிட்டுள்ள அறிக்கையில், எழுதுவதும், படிப்பதும் மட்டுமே எழுத்தறிவு பெற்றதாக ஆகிவிடாது. வாய்ப்புகளைக் கண்டறிவதுடன், வளர்ச்சியை மையமாகக் கொண்டதாகவும் அந்தக் கல்வியறிவு இருக்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் அனைத்தும் சர்வதேச அளவில் அனைவரும் எழுத்தறிவு பெறுவதை இலக்காகக் கொண்டு அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்தல் அவசியம். இதற்கு உறுதுணையாக தேவையான உதவிகளை அளிப்பதோடு உண்மையான வளர்ச்சிக்குத் தேவையான வளங்களை உருவாக்க வேண்டும்.
உலகில் மிகுந்த அளவில் வளம் உள்ளது. இந்த உலகில் வாழ கல்வியும், அறிவும்தான் பாஸ்போர்ட் போன்றவை.

ஆனால் உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 77.60 கோடி பேர், பெரும்பாலான பெண்கள் அடிப்படை வசதிகளின்றி, எழுத்தறிவு இல்லாதவர்களாக வாழ்கின்றனர். அத்துடன் 7.5 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது மிகவும் கவலையளிக்கும் விடயமாகும். பாதியிலேயே பள்ளிக் கல்வியை கைவிடும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது வருத்தமளிக்கிறது.

குறைந்தபட்ச கல்வி மூலம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை பிரபல கல்வியாளர் டாக்டர் லாலகே குறிப்பிட்டுள்ளார். அவரது கூற்றை அனைவரும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இதை மனதில் கொண்டு இந்த ஆண்டு கல்வியறிவு இயக்கத்தை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் என்று பான்-கி-மூன் வலியுறுத்தியிருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின்  2000ம் ஆண்டுக்கான மனித அபிவிருத்தி அறிக்கையில் உலகில் 90 மில்லியன் குழந்தைகளுக்கு எந்தவிதமான கல்வியும் ஆரம்பக் கல்வியும் மறுக்கப்பட்டுள்ளது. 232 மில்லியன் குழந்தைகளுக்கு குறைந்த பட்சம் இரண்டாம் நிலைக் கல்வியைக்கூட பெறமுடியாத நிலை உள்ளது.

கிழக்கு ஐரோப்பாவிலும், முன்னைய சோவியத் யூனியன் நாடுகளிலும் பாடசாலைக் கல்வி 1989ல் இருந்ததை விட வீழ்ச்சி கண்டுள்ளது. எழுத்தறிவின்மை மீண்டும் தலைதூக்கியுள்ளது. இந்தியாவில் ஆரம்ப கல்வி வழங்கப்பட்டாலும், 1996ம் ஆண்டு வட மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 60 வீதமான பாடசாலைகள் ஒழுகும் கூரைகளைக் கொண்டுள்ளன. 89 வீதமான பாடசாலைகளில் மலசலகூட வசதி இல்லை 59 வீதமான பாடசாலைகளில் குடிநீர் இல்லை.
1991ல் இந்தியாவில் 7 வயதிற்கு கூடிய மக்களில் 52 சதவீதமானவர்களுக்கு எழுத்தறிவு இருந்தது.

இதில் இந்திய பிராந்திய அரசுகளில் கிராமிய பெண்களில் 16 சதவீதமானவர்களுக்கு எழுத்தறிவு உள்ளதாகவும் அறிக்கை குறிப்பிடுகின்றது. ராஜஸ்தான் மாநிலத்தில் இது 4 சதவீதமாகும். உலக ரீதியாக 100 கோடிக்கு அதிகமானோர் எழுத்தறிவு இல்லாதவர்களாகும். கல்வியறிவுக் குறைபாட்டாலும் பரந்த எழுத்தறிவின்மையாலும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் 250 மில்லியன் சிறுவர்கள் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதில் 140 மில்லியன் சிறுவர்களும் 110 மில்லியன் சிறுமியர்களாகும். 18 வயதிற்கு குறைந்த 1.2 மில்லியன் பெண்களும் சிறுமியர்களும் வருடாந்தம் விபச்சாரத்தில் ஈடுபடத் தள்ளப்படுகின்றனர் என்றும் கூறப்பட்டிருந்தது.

உலக நாடுகளின் எழுத்தறிவு விகிதங்கள்

1998 ஆம் ஆண்டு ஐ.நாவின் கணிப்பீட்டின் படி உலக சனத்தொகையில் 20வீதமானோர் எழுத்தறிவற்றவர்களாக இருந்தனர்.இந்தத்தொகையினர் எந்த மொழியிலும் அமைந்த மிக இலகுவான வாக்கியங்களை எழுதவோ வாசிக்கவோ முடியாதவர்கள். எனினும் அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை முகவர் அமைப்பின் (C.I.A) 2007 அறிக்கையின் படி தற்போது உலக சனத்தொகையின் எழுத்தறிவு வீதம் 82 ஆகும்.

மனித அபிவிருத்தி உள்ளடக்க 2007/2008 புள்ளி விபரப்படி   (Human Development Index 2008 Statistical Update Human Development Report 2007/2008, p. 226 Human Development Report 2007/2008) உலகில் 100 சதவீத எழுத்தறிவை பெற்றுள்ள நாடு என்ற பெருமையை ஜோர்ஜியா பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் முறையே எஸ்ட்டோனியா 99.8,   லாட்வியா 99.8,  கியூபா 99.8  ஆகிய நாடுகள் உள்ளன. 99 வீத எழுத்தறிவை உள்ள நாடுகளில் மேற்படி பட்டியலில் 49 நாடுகள் காட்டப்பட்டுள்ளன. 98 வீத எழுத்தறிவை உள்ள 8 நாடுகளும்,  97 வீத எழுத்தறிவை உள்ள 10 நாடுகளும்,  96 வீத எழுத்தறிவை உள்ள 6 நாடுகளும்,  95 வீத எழுத்தறிவை உள்ள 2 நாடுகளும்,  94 வீத எழுத்தறிவை உள்ள 06 நாடுகளும்,  93 வீத எழுத்தறிவை உள்ள 08 நாடுகளும், 92 வீத எழுத்தறிவை உள்ள 05 நாடுகளும்,  91 வீத எழுத்தறிவை உள்ள 05நாடுகளும்,  90 வீத எழுத்தறிவை உள்ள 04 நாடுகளும் காட்டப்பட்டுள்ளன.

இப்பட்டியலின் படி இலங்கை இப்பட்டியலில் 99ஆவது இடத்தைப்பிடித்துள்ளது. எழுத்தறிவு விகிதம் 90.8 ஆகும். இலங்கையில் பெருந்தோட்டப்பகுகளில் எழுத்தறிவு விகிதம் குறைவு காரணமாக தேசிய ரீதியில் இவ்விகிதம் குறைந்து காணப்படுகிறது.அதே நேரம் தெற்காசியாவுடன் ஒப்பிடும் போது இலங்கை முதலிடத்தில் உள்ளது.

இப்பட்டியலில் இந்தியாவானது 159 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. எழுத்தறிவு விகிதம் 65.2 ஆகும். இந்தியாவிலுள்ள மக்கள் தொகை அதிகரிப்பே அது எழுத்தறிவு விகிதத்தில் பின்தள்ளப்பட்டுள்ளதற்குக் காரணம் என கூறப்படுகிறது. இப்பட்டியலில் ஆப்கானிஸ்தான் (28.0) 189 ஆவது இடத்திலும் பர்க்கீனா ஃவாசோ  (26.0) 190 ஆவது இடத்திலும்,  சாட் (25.7) 191 ஆவது இடத்திலும் மாலி (22.9) 192 ஆவது இடத்திலும் காணப்படுகின்றன.

இலங்கையும் எழுத்தறிவு வீதமும்

எழுத்தறிவை பொறுத்தவரை தென்னாசியாவில் இலங்கை ஒரு முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது.இலங்கையில் 5 தொடக்கம் 14வயது வரையான வயதெல்லை கட்டாயக் கல்விக்கான வயதெல்லையாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையானது யுனெஸ்கோவின் கல்வி சார் அபிவிருத்தித் திட்டங்களில் இணைந்து செயற்படுவதற்காக 1949 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி யுனெஸ்கோ அமைப்பில் இணைந்து கொண்டது.

 இன்று இலங்கையின் எழுத்தறிவு வீதமானது நகரப்புறங்களிலேயே முன்னேற்றங்கண்டுள்ளது எனலாம்.

சுதந்திரம் கிடைத்து 61வருடங்களுக்குப் பிறகும் கூட பெருந்தோட்டப்பகுதிகளில் அடிப்படை கல்வி வசதியை பெறத்தவறியுள்ளவர்கள் எத்தனையோ பேர்.

 இலங்கை குடிசன மதிப்பீட்டு புள்ளி விபர திணைக்களத்தின் அறிக்கையின் படி இலங்கையின் நகர்ப்புறங்களில் எழுத்தறிவு வீதம் 95 ஆகவும் கிராமப்புறங்களில் 93 வீதமாகவும் பெருந்தோட்டப்பகுதிகளில் 76 வீதமாகவும் உள்ளது. பால் வேறுபாட்டில் ஆண்கள் 94 சதவீத கல்வியறிவையும் பெண்கள் 91.1வீத கல்வியறிவையும் பெற்றுள்ளனர்.

யுனெஸ்கோவின் அபிவிருத்தித்திட்டங்களில் எழுத்தறிவித்தல் ஒரு முக்கிய இடத்தைப்பிடிக்கின்றது. ஒவ்வொரு நாடுகளிலும் இத்திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றமை முக்கிய அம்சம். இதில் முதியோர்களுக்கு கல்வி போதித்தல் பிரதான இடத்தை வகிக்கின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • anpumaaran
    anpumaaran

    வாசிப்புப் பழக்கமானது மனிதனைப் பூரணமானவனாக்குகிறது. பாடசாலைக் கல்வி மூலம் பெற்றுக்கொள்கின்ற அறிவை விட ஒருவன் வாசிப்புப் பழக்கத்தின் பயனாக கூடுதலான அறிவைப் பெற்றுக் கொள்ள முடியுமென கல்வியியலாளர்கள் கூறுகின்றனர்.

    எனவேதான் கற்பித்தல் செயற்பாட்டைப் பார்க்கிலும் தேடல் மூலமான அறிவைப் பெற்றுக்கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென விதந்துரைக்கப்பட்டு வருகிறது.

    அறிவு விருத்திக்கான பிரதான மார்க்கம் தேடலாக அமைவதனால் வாசிப்புப் பழக்கத்துக்குரிய அடிப்படைத் தகைமையாக எழுத்தறிவே உள்ளது.

    எழுத்தறிவு எனும் போது இங்கு குறிப்பிடப்படுவது மொழித்தேர்ச்சி ஆகும். மொழியில் நன்கு தேர்ச்சி பெற்றுள்ள ஒருவர் வாசிப்புப் பழக்கத்தின் ஊடாக பல்வேறு துறைகளிலும் அறிவைப் பெருக்கிக் கொள்ள வழியேற்படுகிறது.

    கல்வி, தொழில்நுட்பம், கைத்தொழில் போன்ற பல்வேறு துறைகளும் உலகில் இப்போது துரித கதியில் வளர்ச்சி பெற்று வருவதனால் சுயதொழில் மூலமான பொருளாதார முன்னேற்றத்துக்கும் வாசிப்பு ஊடான அறிவுத்தேடல் அவசியமாகியுள்ளது.

    மொழித்தேர்ச்சி விடயத்தில் எமது மக்களிடையே பெரும் குறையொன்று காணப்படுகிறது. தமிழ் பேசும் மக்கள் சிங்கள மொழி யைக் கற்பதிலோ சிங்கள மக்கள் தமிழ் மொழியைக் கற்பதிலோ ஆர்வம் காட்டுவதில்லை. தமிழும் சிங்களமும் இலங்கையின் பிரதான இரு மொழிகளாக விளங்குகின்றன. மற்றைய மொழியில் தேர்ச்சியின்மை காரணமாக இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வுக்கும் சந்தர்ப்பமில்லாமல் போகிறது.

    Reply
  • சீலன்
    சீலன்

    தாய்மொழியைக் கற்பதில் மாத்திரமே எமது மாணவர்களில் அநேகமானோர் கரிசனை காட்டுகின்றனர்.

    தமிழ் பேசும் மக்கள் சிங்கள மொழியைக் கற்பதிலோ சிங்கள மக்கள் தமிழ் மொழியைக் கற்பதிலோ ஆர்வம் காட்டுவதில்லை. தமிழும் சிங்களமும் இலங்கையின் பிரதான இரு மொழிகளாக விளங்குகின்றன. மற்றைய மொழியில் தேர்ச்சியின்மை காரணமாக இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வுக்கும் சந்தர்ப்பமில்லாமல் போகிறது. இதேசமயம் சர்வதேச மொழியாகக் கருதப்படும் ஆங்கிலத்தைக் கற்பதிலும் எமது மாணவர்கள் போதிய ஆர்வம் காட்டுவதில்லையென்பது கல்விச் சமூகம் கூறுகின்ற குற்றச்சாட்டு ஆகும். ஆங்கிலக் கல்விக் குறைபாடு காரணமாக எமது மாணவர்களின் உயர் கல்வித் தரத்திலும் குறைபாடு ஏற்படுகிறது.

    இவைகளைக் கருத்தில் கொள்ளுமிடத்து எமது மாணவர்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பூரணமான தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் தற்போது உணரப்பட்டுள்ளது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சீலன்,
    நீங்கள் சொல்லும் இதே விடயத்தை நானும் பல சந்திப்புகளில் வலியுறுத்தியிருக்கின்றேன். ஐரோப்பாவில் பல நாடுகளிலுள்ளது போல் இலங்கை அரசும் பாடசாலைகளில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளையும் கட்டாயக் கல்வியாக்க வேண்டும். அப்போது எல்லா மக்களும் எல்லா மொழிகளையும் பாவிக்கும் நிலை தானாக உருவாகும். பாடசாலையிலிருந்து கற்றுவரும் போது மற்ற மொழியில் வெறுபபும் ஏற்படாது. இலஙகை அரசு உத்தியோகத்திலுள்ளவர்களுக்கு அடுத்த மொழியைக் கற்றால்த் தான், பதவியுயர்வு என்று வலியுறுத்துவதாலேயே பிரைச்சினைகள் உருவாகின்றது. எனவே மக்கள் பகையுணர்வு கொண்டு வாழாத நிலையை அரசு தான் ஏற்படுத்த வேண்டும்.

    Reply